படக்குறிப்பு, செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 62 மைல் (100 கி.மீ.) தொலைவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் அழிக்கப்பட்ட போயிங் E-3 சென்ட்ரி விமானத்தின் புகைப்படம்.கட்டுரை தகவல்
எழுதியவர், கெய்லா எப்ஸ்டீன் மற்றும் பெர்ண்ட் டெபஸ்மேன் ஜூனியர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை காட்டும் புகைப்படங்களை, பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் பெற்றுள்ளது.
ராணுவத்தில் தற்போது பணியாற்றி வரும் வீரர்களால் வழங்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில், ரேடார் ஜெட் ஒன்று துண்டிக்கப்பட்டிருப்பதும், டிரெய்லர்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதும், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதும் காணப்படுகின்றன.
தேதி குறிப்பிடப்படாத இந்தப் புகைப்படங்கள், செளதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் முகாம்களில் எடுக்கப்பட்டவை.
பெயர் வெளியிடப்படாத ராணுவ வீரர் ஒருவர் சிபிஎஸ்ஸிடம், “அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கப்படாத அளவுக்கு எங்களது ராணுவத் தளங்களில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் கண்களை மூடிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறோம்; யாரோ நம்மை முகத்தில் குத்திக்கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவை தொடர்புகொள்ளுமாறு பிபிசியிடம் தெரிவித்தது. ஆனால், மத்திய கட்டளைப் பிரிவு உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இந்தப் புகைப்படங்களை பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்கவில்லை. இரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும், அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்புப் பிரிவு உறுதிப்படுத்திய அறிக்கை வெளியான மறுநாளில் இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
செளதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போயிங் E-3 சென்ட்ரி ரக விமானம் முற்றிலும் சேதமடைந்துள்ளதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அந்த விமானம் இரண்டாகப் பிளந்துள்ளதுடன், அதன் பின்பகுதி உலோகக் குவியலாக நொறுங்கிக் கிடக்கிறது.
பட மூலாதாரம், CBS News
மேலே உள்ள புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும், மார்ச் மாதத்தில் இதே ரேடார் விமானம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இதேபோன்ற ஒரு புகைப்படத்தை பிபிசி வெரிஃபை ஏற்கெனவே உறுதி செய்திருந்தது.
போயிங் E-3 விமானங்கள், நீண்ட தொலைவில் உள்ள சாத்தியமான இலக்குகளைக் கண்டறிந்து கண்காணிக்கவும், ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
அப்போது, விமானப்படைத் தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தார்.
தேதி குறிப்பிடப்படாத இரண்டு புகைப்படங்கள் குவைத்தில் உள்ள கேம்ப் பியூரிங்கில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில், டிரெய்லர்கள் நொறுங்கிக் கிடப்பதும், கூடாரம் போன்ற பெரிய கட்டமைப்பு ஒன்று முற்றிலும் சிதைந்து, அதன் மீது புகை எழுவதும் காணப்படுகிறது.
பட மூலாதாரம், CBS News
படக்குறிப்பு, குவைத்தில் உள்ள கேம்ப் பியூரிங்கில் இரான் நடத்திய தாக்குதலில் டிரெய்லர்கள் சேதமடைந்துள்ளன.
பட மூலாதாரம், CBS News
படக்குறிப்பு, இந்தப் புகைப்படத்தில், குவைத்தில் உள்ள கேம்ப் பியூரிங்கில் இரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டமைப்பு ஒன்றிலிருந்து புகை வெளியேறுவதைக் காணலாம்.
மற்றொரு புகைப்படத்தில், குவைத்தில் உள்ள கேம்ப் அரிஃப்ஜான் பகுதியில் இரானின் தாக்குதலால் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று சேதமடைந்திருப்பது தெரிகிறது.
இந்தத் தளத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மார்ச் மாதத்திலேயே தகவல்கள் வெளியாகின. இதில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. எனினும், இந்தப் புகைப்படம் அதே தாக்குதலின்போது எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரு கட்சி ஆட்சிகளிலும் தேசியப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பிரையன் கடுலிஸ், இந்தப் புகைப்படங்களில் தெரியும் சேதங்கள், “அமெரிக்கா தனது பாதுகாப்பை போதுமான அளவில் தயார்படுத்தவில்லை” என்பதைக் காட்டுவதாகக் கூறினார்.
“சீனா, ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிர் நாடுகள், இலக்குகளைக் கண்டறிவதில் இரானுக்கு உதவியிருக்கலாம் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்ய டிரம்ப் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை” என்றும் அவர் கூறினார். தற்போது மத்திய கிழக்கு நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக உள்ளார் கடுலிஸ்.
பட மூலாதாரம், CBS News
படக்குறிப்பு, குவைத்தில் உள்ள கேம்ப் அரிஃப்ஜனில் உள்ள ஒரு கட்டடம் சேதமடைந்திருப்பதை இந்தப் புகைப்படத்தில் காணலாம்.
இந்தப் புகைப்படங்கள் வெளியானதற்கு முன்பாகவே, அமெரிக்க பாதுகாப்புத்துறையி கண்காணிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், “இந்த மோதலின்போது குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, இராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை இரானின் தாக்குதல்கள் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சேதமடைந்த அல்லது இழந்த ராணுவ உபகரணங்களின் மதிப்பு மொத்தம் 3.7 பில்லியன் டாலர் என அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஜூன் 29-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தப் போருக்காக அமெரிக்கா மொத்தம் 33.4 பில்லியன் டாலர் செலவிட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
போர் தொடங்கியதைத் தொடர்ந்து சில மாதங்களில், “டஜன் கணக்கான அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த விமானங்களில், செளதி அரேபியாவில் நிறுத்தப்பட்டிருந்தபோது இரானின் ஆயுதங்களால் “சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட” ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (சிபிஒ) வெளியிட்ட தனி அறிக்கையில், E-3 விமானங்களின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அவற்றுக்குப் பதிலாக நவீன ரக E-7 விமானங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு E-3 விமானத்தின் விலை மட்டும் 500 மில்லியன் டாலர் என சிபிஒ குறிப்பிட்டுள்ளது. விமானங்கள், ட்-டிரோன்கள் மற்றும் தாட் அமைப்பு உள்ளிட்ட போரில் இழந்த ராணுவ உபகரணங்களின் மொத்த மதிப்பு 1.9 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்களைக் கோரி அமெரிக்க பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்காததால், அரசு தரவுத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் வெளியான தகவல்களை நம்ப வேண்டியிருந்தது. இதனால் தனது மதிப்பீட்டில் “நிச்சயமற்ற தன்மை” இருப்பதாக சிபிஒ தெரிவித்துள்ளது.
மேலும், சேதமடைந்த ராணுவத் தளங்களைப் பழுதுபார்ப்பது மற்றும் மீண்டும் கட்டமைப்பது தொடர்பாக அமெரிக்க ராணுவம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்பதும் இன்னும் தெளிவாகவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
மத்திய கிழக்கு நிறுவனத்தைச் சேர்ந்த பிரையன் கடுலிஸ், “டிரம்ப் நிர்வாகம் முக்கியமான ராணுவ வளங்களை அதிக அளவில் செலவழித்திருப்பதையும், அதற்குப் பதிலாக குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை என்பதையும் இந்தச் செலவுகள் காட்டுகின்றன” என்றார். ஆனால், இதைவிடப் பெரிய பாதிப்பு அமெரிக்காவின் ஒட்டுமொத்த ராணுவத் தயார்நிலையில் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“அமெரிக்கா ஆசியாவில் இருந்து ராணுவப் படைகளையும் உபகரணங்களையும் மத்திய கிழக்குக்கு மாற்ற வேண்டியிருந்தது. இதனால் அமெரிக்காவும் ஆசியாவில் உள்ள அதன் கூட்டாளிகளும் சீனாவுக்கு எதிராக அதிகம் வெளிப்படக்கூடிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் விடப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
“மேலும், அமெரிக்காவின் ஆயுத இருப்புகள் குறைந்துள்ளதால், ரஷ்யா அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளிடம் உள்ள பலவீனங்களைச் சோதிக்கவும், யுக்ரேனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடரவும் அதிக முனைப்பு காட்டக்கூடும்” என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ உபகரண இழப்புகளைச் சமாளிக்க அமெரிக்காவிடம் போதுமான நிதி ஆதாரங்கள் இருந்தாலும், அந்நாடு ஏற்கெனவே பட்ஜெட் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் ஏற்படக்கூடிய புதிய மோதல்களை எதிர்கொள்ளத் தயாராகும் அளவுக்கு வேகமாக இந்த இழப்புகளைச் சரிசெய்ய முடியாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
இரானுடனான மோதலுக்கு முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கை வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும், பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினரிடமிருந்தும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரான் மீது தாக்குதல் நடத்திய பிப்ரவரி 28-ஆம் தேதி இந்தப் போர் தொடங்கியது.
போர் தொடங்கியதில் இருந்து, இரான் தொடர்ந்து அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.