• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

Byadmin

Jun 2, 2026


தமிழ்நாட்டு தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு மேம்பாலத்திற்கு அடியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் மீது கார் ஒன்று மோதி தள்ளியதில் 18 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதிப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30) அதிகாலை வேளையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிச் சம்பவம், களியாட்ட விடுதியில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தில் நிகழ்ந்துள்ளது என சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி என்ற இலங்கைத் தமிழ் அகதிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

உயிரிழந்த யான்சி, தனது 17 வயதுடைய தோழியுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் களியாட்ட விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் தங்களது நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு ஆண்கள் குழுவிற்கும் இவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, களியாட்ட விடுதியின் பாதுகாவலர்கள் தலையிட்டு இரு குழுவினரையும் சமாதானப்படுத்தி வெளியில் அனுப்பியுள்ளனர். எனினும், களியாட்ட விடுதி வெளியேயுள்ள கடையொன்றின் அருகிலும் இருதரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபடவே, பாதுகாவலர்கள் அவர்களை மீண்டும் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து யான்சியும் அவரது தோழியும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி திருமங்கலம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

அப்போது, வழியில் சென்றுகொண்டிருந்த போது யான்சியின் தோழி, தங்களோடு மோதலில் ஈடுபட்ட ஆண்களின் காரை நோக்கி திடீரென கற்களை வீசியுள்ளார். இதனால் கடுமையான ஆத்திரமடைந்த அந்த ஆண்கள் குழு, தங்களது காரை அதிவேகமாகச் செலுத்தி, யான்சி பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் இருந்து கொடூரமாக மோதியுள்ளது.

“இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அருகில் இருந்த அவரது 17 வயது தோழி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை பொலிஸார், அதில் மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்களாவர். அவர்களின் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஏனைய மூன்று குற்றவாளிகளையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் படையணியொன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

By admin