• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பின் அரசியல் வாரிசுக்கான போட்டி தொடங்கிவிட்டதா? ஜே.டி. வான்ஸின் விமர்சனம் கூறுவது என்ன?

Byadmin

Nov 6, 2026


இரான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப்

    • எழுதியவர், டேனியல் புஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், புதன்கிழமை வாஷிங்டனில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு இரான் போரே நேரடிக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டொனால்ட் டிரம்பிடம் இருந்து தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ளும் முயற்சியாகவே அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

‘எக்ஸ்’ தளத்தில் சுமார் 600 சொற்கள் கொண்ட விரிவான அறிக்கை ஒன்றை வான்ஸ் வெளியிட்டார். அதில், 2024ஆம் ஆண்டு டிரம்புக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் இம்முறை இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“நாம் தோல்வியடைந்தமைக்குக் காரணம் இந்தப் போர்தான். இதை அதிபரே நேற்றிரவு குறிப்பிட்டார்” என்று அவர் தனது பதிவில் எழுதியிருந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அளித்த நேர்காணல்களில், இரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போரை டிரம்ப் தொடர்ந்து நியாயப்படுத்தினார். அதேநேரத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்தப் போரும் ஒரு காரணமாக அமைந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இரான் போர் தொடர்பாக வான்ஸ் கொண்டுள்ள நிலைப்பாடு வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்றுதான். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, அவர் பொதுவெளியில் இந்தப் போரை ஆதரித்து வந்துள்ளார். ஆனால், அரசாங்கத்தின் உயரதிகாரிகளுடனான தனிப்பட்ட ஆலோசனைகளின்போது இந்தப் போருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.



By admin