• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

க்ரீமி லேயர் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த முக்கிய விளக்கம்: யாருக்குப் பலனளிக்கும்?

Byadmin

Nov 13, 2026


க்ரீமி லேயர் - உச்சநீதிமன்றம் விளக்கம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் தந்தை வாங்கும் சம்பளம், அவரது மகனுக்கு மத்திய அரசுப் பணியில் ஓபிசி (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இடஒதுக்கீடு கிடைப்பதைத் தீர்மானிக்க முடியுமா? சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடங்கிய ஒரு வழக்கில், இதற்கு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஹெச்.சி.எல் (HCL) நிறுவனத்தில் பணிபுரிந்த தந்தையின் சம்பளத்தைக் காரணம் காட்டி, ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் விரும்பிய பணியைப் பெற முடியாமல் போன ரோகித் நாதனின் வழக்கு, இப்போது நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதலில், தமிழ்நாட்டுக்கும் இந்தத் தீர்ப்புக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசு வேலைகள் மற்றும் மாநிலக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் (BCM), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் (MBC/DNC), பட்டியலின பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு மொத்தம் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாநில இடஒதுக்கீடு குடும்ப வருமானத்தின் அடிப்படையிலான க்ரீமி லேயர் சோதனைக்கு உட்பட்டதல்ல.

ஆனால், மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் 27% ஓபிசி இடஒதுக்கீட்டைப் பெறும்போது, மத்திய அரசின் க்ரீமி லேயர் விதிகள் பொருந்தும். எனவே, தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் மத்திய அரசுப் பணிக்கு அல்லது மத்தியக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கும்போது இந்தத் தீர்ப்பு நேரடியாக முக்கியத்துவம் பெறுகிறது.

மார்ச் மாதத் தீர்ப்பு கூறுவது என்ன?

2026ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இந்திய ஒன்றியம் எதிர் ரோஹித் நாதன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓபிசி பிரிவில் ஒருவரைக் க்ரீமி லேயர் என வகைப்படுத்த, பெற்றோரின் சம்பள வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம்.

By admin