• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து 13ஆவது தொடர்ச்சியான வெற்றி

Byadmin

Sep 17, 2026


இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 119 ஓட்டங்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இப் போட்டியில் சகல துறைகளிலும் இங்கிலாந்து அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதுடன் இலங்கை பலவீனமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

இங்கிலாந்து அணியின் சமகாலத் தலைவர் ஹெரி ப்றூக், முன்னாள் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பபெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 128 ஒட்டங்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டது.

அத்துடன் சொனி பேக்கரின் துல்லியமான பந்துவீச்சும் இங்கிலாந்தின் வெற்றியில் பெரும் பங்காற்றியது.

இதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து தொடர்ச்சியான 13ஆவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.

அறிமுக ஆரம்ப வீரர் அனோரின் டொனல்ட் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (31 – 1 விக்.)

ஆனால் அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான ஜொஸ் பட்லர், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்து இங்கிலாந்து அணியை வலுவான நிலையில் இட்டனர்.

ஜொஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து டொம் பென்டன் 10 ஓட்டங்ளுடன் ஆட்டம் இழந்தார். (195 – 3 விக்)

தொடர்ந்து ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

ஹெரி ப்றூக் 49 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 114 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற இரண்டாவது ரி20 சதமாகும்.

வில் ஜெக்ஸ் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர, துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகிய நால்வரும் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

மத்திய வரிசை வீரர்களான துனித் வெல்லாலகே (33), தசுன் ஷானக்க (24) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையாக 11ஆம் இலக்க வீரர் ஏஷான் மாலிங்க ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சொனி பேக்கர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

By admin