மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு நாடு முழுவதும் ‘க்யா போல்டி பப்ளிக்’ என்ற பிரசாரத்தை அடுத்த மாதம் முன்னெடுக்க உள்ளதாக கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற கரப்பான்பூச்சி கட்சியின் முக்கியக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள், குறைகள் மற்றும் அவர்கள் விரும்பும் அரசியல் மாற்றங்கள் குறித்துக் கேட்டறிவதே இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் என்று தீப்கே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நீட் முறைகேடு தொடர்பான போராட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் கலந்துகொண்டதாகவும், இதனை வைத்து வேலையில்லாத் திண்டாட்டம், கல்வித்துறை வணிகமயமாக்கல், அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைவு போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டு இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
“மக்கள் இனி வீதிகளில் இறங்குவார்கள். இன்று அவர்கள் ஒருவரின் ராஜினாமாவைக் கோரியுள்ளனர்; நாளை மற்றவர்களின் ராஜினாமாவையும் கோருவார்கள். வளர்ந்த இந்தியாவுக்கான பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் நேரு ஆகியோரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சி.ஜே.பி. செயல்படும்.
எங்கள் சித்தாந்தம் இந்திய அரசியலமைப்பின் சித்தாந்தத்தைப் போன்றதே” என தெரிவித்துள்ளார்.