பட மூலாதாரம், Keystone/Getty Images
1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிபிசி ஒளிப்பதிவாளர் ஒருவர் பியாங்யோங் நகரின் வீழ்ச்சியைப் படம்பிடித்தார். கொரியப் போரில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போர் கொரியத் தீபகற்பத்தையும் அதன் மக்களையும் எவ்வாறு சீரழித்தது, அப்பகுதியின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்தது, உலகை எவ்வாறு அணு ஆயுத அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது என்பதை ‘இன் ஹிஸ்டரி’ (In History) நிகழ்ச்சி ஆராய்கிறது.
“நகரத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து சாலைகளிலும் அகதிகள் கூட்டம் நிரம்பியிருந்தது. அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது மிகச் சிலருக்கே தெரிந்திருந்தது.”
1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, எரிந்துகொண்டிருந்த பியாங்யோங் நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அச்சமடைந்த வட கொரியர்களின் காட்சிகளை பிபிசி ஒளிபரப்பியது.
வட கொரியாவின் தலைநகரான பியாங்யோங் நகரில் தான் இருந்த இறுதி நேரங்களில் பிபிசி ஒளிப்பதிவாளர் சிரில் பேஜ் இந்தக் காட்சிகளைப் படம்பிடித்தார்.
ஐ.நா. படைகள் பின்வாங்குகின்றன என்றும், சீனப் படைகள் நெருங்கி வருகின்றன என்றும் செய்திகள் பரவிய நிலையில், நகரம் முழுவதும் பரவிய அச்சத்தையும் குழப்பத்தையும் கேமராவில் பதிவு செய்ய பேஜ் தெருக்களில் இறங்கினார்.
கடும் குளிரிலும் அச்சத்தில் ஓடிய அகதிகளை அவர் படம்பிடித்தார்.
மக்கள் தங்களால் தூக்கிச் செல்ல முடிந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் எரிந்துகொண்டிருந்த கட்டடங்களிலிருந்து புகை மண்டலங்கள் எழுந்தன.
இந்தப் பதற்றமான பின்வாங்கல், ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் தலைமையிலான ஐக்கிய நாடுகள் படைகளின் நிலைமை எவ்வளவு வேகமாக தலைகீழாக மாறியிருந்தது என்பதைக் காட்டியது.
இதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், கொரியாவை ஒன்றிணைக்கும் நிலையில் தான் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமனிடம் மெக்ஆர்தர் உறுதியளித்திருந்தார்.
பியாங்யோங் வீழ்ச்சியும், வட கொரியாவில் தனது ராணுவ நடவடிக்கைகள் முற்றிலும் தோல்வியடைந்ததும் மெக்ஆர்தரை அணு ஆயுதப் போரைப் பற்றி பேசும் நிலைக்குத் தள்ளின.
ஆனால் கொரியப் போர் ஏற்படுத்திய அழிவும் ரத்தக்களரியும் அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன.
இரண்டாம் உலகப் போர் முடிவடைவதற்கு முந்தைய ஆண்டுகளில், ஜப்பானின் அடக்குமுறை ஆட்சியால் கொரியா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
ஜப்பான் சரணடைந்த பிறகு, கொரியாவில் இருந்த ஜப்பானியப் படைகளை வெளியேற்றுவதற்காக, அப்போது போரில் கூட்டாளிகளாக இருந்த அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கொரியாவின் நிர்வாகத்தை குறுகிய காலத்துக்கு தங்களுக்குள் பிரித்துக்கொள்ள முடிவு செய்தன.
1945ஆம் ஆண்டு, இரு வல்லரசுகளும் கொரியாவை 38ஆவது அட்சரேகை என்று அழைக்கப்பட்ட ஒரு கோட்டின் வழியாக இரண்டாகப் பிரித்தன. இந்த எல்லை எந்தவித அடிப்படையின்றி வரையப்பட்டது.
வடக்கில், கிம் இல்-சங் தலைமையிலான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு சோவியத் ஒன்றியம் ஆதரவளித்தது. தெற்கில், சிங்மன் ரீ தலைமையிலான கொரியக் குடியரசுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது.
