
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கோவை அருகே ஒரு கிராமத்திலுள்ள குட்டையில், கோவை மாநகராட்சியால் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரைக் கொண்டு செல்வதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடிநீருக்கு பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணற்று நீர் மாசுபடுத்தப்படும் என்பதே இதற்குக் காரணமென்று கிராம மக்கள் கூறுகின்றனர். குட்டையைத் தூர் வாரும் பணியைத் துவக்க வந்த சூலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொது மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசியல் காரணங்களுக்காகவே இந்தத் திட்டம் எதிர்க்கப்படுவதாக பிபிசியிடம் கூறிய சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார், அந்தக் குட்டை தூர்வாரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக, குட்டையைத் தூர் வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத் துறையிடம் இது பற்றிக் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாகவும், மக்களின் கோரிக்கையையும் பரிசீலித்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
‘பூமி பூஜை போட வந்த எம்எல்ஏ-வுக்கு எதிர்ப்பு’
கோவை நகருக்கு அருகிலுள்ள பட்டணம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட நாகமநாயக்கன்பாளையத்தில் ஊராழிக் குட்டை என்ற சிறிய நீர்நிலை இருக்கிறது. மொத்தம் 10 ஏக்கர் பரப்புடைய அந்த நீர்நிலை, எந்த ஆற்றின் வழித்தடத்திலுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழைநீரை நீர்ப் பிடிப்புப் பகுதியாகக் கொண்டுள்ளது. மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தப் பகுதியில் இந்தக் குட்டையைச் சுற்றிலும் தற்போது ஏராளமான புதிய குடியிருப்புகள் பெருகியுள்ளன.
இந்த குளத்துக்கு உள்ளே 3, வெளியே 7 என பட்டணம் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு, அவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்தத் தண்ணீர் வருவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரையே சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் ஊராழிக் குட்டையிலும் அதையொட்டியும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கோவை மாநகராட்சியின் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீரை, இந்தக் குட்டையில் விடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காகவே இந்தக் குட்டையைத் தூர்வாரும் பணி தொடங்க இருப்பதாகவும் மக்களிடம் தகவல் பரவியுள்ளது. அதற்கேற்ப ஊராழிக் குட்டையைத் தூர்வாரும் பணி, கெளசிகா நீர்க்கரங்கள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியுடன், கடந்த செப்டெம்பர் 25ஆம் தேதியன்று, இந்த குட்டையைத் தூர்வாரும் பணியைத் துவக்கி வைப்பதற்கான பூமி பூஜை போடும் பணி நடந்தது. பணியைத் துவக்கி வைக்க தவெக-வை சேர்ந்த சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார் வந்திருந்தார்.
அப்போது நாகமநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கழிவுநீரை குட்டையில் விடவேண்டாமென்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சாலையில் அமர்ந்தனர். அதைக் கண்டித்து ஊருக்குள் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன.
பூமி பூஜை நடந்தபோது இரு தரப்பினரிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. காவல் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராழிக் குட்டையைத் தூர்வாரும் பணியை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய பொது மக்கள், ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குட்டையில் விடக்கூடாது என்று உத்தரவாதம் தர வேண்டுமெனத் தெரிவித்தனர்.
கோவை தெற்கு வருவாய்க் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களைக் கலைந்து போக வைத்தனர். இதனால் தற்போது வரையிலும் குட்டையைத் தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்த நிலையில், செப்டெம்பர் 28 திங்கட்கிழமையன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பொது மக்கள் திரண்டு வந்து, ஊராழிக் குட்டையில் கழிவு நீரைக் கலக்கக்கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதைத் தாங்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும் அதில் அவர் கூறியிருந்தனர்.
”நன்னீர் குளத்தில் கழிவுநீரைக் கலந்தால் நிலத்தடி நீர் மாசுபடும். அதனால் சுகாதாரம் பாதிக்கப்படும், நோய் பரவும். எங்கள் பகுதியில் விவசாயம் அதிகம் நடப்பதில்லை. சுற்றிலும் வீடுகள் அதிகமாகிவிட்டன. விவசாயிகள் என்ற பெயரில் சிலருடைய சுயநலத்திற்காக குட்டையைத் தூர்வாரும் பணியை அனுமதிக்கக்கூடாது. குட்டையை ஒட்டியுள்ள தடுப்பணையைப் பலப்படுத்தாமல் குட்டையைத் தூர்வாரினால் குட்டை உடையும் அபாயம் உள்ளதால் 5 ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் நடத்தினோம். அதை ஏற்று பணியைத் துவக்க வேண்டாமென்று ஆட்சியர்கள் வாய்மொழியாகக் கூறியுள்ளனர்” என்று மனுவில் கூறியுள்ளனர்.
தடுப்பணையைப் பலப்படுத்திய பிறகு, குட்டையைத் தூர்வாருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக மனு கொடுக்க வந்த சிலர் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குப் பிறகும் இந்த விவகாரம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கலப்பதை எதிர்த்து மனு தாக்கல்
இந்தக் குட்டையில் கழிவு நீரைக் கலப்பதற்கு முன்பே முயற்சி நடந்தபோது, அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தவர் இதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன். பட்டணம் கிராம ஊராட்சியின் துணைத் தலைவராகவும், 4 முறை மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள இவர், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை விளக்கினார்.
பிபிசியிடம் பேசிய நாகராஜன், ”மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குட்டைக்கு 5 வழிகளில் மழைநீர் வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தக் குட்டை தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டு, மரங்கள் நடப்பட்டது. குட்டைக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள 10 ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரைப் பரிசோதனை செய்ததில் குடிநீராகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்த பின்பே, இதை ஊர் மக்கள் குடிக்கவும், மற்றவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். குட்டையில் கழிவு நீரைக் கலந்தால் நிலத்தடி நீர் நிச்சயமாக பாதிக்கும்” என்றார்.
ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வருவது நொய்யல் ஆற்றின் தண்ணீர் இல்லை என்று கூறிய நாகராஜன், “முழுக்க முழுக்க கோவை மாநகராட்சியின் கழிவுநீர மட்டுமே அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. கழிவுநீரை எவ்வளவு சுத்திகரித்தாலும் அதிலுள்ள நச்சுத்தன்மை நீங்காது என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது” என்றார்.
இவர்கள் குறிப்பிடும் ஒண்டிப்புதூர் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், தற்போது அங்கிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள காடுகுட்டையில் நிரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இயங்கத் துவங்கியிருப்பதால் இன்னும் காடுகுட்டை நிரம்பவில்லை. அந்த குட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஊராழிக் குட்டை. அதற்குப் பின் கலங்கல் கிராமத்திலும், அதற்குப் பின்பும் பல குட்டைகளுக்கு இந்த நீர் வழித்தடம் செல்கிறது.
”காடுகுட்டை நிறைவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அது நிறைவதற்கு முன்பே, அங்குள்ள மதகை அடைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் நேராக ஊராழிக் குட்டைக்கு வந்துவிடும். அதற்குள் இந்த குட்டையைத் தூர்வார முடிவு செய்துள்ளனர். இப்பகுதியில் 1000 ஏக்கர் விவசாயம் நடப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் 100 ஏக்கர் அளவுக்குக்கூட விவசாயம் நடக்கவில்லை. அனைத்தும் குடியிருப்பாக மாறிவிட்டன. விவசாயிகள் பெயரில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த போதுதான் அதற்கு எதிராக நான் மனு தாக்கல் செய்தேன்” என்றார் நாகராஜன்.
அந்த வழக்கில் விளக்கமளிக்குமாறு தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாசுக் கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆறு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனு 2021 மார்ச் 3ஆம் தேதியன்று முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற ஆணைய இணையதளம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரத்தில் “சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார், மிகவும் குழப்பமாகப் பேசுவதும் மக்களின் எதிர்ப்புக்கு ஒரு காரணம்” என்கிறார் பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார். “தூர் வாருவது மட்டும்தான் அரசின் திட்டம் என்பதை அரசு அதிகாரிகள் கூறினாலும், எம்எல்ஏ மாறி மாறிப் பேசுவதால் மக்கள் அரசு தரப்பிலிருந்து ஒரு தெளிவான முடிவை எதிர்பார்க்கின்றனர்” என்றார் அவர்.
பிபிசியிடம் பேசிய ராம்குமார், ”காடுகுட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் நிரம்பி வருகிறது. அங்கு இப்போதே கடும் துர்நாற்றம் கொசுத் தொல்லை அதிகமாகவுள்ளது. ஆனால் அந்த குட்டையைச் சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை. காடுகுட்டை நிரம்பிய பின்பு அந்தத் தண்ணீரை நாகமநாயக்கன்பாளையம் ஊராழிக் குட்டைக்குக் கொண்டு வரும் முடிவில்தான் அந்த குட்டையைத் தூர்வாரும் பணியை கெளசிகா நீர்க்கரங்கள் என்ற அமைப்பிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்துள்ளார்” என்றார்.
”சிஎஸ்ஆர் நிதியில் இந்தப் பணி நடந்தாலும், குட்டை தூர்வாரப்பட்டதும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு வருவார்கள் என்பதே மக்களின் அச்சமாக உள்ளது. ஆனால் எம்எல்ஏ சுகுமார், தூர்வாரவே ஏன் அனுமதிக்கவில்லை என்று ஓரிடத்தில் கேட்கிறார். மற்றொரு இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை அங்கே விட்டால் என்ன பிரச்னை என்று கேட்கிறார். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராகவே இருந்தாலும் தங்கள் பகுதி குட்டையில் அதை விடவேண்டாம் என்று மக்கள் எதிர்க்கின்றனர்” என்றார் ராம்குமார்.
