• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

சமூக ஊடக பாலியல் தொல்லை வழக்கு | சந்தேக நபரின் கைது குறித்து பொலிஸார் தகவல்!

Byadmin

Nov 6, 2026


பேஸ்புக்  மற்றும் வட்ஸ்அப்  ஊடாகப் பாலியல் தொல்லைகள் இழைத்த குற்றச்சாட்டின் கீழ், 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியைக் கோரி வெளியிடப்பட்ட அறிவித்தலை மேலும் பிரசுரிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தன்னை பொலிஸார் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் ரிட்  மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.

சட்ட மா அதிபரின்  ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை குறித்த சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த இச்சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த தகவலை அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொண்டு, சந்தேக நபரைப் பிடிப்பதற்கு உதவி கோரி ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவித்தலை இனிமேல் பிரசுரிப்பதையோ அல்லது ஒளிபரப்புவதையோ உடனடியாகத் தவிர்க்குமாறு பொலிஸார் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், முந்தைய முதன்மைச் செய்திக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்தை வழங்கி இந்தச் செய்தியையும் பிரசுரிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்படி, சந்தேக நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட பொது அறிவித்தல் முற்றாக இரத்து செய்யப்படுகிறது.

By admin