தொடக்கத்திலிருந்தே, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த இரு கொரிய அரசுகளும் ஒன்றையொன்று அங்கீகரிக்கவில்லை. 38ஆவது அட்சரேகையால் உருவாக்கப்பட்ட எல்லையையும் அவை ஏற்கவில்லை.
“அந்த எல்லை கொரிய மக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சட்டப்பூர்வமானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ இருக்கவில்லை. அவர்களுக்கு அது எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை” என லண்டனில் உள்ள எஸ்ஓஏஎஸ் (SOAS) பல்கலைக்கழகத்தின் கொரிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர் ஓவன் மில்லர், 2024ஆம் ஆண்டு பிபிசி ஹிஸ்டரி மேகஸின் (History Magazine) பாட்காஸ்டில் தெரிவித்தார்.
இரு தலைவர்களுமே நாட்டை வலுக்கட்டாயமாக மீண்டும் ஒன்றிணைக்க விரும்பினர்.
1949ஆம் ஆண்டுக்குள், இரு வல்லரசுகளும் கொரியாவில் இருந்த தங்களது பெரும்பாலான படைகளைத் திரும்பப் பெற்றிருந்தன. ஆனால், இது அதிகரித்துக் கொண்டிருந்த பதற்றத்தைத் தணிக்கவில்லை.
உண்மையான எல்லைப் பகுதியில் தொடர்ந்து வன்முறை மோதல்கள் அதிகரித்தன.
1950ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, வட கொரிய கம்யூனிஸ்ட் தலைவர் கிம் இல்-சங் தனது நடவடிக்கையைத் தொடங்கினார்.
அதிகாலையில், நன்கு பயிற்சி பெற்ற ராணுவப் படையுடன் 38ஆவது அட்சரேகையைக் கடந்து, தென் கொரியா மீது திடீர் தாக்குதலை நடத்தினார்.
சோவியத் ஆயுதங்களுடன் வந்த வட கொரியப் படைகள், தென் கொரிய ராணுவத்தை விரைவாகத் தோற்கடித்தன.
சில நாட்களிலேயே தென் கொரியாவின் தலைநகரான சியோலைக் கைப்பற்றின. அங்கிருந்த பல மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கும்படி கட்டாயப்படுத்தினர். மறுத்தவர்கள் சிறை அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வட கொரியாவின் தாக்குதல் இவ்வளவு வேகமாகவும் வெற்றிகரமாகவும் அமைந்தது அமெரிக்க அதிபர் ட்ரூமனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒரு நாடு கம்யூனிசமாக மாறினால், அதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் கம்யூனிசத்துக்கு மாறிவிடும் என்று நம்பிய ‘டொமினோ கோட்பாட்டை’ ஆதரித்த ட்ரூமன், தென் கொரியாவைக் காப்பாற்ற புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையிடம் உதவி கோரினார்.
இந்தத் தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்திருக்க முடியும். ஆனால் அப்போது சீன மக்கள் குடியரசுக்கு ஐ.நா.வில் இடம் வழங்கப்படவில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சோவியத் ஒன்றியம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களைப் புறக்கணித்து வந்தது.
இதனால், 1950ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, வட கொரியாவின் படையெடுப்பைத் தடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் தென் கொரியாவுக்கு உதவ வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது, அதன் சரணடைதலை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜெனரல் மெக்ஆர்தர், ஐக்கிய நாடுகள் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
நிலைமை எவ்வாறு மாறியது?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா முதலில் பதிலளித்தது. அது தனது படைகளை விரைவாக ஜப்பானிலிருந்து கொரியாவுக்கு அனுப்பியது.
ஆனால், இந்த வீரர்கள் மிகவும் வலிமையான வட கொரிய ராணுவத்தை எதிர்கொள்ள போதுமான அளவு தயாராக இருக்கவில்லை.
வட கொரிய ராணுவம் வேகமாக தெற்கு நோக்கி முன்னேறி, அமெரிக்கப் படைகளைப் பின்வாங்கச் செய்தது.
சண்டை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இந்த மோதலில் சிக்கிய ஆயிரக்கணக்கான அப்பாவி கொரியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் மாதத்துக்குள், தென் கொரிய மற்றும் ஐ.நா. படைகள் தென்கோடியில் உள்ள பூசான் துறைமுகத்தைச் சுற்றியிருந்த ஒரு சிறிய பகுதியைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
முழு கொரியத் தீபகற்பத்தையும் வட கொரியா மீண்டும் ஒன்றிணைத்துவிடும் என்று தோன்றியது.