குட்டையைத் தூர் வாரும் பணியை மேற்கொள்ளவிருந்த கெளசிகா நீர்க்கரங்கள் அமைப்பிடம் இதுபற்றி பிபிசி தமிழ் பேசியது. அதற்கு விளக்கமளித்த அந்த அமைப்பின் தலைவர் செல்வராஜ், ”நாங்கள் அந்தப் பணியை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து இருந்தது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, பணியைத் துவக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். ஆனால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தப் பணியில் இருந்து கெளசிகா நீர்க்கரங்கள் விலகிவிட்டது” என்றார்.

அரசு தரப்பு கூறுவது என்ன?
பட்டணம் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் பிபிசி பெற்ற தகவலின்படி, இந்த ஊராட்சியிலுள்ள 12வது வார்டுக்கு உட்பட்ட நாகமநாயக்கன் பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 1030 வீடுகள் உள்ளன. அவற்றில் தோராயமாக 4120 மக்கள் வாழ்கின்றனர். மொத்தம் 593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதுமே குடியிருப்புகள் அதிகமாகிவிட்டதும் தெரிய வந்துள்ளது. தற்போது நிலவும் வறட்சி காரணமாக, ஊராழிக் குட்டையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் மிகவும் குறைவாகவே தண்ணீர் கிடைப்பதாக பட்டணம் கிராம ஊராட்சியின் செயலாளர் சரவணன் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய சரவணன், ”மழை இல்லாததாலும், வெப்பம் அதிகமாகிவிட்டதாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, குட்டையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிவிட்டன. ஒரு லட்சம் லிட்டர் கிடைக்கும் ஆழ்துளையில் தற்போது அதிகபட்சம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அப்பகுதி மக்களுக்கு பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது” என்றார்.
”எங்களுக்குத் தெரிய ஆழ்துளைக் கிணற்று நீரை யாரும் குடிநீருக்குப் பயன்படுத்துவதில்லை. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, ஊராழிக் குட்டையைத் தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு வருவது குறித்து இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்றார் கிராம ஊராட்சி செயலாளர் சரவணன்.
இந்த விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார். குளத்தை ஒட்டி வசிக்கும் திமுகவினர் பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதாகக் கூறிய அவர், “அதிமுக ஆட்சியின்போதும் தூர்வார நடந்த முயற்சியைத் தடுத்தனர். திமுக ஆட்சியில் தூர்வாரவே இல்லை” என்றும் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார், ”குளத்துக்கு அருகிலுள்ள சிலர் நீர்நிலை புறம்போக்குப் பகுதியில் வீடு கட்டியுள்ளனர். அவர்களும் இதில் இணைந்துள்ளனர். தூர்வாரும் பணியைத் துவக்குவதற்கு முதல் நாளே எதிர்ப்பு வருமென்று எனக்குத் தெரியும். இது ஒன்றும் என் தனிப்பட்ட விருப்பத்தில் நடக்கும் வேலையல்ல, அரசின் பணி. மாநிலம் முழுவதும் குளம், குட்டைகளைத் தூர்வார ரூ.518 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி போதாது என்பதால்தான் சிஎஸ்ஆர் நிதியில் இதுபோன்ற குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
”எனது தொகுதியில் 216 குளம், குட்டைகள் உள்ளன. தற்போது வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, 1600 அடிக்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காடுகுட்டையில் நிரப்பப்படுவது ஒன்றும் கழிவுநீரில்லை. அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர். எதிர்காலத்தில் இந்தத் தண்ணீரைத்தான் அனைத்துக்கும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”
“ஊராழிக் குட்டையை அடுத்துள்ள கலங்கல் கிராமத்தில் குட்டையை நிரப்புவதற்கு மக்கள் இந்த தண்ணீரைக் கேட்கின்றனர். இந்த குட்டையைத் தாண்டாமல் அந்த குட்டைக்கு தண்ணீரை அனுப்ப முடியாது. காடுகுட்டை நிரம்பிவிட்டால் இந்த குட்டைக்கு தானாகவே தண்ணீர் வந்துவிடும். இப்போது இந்தத் தண்ணீரை ஊராழிக் குட்டைக்குக் கொண்டு வருவதைவிட குட்டையை தூர்வாருவது முக்கியம். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் எம்எல்ஏ சுகுமார்.
இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, ”ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் காடுகுட்டைக்குச் செல்கிறது. அதையடுத்து இந்த குட்டை உள்ளது. அடுத்தடுத்து சங்கிலித் தொடராகப் பல நீர்நிலைகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விவசாயத்துக்கு வேண்டுமென்று விவசாயிகள் பலர் கேட்கின்றனர்” என்றார்.
”மறுபுறத்தில் நாகமநாயக்கன்பாளையம் மக்கள் தங்கள் பகுதி குட்டைக்கு இந்த தண்ணீரைக் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது பற்றி நீர்வள ஆதாரத் துறையிடம் சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் கள நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் மக்களின் கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படும்” என்றார் ஆட்சியர் பவன்குமார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு