2016 இல் இந்தியானாவில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மேடைக்கு வந்தபோது, சீனா அமெரிக்காவிற்கு முதன்மையான பொருளாதார எதிரியாகும் என்ற கருத்தை டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
“சீனா நமது நாட்டைச் சுரண்டுவதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது” என்று ஃபோர்ட் வேய்னில் கூடியிருந்த மக்களிடம் கூறிய அவர், அதிகாரம் நம் கையில் உள்ளது. அதை மறந்துவிடாதீர்கள்”என்றும் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு எதிரான அவரது பேச்சு, பத்தாண்டு கால பொதுக்கூட்டங்கள், அவரது 2024 தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவரது இரண்டாவது பதவிக்காலம் போன்றவற்றிலும் சற்றும் குறையவில்லை.
சீனாவை விமர்சிப்பதையே தங்கள் அடையாளமாகக் கொண்ட முக்கிய கூட்டாளிகளான வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் மூத்த பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவாரோ ஆகியோருடன் டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்துக்குத் திரும்பினார்.
சீனா அமெரிக்காவை “ஏமாற்றுகிறது” என்றும், தொழில்துறை அளவில் தொழில்நுட்பத்தைத் திருடுகிறது என்றும், அமெரிக்கத் தெருக்களில் ‘ஃபெண்டானில்’ போதைப்பொருளைக் குவிக்கிறது என்றும் இவர்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதன் பிறகு, விரைவிலேயே இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டன, 2025ம் ஆண்டு பிப்ரவரியில் 10% ஆக இருந்த வரி, ஏப்ரல் மாத நடுப்பகுதியில் டிரம்ப் “விடுதலை நாள்” என்று அழைத்த சீனா மற்றும் பல அமெரிக்க வர்த்தகக் கூட்டாளிகள் மீதான இறக்குமதி வரியை அறிவித்தபோது 145% ஆக உயர்ந்தன.
சீனா இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா மீது 125% இறக்குமதி வரியை விதித்ததுடன், அரியவகை கனிமங்களின் ஏற்றுமதியையும் முடக்கியது.
பிறகு, ஒரு வர்த்தகப் போர் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்த வாரம் சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்துள்ளார்.
கிரேட் ஹால் ஆப்ஃ தி பீப்பிள் எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் டிரம்ப் கால் பதித்தபோது, கொடிகளை அசைத்தபடி நூற்றுக்கணக்கான குழந்தைகளும், அமெரிக்க தேசிய கீதமான ‘ஸ்டார்-ஸ்பேங்கிள்ட் பேனர் ‘ இசையை முழங்கிய ராணுவ இசைக்குழுவினரும் அவரை வரவேற்றனர்.
“உங்களுடன் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கூறிய டிரம்ப், “உங்களது நண்பராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட சிறப்பாக இருக்கப் போகிறது”என்றும் தெரிவித்தார்.
பெரிய முன்னேற்றங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், டிரம்ப் விரைவில் “அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களைப்” பாராட்டினார்.
சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா 10 சீன நிறுவனங்களுக்கு செமிகண்டக்டர்களை விற்க அனுமதி பெற்றதாகவும், போயிங் நிறுவனம் 200 விமானங்களுக்கான ஆர்டரைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சிட்டி வங்கி சீனாவில் பத்திர வணிகத்தை நடத்துவதற்கான ஒப்புதலைப் பெற்றது.
ஆனால் இந்த உபசரிப்புகள் மற்றும் தளர்த்தப்பட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில், சீனாவுக்கு எதிரான கடுமையான போக்குகள், டிரம்பின் குடியரசுக் கட்சியின் பாரம்பரியமான, மிகவும் தீவிரமான கொள்கையையே பிரதிபலிக்கின்றன.
இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைத் தாக்குவதற்கு இரானுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்கியதாக மூன்று சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை பொருளாதாரத் தடைகளை விதித்தது.
மேலும் முக்கியப் பிரச்னைகள் அப்படியே நீடிக்கின்றன.
குறிப்பாக தைவான். இதனை சீனா ஒரு கிளர்ச்சி மாகாணமாகவே பார்க்கிறது.
ஜனநாயகக் கட்சியினரும், சீனாவைக் கடுமையாக விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினரும் அவசியமாகக் கருதும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனையின் நிலை குறித்து டிரம்ப் சில விபரங்களை மட்டுமே வழங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, இரு கட்சிகளையும் சேர்ந்த செனட்டர்கள் குழு ஒன்று டிரம்புக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
அதில் ஆயுத விற்பனையைத் தொடருமாறும், அது குறித்து சீன அதிபரிடம் “முறையாக” அறிவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
“தைவான் விஷயத்தில், அவர் [ஷி] மிகவும் உறுதியாக இருக்கிறார். நான் எந்தப் பக்கமும் உறுதிமொழி அளிக்கவில்லை,” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் கூறிய டிரம்ப், ஆயுத விற்பனை குறித்து “அடுத்த மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு முடிவை எடுக்கப்போவதாகவும் ” தெரிவித்தார்.
குறிப்பாக, இந்தச் சந்திப்பு குறித்து சீனா வெளியிட்ட அறிக்கையில் தைவான் முக்கியப் புள்ளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணத் தவறினால், அது “மோதல்கள் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுத்து, ஒட்டுமொத்த உறவையும் பெரிய ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தைவான் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
சீனாவின் இந்த அறிக்கை, பரந்த அளவிலான ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ இயக்கத்தில் உள்ள சிலரால் ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.
“மக்கள் இதை ஒரு நேர்மறையான சூழலாக மாற்ற எவ்வளவு விரும்பினார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் [ஷி] ஓர் அச்சுறுத்தலுடன் தொடங்கியிருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என டிரம்பின் முன்னாள் வியூக நிபுணர் ஸ்டீவ் பானன் ‘பொலிட்டிகோ’ இதழிடம் தெரிவித்தார்.
“அவர்கள் இதை மிக முக்கியப் புள்ளியாகக் குறிப்பிட்டது மிகவும் துணிச்சலானது மற்றும் வெளிப்படையானது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கேபிட்டல் ஹில்லில் உள்ள சீனாவுக்கு எதிரான தீவிரப் போக்காளர்களும் டிரம்பின் கூட்டாளிகளும் கூட இந்தத் பயணத்திற்குப் பிறகு பெரும்பாலும் மௌனம் காத்தனர்.
டிரம்பின் இணக்கமான தொனி மற்றும் தைவான் குறித்த அவரது உறுதியற்ற அறிக்கைகளுக்கு அவர்கள் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் வெளிப்படுத்தவில்லை.
அமெரிக்காவில் உள்ள சீன நிபுணர்களுக்கு, இந்த எதிர்வினை இல்லாதது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
“ஒரே மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ 50 அதிபர் உச்சிமாநாடுகள் நடந்தாலும், அமெரிக்காவும் சீனாவும் ஒருபோதும் உடன்பட முடியாத சில பிரச்சினைகள் இருக்கின்றன என்ற உண்மையை அது மாற்றிவிடாது” என்று அமெரிக்க-சீன உறவுகளுக்கான ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் அறக்கட்டளையின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டேவிட் ஃபியர்ஸ்டைன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அதற்காக இது ஒரு வெற்றிகரமான உச்சிமாநாடாக அமையாது என்று அர்த்தமல்ல” எனவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
2017 ஆம் ஆண்டில் டிரம்ப் மேற்கொண்ட கடைசிப் பயணத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட உத்திகள் பலனளிக்கவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொள்வதையே, அவரது மென்மையான பேச்சும் தொனியும் பிரதிபலிக்கக்கூடும் என்று ஃபயர்ஸ்டீன் குறிப்பிட்டார்.
“சந்தை அணுகல், அறிவுசார் சொத்துரிமை, மானியங்கள் என இன்றும் நமக்கு அதே பிரச்னைகள்தான் உள்ளன… அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது” என்று கூறிய அவர், “இந்த இறக்குமதி வரிகள் அமல்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகியும், அந்தப் பிரச்னைகளில் ஒன்றுகூட தீர்க்கப்படவில்லை”என்றும் தெரிவித்தார்.
டிரம்பின் தொனியில் ஏற்பட்டுள்ள இந்த மென்மையான போக்கு, அநேகமாக மற்ற அதிகாரிகள், குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டிரம்பின் பரந்த ஆதரவாளர் தளத்தில் உள்ளவர்களிடமும் எதிரொலிக்கக்கூடும் என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் ஆசிய ஆய்வாளர் டேவிட் சாக்ஸ் தெரிவித்தார்.
“முந்தைய டிரம்ப் நிர்வாகத்தைப் போலல்லாமல், இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால், சமீபத்திய நினைவுகளில் உள்ள எந்தவொரு அமெரிக்க நிர்வாகத்தைப் போலவும் அல்லாமல், இது மிகவும் மேலிருந்து கீழ் நோக்கிய அதிகார அமைப்பாக உள்ளது” என்று கூறிய அவர், “இந்த நிர்வாகத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அமலாக்கப் பணியில் தான் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்”என்றும் குறிப்பிட்டார்.
சாக்ஸின் கருத்துக்களை, அமெரிக்க-சீன உறவுகள் மீதான தேசியக் குழுவின் தலைவரான ஸ்டீபன் ஓர்லின்ஸ் எதிரொலித்தார்.
“டிரம்ப் தனது கருத்தைக் கூறும்போது, மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
மேலும், ” அவரது ஆதரவாளர் தளமும் அதைப் பின்பற்றுகிறது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், டிரம்ப் இன்னும் தைவான் விவகாரத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்.
செப்டம்பரில் அதிபர் ஷி வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ளவிருக்கும் திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன்னதாக, நிலுவையில் உள்ள 14 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை டிரம்ப் முறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசியல் தளத்தின் இரு தரப்பிலிருந்தும் தொடர்ந்து நீடிக்கும்.
“தைவானுக்கான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்தி காங்கிரஸ் தொடர்ந்து கடிதங்களை எழுதும் என நான் நினைக்கிறேன்” என்று சாக்ஸ் கூறினார்.
அதுவரை, “நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் காங்கிரஸின் முன் ஆஜராகும்போது, தைவானுக்கான அந்த ஆயுத விற்பனையின் நிலை குறித்து அவர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்கப்படும்” என்று அவர் தொடர்ந்தார்.
இருப்பினும், அதிபரின் அலுவலகத்திலிருந்து இதற்கான முடிவு எடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
“இப்போது முதல் செப்டம்பர் மாதத்திற்குள் தைவானுக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் ஒரு பெரிய ஆயுத விற்பனை, அந்தப் பயணத்தைப் பாதிக்கக்கூடும்” என்றும், “அந்த 14 பில்லியன் டாலர் தொகுப்பு இப்போது உண்மையில் ஒரு பெரிய கேள்விக் குறியாக மாறியுள்ளது”என்றும், சாக்ஸ் கூறினார்.