அப்போது மெக்ஆர்தர் ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் முடிவை எடுத்தார்.
வட கொரியப் படைகளின் பின்புறத்தில் அமைந்திருந்த இன்சான் துறைமுகத்தின் மீது ஆபத்தான கடல்வழித் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டார்.
1950ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியில் ஐ.நா. படைகள் இன்சானில் தரையிறங்கின.
அவர்கள் துறைமுகத்தைக் கைப்பற்றிய பின்னர், சியோலை மீண்டும் கைப்பற்றுவதற்காக வேகமாக முன்னேறினர்.
தலைநகரை மீண்டும் கைப்பற்றிய பின்னர், தென் கொரிய ராணுவம் ஆயிரக்கணக்கான பொதுமக்களைச் சுட்டுக் கொன்றது. அவர்கள் முந்தைய ஆக்கிரமிப்பாளர்களுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கருதப்பட்டதால், அவர்களையும் எதிரிகளின் ஆதரவாளர்களாகக் கருதினர்.
போரின்போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற கொடூரமான படுகொலைகள் ஏராளமாக நடந்தன.
இதுவும் அவற்றில் ஒன்றுதான்.
“போரின்போது ஏராளமான படுகொலைகள் நடந்தன. அவை முன்களத்தில் நடந்தவை அல்ல. முன்களத்துக்கு அப்பால், மக்கள் விசுவாசமற்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்ட இடங்களில் நடந்தன” என்கிறார் மில்லர்.
இன்சான் நடவடிக்கை வட கொரிய ராணுவத்தின் விநியோக மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீர்குலைத்தது.
ஐ.நா. படைகள் பூசானிலிருந்து வெளியேறி, கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடங்கின.
இது போரின் போக்கையே மாற்றியது. வட கொரியப் படைகள் வடக்கே பின்வாங்கி, 38ஆவது அட்சரேகையைக் கடந்து மீண்டும் பின்வாங்கின.
ஆனால் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகும், கம்யூனிஸ்ட் படைகளை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் மெக்ஆர்தர் உறுதியாக இருந்தார்.
எல்லை கடந்து வட கொரிய வீரர்களை பின்தொடர்ந்து செல்லுமாறு தனது படைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
1950ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதிக்குள், ஐ.நா. படைகள் பியாங்யோங் நகரைக் கைப்பற்றியிருந்தன. சீன எல்லையில் உள்ள யாலு நதியை நோக்கி அவை முன்னேறிக் கொண்டிருந்தன.
சில மாதங்களுக்கு முன்பு தென் கொரியாவுக்கு மிகவும் ஆபத்தானதாக இருந்த நிலைமை, இப்போது முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது.
போரில் மேலும் தீவிரமாக ஈடுபடுவதற்கு ட்ரூமன் தயங்கினார். அது சீனாவையும் ரஷ்யாவையும் போருக்குள் இழுத்து, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என்று அவர் அஞ்சினார். அதற்குள் ரஷ்யாவும் தனது சொந்த அணுகுண்டை உருவாக்கியிருந்தது.
ஆனால் மெக்ஆர்தர், விரைவான மற்றும் தீர்க்கமான வெற்றியின் விளிம்பில் இருப்பதாக நம்பினார்.
இதன் மூலம் மேற்கத்திய ஆதரவு பெற்ற தென் கொரியாவின் தலைமையில் கொரியா மீண்டும் ஒன்றிணையும் என்று அவர் கருதினார். கிறிஸ்துமசுக்குள் போர் முடிந்துவிடும் என்று அதிபரிடம் உறுதியளித்தார்.
ஆனால் ஐ.நா. படைகள் தனது எல்லையை நோக்கி வேகமாக முன்னேறிய நிலையில், சீன கம்யூனிஸ்ட் தலைவர் மா சேதுங் கவலையடைந்தார்.
மேற்கத்திய நாடுகளின் எதிரிப் படைகள் சீனாவின் எல்லையை நெருங்கிவிடும் என்று மாவோ அஞ்சினார்.
எனவே, மெக்ஆர்தரின் படைகளை எதிர்கொள்ள சீன வீரர்களை எல்லைக்கு அருகே ரகசியமாகத் திரட்ட உத்தரவிட்டார்.
நவம்பர் இறுதியில், சீனா திடீரென்றும் பேரழிவு ஏற்படுத்தும் வகையிலும் கொரியப் போரின் போக்கை மீண்டும் மாற்றியது.
ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் முன்னேறிக் கொண்டிருந்த ஐ.நா. படைகள் மீது தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்களை நடத்தினர்.
மெக்ஆர்தரின் படைகள் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்திருந்தன. கடும் குளிரிலும் அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
இதனால், சில வாரங்களுக்கு முன்பு கைப்பற்றிய பரந்த பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களால் முடியவில்லை.
சோங்சோன் நதிப் போரில் சீனப் படைகள் ஐ.நா. படைகளுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தின.
அமெரிக்க கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பெரியதும், ரத்தக்களரி நிறைந்ததுமான பின்வாங்கல்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
சீனா மீது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
சீனாவின் தாக்குதல் வேகம் அதிகரித்தபோது, பியாங்யோங் மக்களும் மீண்டும் ஆபத்தில் சிக்கினர்.
இரண்டு மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு முன்புதான் ஐ.நா. படைகள் அந்த நகரைக் கைப்பற்றியிருந்தன.
முன்னேறி வந்த சீனப் படைகளைத் தடுக்க முடியாத நிலையில், மெக்ஆர்தர் நகரை கைவிட முடிவு செய்தார்.
ஐ.நா. படைகள் பின்வாங்குவதற்குத் தயாராகத் தொடங்கின. வட கொரிய வீரர்களின் கைகளில் சிக்கக்கூடிய அனைத்து பொருட்களையும், ஆயுதங்களையும், உபகரணங்களையும் அழிக்க உத்தரவிடப்பட்டது.
இதனால் நகரில் இருந்த பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. ஐ.நா. படைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் எவரையும் கொன்றுவிடுவோம் என்று வட கொரிய மற்றும் சீனப் படைகள் மிரட்டின.
இதையறிந்த ஆயிரக்கணக்கான அச்சமடைந்த, சோர்வுற்ற பியாங்யோங் மக்கள் நகரை விட்டு வெளியேறினர்.
கடும் குளிரில், பிரிட்டிஷ் ராணுவத்தின் கண்காணிப்பில் டேடோங் நதியைக் கடக்க அவர்கள் மேற்கொண்ட அவசர முயற்சிகளை பேஜ் கேமராவில் பதிவு செய்தார்.
ஐ.நா. படைகள் பின்வாங்கும்போது தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அவர்கள் நதியைக் கடக்க முயன்றனர்.
பிபிசி, “பியாங்யோங் நகருக்கு தெற்கே உள்ள டேடோங் நதிப் பாலத்தில் அகதிகள் கடக்க அனுமதிக்கப்படவில்லை. ராணுவ வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.” என தெரிவித்துள்ளது.
கடைசி ராணுவ வாகன;ம பாலத்தைக் கடந்து சென்ற பிறகு, வட கொரியப் படைகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காக அந்தப் பாலங்களை வெடிபொருட்கள் மூலம் தகர்க்க அமெரிக்கப் பொறியாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“ஆனால், நகரில் தங்கியிருப்பது ஆபத்து என்று அஞ்சிய ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையை அடைந்திருந்தனர். அவர்களை நதியின் மறுகரைக்குக் கொண்டு செல்ல பல்வேறு வகையான படகுகள் அங்கு தயாராகிக் கொண்டிருந்தன.” என்று பிபிசி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இரவு நேரம் ஆவதற்கு முன் விமான நிலையத்திலிருந்து வெளியேறுமாறு பேஜுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அவர் விமான நிலையத்தை அடைந்தபோது, அதன் பெரும்பகுதியும் தீயில் சிக்கியிருந்தது. வட கொரிய வீரர்களின் கைகளில் சிக்க வாய்ப்புள்ள அனைத்தையும் ஐ.நா. படைகள் அழித்துக் கொண்டிருந்தன.
