கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வாகனத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக சுமார் ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்பதால், இந்த நடைமுறையை வடிவமைத்துத் தந்துள்ள தேசிய தகவல் மையத்திடம் புகார் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் பிபிசியிடம் பேசிய கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
ஒரே வாகனத்துக்கு 7 ஆண்டுகளில் சுமார் ரூ.3.5 லட்சம் அபராதம்!
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். (கோப்புப்படம்)
கோவை மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறலுக்காக பல்வேறு இடங்களிலும், போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வருவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஒரு வழிப்பாதையில் வாகனத்தில் வருவது, டூ வீலரில் 3 பேர் பயணிப்பது, அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.
அதேபோன்று ரோந்துப்பணியின் போதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து அபராத சலான்களை அனுப்புகின்றனர்.
இவற்றைத் தவிர்த்து, கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஏஐ கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு, விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு, அந்த வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்திலுள்ள தொடர்பு எண்ணைக் கொண்டு பரிவாஹன் இணையம் மூலமாக அபராதத்துக்கான சலான்களும் அனுப்பப்படுகின்றன.
இவற்றில் ஒரே வாகனங்கள் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதும் அதிகமாக நடக்கிறது. ஆனால் எந்த வாகன ஓட்டிக்கும் இப்போது உடனடி அபராதம் ரொக்கமாக வசூலிக்கப்படுவதில்லை. ஒரு வாகனத்தின் மீது எவ்வளவு விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டாலும் அவையனைத்தும் பரிவாஹன் இணையத்தில் பதிவாகி அந்த வாகனத்தில் ஆர்.சி. புத்தகத்துடன் இணைக்கப்படுகிறது. அந்த வாகனத்தின் ஆர்.சி. புதுப்பிப்பது அல்லது விற்பது போன்றவற்றுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நாடும்போது, அந்த வாகனத்தின் மீதான அனைத்து அபராதங்களையும் செலுத்த வேண்டியது கட்டாயமாகவுள்ளது.
இந்நிலையில்தான், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில், மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறலுக்கான வாகன சோதனை அறிக்கை அனுப்பும் விபரங்களை சமீபத்தில் ஆய்வு செய்துள்ளனர்.
அதில் 5 முறைக்கு மேல், 10 முறைக்கு மேல், 25 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தபோது, கோவை தெற்கு பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பரிவாஹன் இணையத்திலிருந்து 249 போக்குவரத்து அபராதங்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
இந்த அபராதத்தின் மொத்தத்தொகை சுமார் ரூ.3.5 லட்சத்துக்கும் அதிகமாகச் சேர்ந்துள்ளதும், அந்த வாகனம் தற்போது பயன்பாட்டிலேயே இல்லையென்றும் மாநகர காவல்துறையினரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து 2026 மே மாதம் வரையிலுமாக, வெவ்வேறு காலகட்டங்களில் நோ பார்க்கிங்கில் நிறுத்தியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் இயக்கியது, 3 பேர் பயணித்தது, பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களைக் குறிப்பிட்டு, அதற்குரிய அபராதத் தொகையும் இந்த ஒரே டூ வீலருடைய ஆர்.சி. எண்ணில் பதிவாகியுள்ளது.
இதிலிருந்து வெவ்வேறு வாகனங்களில் வெவ்வேறு நபர்கள் செய்த போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம், இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லாத இந்த டூ வீலர் பதிவெண்ணைக் குறிப்பிட்டு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பதிவெண் கொண்ட வாகனத்துக்கு அனுப்பப்பட்ட வாகன சோதனை அறிக்கைகளை பிபிசியும் ஆய்வு செய்தபோது, அவற்றில் இந்த பதிவெண் கொண்ட எண்ணைக் குறிப்பிட்டுள்ள நிலையில் வெவ்வேறு வாகனங்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
கோவையில் மட்டுமின்றி, பல்வேறு நகரங்களிலும் விதிமீறலில் ஈடுபடாத வாகனங்களுக்கு தவறாக இ–சலான் வருவதாகவும் பரவலாக புகார்கள் உள்ளன. இதுபற்றி ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கோவை கீரநத்தத்தைச் சேர்ந்த பாலாஜிக்கு, அதிவேகமாகச் சென்றதாகக் கூறி அவருடைய வாகன எண்ணைக் குறிப்பிட்டு ஒரு அபராத இ சலான் வந்துள்ளது. ஆனால் அந்த நாளில் அவர் அந்தப் பகுதிக்குச் செல்லவும் இல்லை. அவருடைய வாகனமும் அப்பகுதியில் இல்லை என்ற நிலையில், இந்த விதிமீறலுக்கான அபராத சலானைக் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கவும் அதில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர் இ சலானை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது அதில் பதிவேற்றப்பட்டிருந்த ஆதார புகைப்படத்தில் வேறொரு வாகனத்தின் புகைப்படம் இருந்தது.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய பாலாஜி, ”நான் விதிமீறலில் ஈடுபடவில்லை என்பதால் என்னுடைய வாகனத்தை புகைப்படம் எடுத்து, அந்த இ சலான் தவறானது என்று மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்கு விளக்கம் அனுப்பியபின் அது நீக்கப்பட்டது.” என்றார்.
தேசிய தகவல் மையத்திடம் விபரம் கேட்கும் போக்குவரத்து காவல்துறை!
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு 249 முறை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்படியொரு தவறு நடந்திருப்பது பற்றி முன்பே தெரியாது என்றும், இதுபற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த தவறு தொழில்நுட்பக் கோளாறால் நிகழ்ந்ததா அல்லது மனிதத் தவறா என்பதை முதலில் கண்டறிய வேண்டியுள்ளது. ஒரு வேளை அது மனிதத் தவறாக இருந்தால், தவறு தெரிந்தே செய்யப்பட்டதா அல்லது தெரியாமல் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும். முறைகேடு நடந்தது கண்டறியப்படும்பட்சத்தில் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
அபராதம் வசூலிப்பதில் போக்குவரத்து காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதா அல்லது தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட தவறா என்று கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்வரனிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.
இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்ட வாகனம் பயன்பாட்டிலேயே இல்லை என்பது ஆய்வில் தெரியவந்ததாக மகேஸ்வரன் கூறினார்.
பிபிசியிடம் பேசிய அவர், ”தேசிய தகவல் மையம்தான் இதற்கான மென்பொருளைத் தயாரித்துள்ளது. போக்குவரத்து காவல்துறையும், வட்டாரப் போக்குவரத்துத் துறையும் ஒரே மாதிரியான டிவைஸ்களைத்தான் பயன்படுத்துகிறோம். அதில் செலுத்தப்படும் அனைத்து அபராதங்களும் எஸ்பிஐயிலுள்ள போக்குவரத்து ஆணையர் பெயரிலான அரசு வங்கிக்கணக்கில் சேர்கிறது. இதில் பண முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.” என்றார்
”நாங்கள் அந்த சலான்களை ஆய்வு செய்தபோது, பல அறிக்கைகளில் லாரி, கார் படம் இருக்கிறது. ஆனால் விதிமீறலில் ஹெல்மெட் இல்லை, 3 பேர் பயணித்தது என்று காட்டுகிறது. அதனால் இவ்வளவு அப்பட்டமாக யாரும் தவறு செய்வதற்கு வாய்ப்பேயில்லை. அதில் நிறைய தகவல்களை போக்குவரத்து போலீசார்தான் பதிவு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் அதில் தவறுகள் நேரலாம். ஆனால் 7 ஆண்டுகளாக ஒரே எண்ணைக் கொண்ட வாகனத்துக்கு மீண்டும் மீண்டும் அபராதம் சென்றுள்ளதுதான் குழப்பமாகவுள்ளது. ஆனால் அந்த வண்டிக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஒரு ரூபாய் கூட இதுவரை செலுத்தப்படவேயில்லை.” என்றார் அவர்.
இப்போது போக்குவரத்து விதிமீறலுக்கு நேரடியாக யாரும் பணம் வசூலிப்பதில்லை என்று கூறிய துணை ஆணையர் மகேஸ்வரன், எல்லோருமே டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில்தான் அபராதம் செலுத்துகின்றனர், அதற்குரிய ரசீதை வாங்கும்போது தங்களுடைய வாகன எண் இருக்கிறதா, சரியான விதிமீறல் குறிப்பிட்டுள்ளதா என்பதை சரி பார்த்து விடுவதால் தவறான எண்ணைக் குறிப்பிட முடியாது என்றார்.
”இருப்பினும் ஏழாண்டுகளாக ஒரே ஒரு வாகனத்துக்கு இவ்வளவு அபராத சலான்கள் சென்றதற்கு டிவைஸ் அல்லது மென்பொருளில் ஏதாவது தவறு நேர்ந்துள்ளதா? இதேபோல வேறு ஏதாவது வாகனத்துக்கும் அபராதம் கணக்கில் சேர்ந்துள்ளதா? என கேட்டும் இந்த தவறுக்கான காரணத்தை அறிக்கையாகத் தருமாறும் சென்னை தேசிய தகவல் மையத்திடம் புகார் அனுப்பியிருக்கிறோம்.” என்றார் போக்குவரத்து துணை ஆணையர்.
இந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் ஆய்வு செய்தபோது, அந்த வாகனத்திற்கான பதிவு புதுப்பிப்பு காலாவதியான பிறகும் அது புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாக மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது போக்குவரத்துத் துறை பதிவுகளில் அந்த வாகனம் பயன்பாட்டில் இல்லாத வாகனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விளக்கினர்.
தேசிய தகவல் மையத்தின் சென்னை மையத்தில் பிபிசி பேசியபோது, ”அந்த மென்பொருளை தயாரித்துக் கொடுப்பது மட்டுமே தேசிய தகவல் மையத்தின் பணி. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில போக்குவரத்து விதிகளுக்கேற்ப இந்த டிவைசில் மென்பொருள் வடிவமைக்கப்படும். ஆனால் பரிவாஹன் இணையதளத்தை முழுமையாக இயக்குவது, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம்தான். இதுபற்றி காவல்துறையிடமிருந்து முறையான கடிதம் வந்தபின்பு இதுபற்றி ஆய்வு செய்து பதில் தரப்படும்.” என்றனர்.
பொதுவாக ஒரு வாகன ஓட்டி, தான் இயக்கும் வாகனத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர் மீது போக்குவரத்துத்துறை எப்படி நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றி கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவலர் என பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
எந்தெந்த போக்குவரத்து விதிமீறலுக்கு எவ்வளவு தொகை அபராதம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
அவர்கள் விளக்கியதன்படி, போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் முறை இதுதான்:
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தை நிறுத்தி, அந்த விதிமீறல் குறித்து அவரிடம் விளக்கப்படும். உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் வருபவரிடம் அதை அணியாமல் ஏற்படும் விபத்து பாதிப்பு பற்றி விளக்கி, அவருடைய வாகனத்தை டிவைசில் புகைப்படம் எடுத்து, அதில் அந்த வாகன எண்ணைப் பதிவிட்டு, விதிமீறலைக் குறிப்பிட்டு வாகன சோதனை அறிக்கை அனுப்பப்படும்.
பரிவாஹன் இணையம் மூலமாக அனுப்பப்படும் அந்த இ சலானிலேயே அபராதத்தைச் செலுத்துவதற்கும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அதில் நுழைந்து அவர்கள் அபராதத்தைச் செலுத்தலாம்.