பிபிசி தன் அறிக்கையில், “இருள் சூழ்ந்தபோது, விமானக் கொட்டகைகள் மற்றும் பணிமனைகளிலிருந்து எழுந்த தீப்பிழம்புகளால் இரவு வானமே ஒளிர்ந்தது. நள்ளிரவுக்குள், விமான நிலையத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான தனியார் வீடுகளும் தீப்பற்றி எரிந்தன.” என தெரிவித்துள்ளது.
பேஜ் சென்ற விமானம் புறப்பட்டபோது, பியாங்யோங் நகரின் இறுதிக் காட்சிகளை அவர் கேமராவில் பதிவு செய்தார்.
ஒரு காலத்தில் மெக்ஆர்தரின் வெற்றியின் அடையாளமாக இருந்த அந்த நகரம், இப்போது அவரது ராணுவ உத்தியின் தோல்வியின் அடையாளமாக மாறியிருந்தது.
பிபிசி தன் அறிக்கையில், “எங்களின் ஒளிப்பதிவாளர் பியாங்யோங் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது கிட்டத்தட்ட விடியற்காலையாகிவிட்டது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கடைசி விமானங்களில் அவரது விமானமும் ஒன்று. விமானம் தெற்கு நோக்கிச் சென்றபோது, கீழே பின்வாங்கிக் கொண்டிருந்த ஐ.நா. படைகளை அவர் பார்த்தார். தெற்கே செல்லும் சாலை, முடிவே இல்லாதது போல் நீண்டுகொண்டிருந்த வாகனங்களிலிருந்து எழுந்த தூசிப் படலத்தால் மூடப்பட்டிருந்தது.” என தெரிவித்துள்ளது.
1950ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, சீன மற்றும் வட கொரியப் படைகள் மீண்டும் பியாங்யோங் நகருக்குள் நுழைந்தபோது, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் உத்தி இன்னும் ஆபத்தான திருப்பத்தை எடுத்தது.
மெக்ஆர்தர் அடிக்கடி தனது அதிகார வரம்பை மீறியதாலும், நேரடியாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் புறக்கணித்ததாலும், ட்ரூமனுடனான அவரது உறவு தொடக்கத்திலிருந்தே சுமுகமாக இருக்கவில்லை.
இப்போது கொரியாவில் நிலைமை வேகமாக மோசமடைந்த நிலையில், போரை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
மா சேதுங் போரில் தலையிடக்கூடும் என்று ட்ரூமன் ஏற்கெனவே கவலைப்பட்டிருந்தார். ஆனால், மெக்ஆர்தர் அவரது எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இப்போது அவர் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தத் தொடங்கினார்.
கொரியாவில் உள்ள கம்யூனிஸ்ட் படைகள் ஆயுதங்களைக் கைவிடாவிட்டால், அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்ட வேண்டும் என்றும், சீனா மீது நேரடியாக குண்டுவீச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மெக்ஆர்தர் மட்டும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கொரியப் போரின்போது அமெரிக்க விமானப்படையின் முக்கிய கட்டளை அமைப்பின் ( Strategic Air Command) தலைவராக இருந்த கர்டிஸ் லீமேயும் முதலில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியாதது என்று லீமே நம்பினார். பின்னர் கியூபா ஏவுகணை நெருக்கடியின்போது, அணு ஏவுகணைத் தளங்கள் மீது குண்டுவீச அதிபர் ஜான் எஃப். கென்னடிக்கு அவர் அழுத்தம் கொடுத்தார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற மெக்ஆர்தரின் உறுதியான நிலைப்பாடு, கொரியப் போரில் ஈடுபட்டிருந்த பிற ஐ.நா. நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லியும் இதில் தலையிட்டார். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக அவர் வாஷிங்டனுக்குச் சென்றார்.
ஆனால், மெக்ஆர்தர் தனது திட்டம் வெற்றியடையும் என்று நம்பினார்.
சீனா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா அச்சமடைந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் உறுதியாக நம்பினார்.
“எல்லாம் தொடங்கிய இடம்”
பட மூலாதாரம், Keystone/Getty Images
1950ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்குமாறு மெக்ஆர்தர் அதிகாரப்பூர்வமாகக் கோரினார்.
ட்ரூமன் அதை நிராகரித்தார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மெக்ஆர்தர் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்களின் பட்டியலை வழங்கினார்.
அதில் சீனாவில் உள்ள பல இடங்களும் இடம்பெற்றிருந்தன. அவற்றைத் தாக்க எத்தனை அணுகுண்டுகள் தேவைப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைத் தானே முடிவு செய்யும் அதிகாரத்தை வழங்குமாறு பென்டகனுக்கும் அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.
1950ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஐ.நா. படைகள் மீண்டும் 38ஆவது அட்சரேகைக்கு அப்பால் பின்தள்ளப்பட்டன.
1951ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கடுமையான குண்டுவீச்சால் ஏற்கெனவே பெரும் அழிவைச் சந்தித்திருந்த சியோலை சீன மற்றும் வட கொரியப் படைகள் மீண்டும் கைப்பற்றின.
மில்லர் கூறுகையில், “கர்டிஸ் லீமே போன்ற சில தளபதிகள் அதிபருடன் நேரடியாக அதிக தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். ஏனெனில், லீமே மற்றும் மெக்ஆர்தர் போன்ற தளபதிகள் அவற்றைப் பயன்படுத்தவே விரும்பினர். ‘பயன்படுத்தப் போவதில்லை என்றால், அணு ஆயுதங்களை வைத்திருப்பதில் என்ன பயன்?’ என்று அவர்கள் நினைத்தனர்.
ட்ரூமனுக்கு மெக்ஆர்தரை தன்னால் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதேவேளையில், அந்த ஜெனரலின் தீவிரமான அணுகுமுறை மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்தது.
எனவே, 1951ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உத்தரவுகளை மீறியதற்காக மெக்ஆர்தரை அதிபர் பதவியில் இருந்து நீக்கினார்.”
கொரியப் போர் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. சியோல் நான்காவது முறையாக மீண்டும் கைப்பற்றப்பட்டது.
எந்தத் தரப்பாலும் தீர்க்கமான வெற்றியைப் பெற முடியவில்லை. போர் நீண்டதாகவும் ரத்தக்களரி நிறைந்ததாகவும் மாறியது.
மில்லர் கூறுகையில், “இந்தப் போரின் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று என்னவென்றால், 1951ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இரு ராணுவங்களின் முன்களமும் 38ஆவது அட்சரேகையிலிருந்து வெகு தொலைவில் இல்லை.
“இதே கோடுதான் இரு கொரியாக்களையும் பிரித்தது. இரு தரப்பினரும் மிகப்பெரிய இழப்புகளையும், பொதுமக்களுக்கு மிகப்பெரிய அழிவையும் ஏற்படுத்தியிருந்தனர். இருந்தபோதிலும், அவர்கள் கிட்டத்தட்ட போர் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருந்தனர்.”
1953ஆம் ஆண்டு, இரு நாடுகளும் இறுதியாக பதற்றமான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் சண்டையை நிறுத்தின. ஆனால் அவை சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
எனவே, தொழில்நுட்ப ரீதியாக இரு நாடுகளும் இன்னும் போர்நிலையில் உள்ளன.
இந்த மோதல் கொரியத் தீபகற்பம் முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. எண்ணிக்கைகள் மாறுபட்டாலும், கொரியப் போரின்போது சுமார் 40 லட்சம் பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. அவர்களில் பாதி பேர் பொதுமக்கள். மேலும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் அல்லது பசியால் உயிரிழந்தனர்.
விமானப்படையின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் நாட்டையே சீரழித்ததுடன், முழு நகரங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் அழித்தன.
நாடு இரண்டாகப் பிரிந்தபோது பிரிந்த குடும்பங்கள் பலவும் மீண்டும் ஒருபோதும் சேரவில்லை.
பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தணிந்திருக்கலாம்; ஆனால் அது முடிவுக்கு வரவில்லை.
இரு நாடுகளையும் 250 கிலோமீட்டர் (160 மைல்) நீளமுள்ள ராணுவமயமற்ற பகுதி (DMZ) பிரிக்கிறது.
அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் அவற்றைக் கண்காணித்து வருகின்றனர்.
உண்மையில் ஒருபோதும் முடிவுக்கு வராத ஒரு போரின் அடையாளமாக இன்றும் அந்தப் பகுதி நிற்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு