
-
- எழுதியவர், மிர்சா ஏபி பேக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
உமையாத் கலீபகத்தின் ஆட்சிக்காலத்தின்போது, கி.பி. 712 இல் முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுத்தபோது, இஸ்லாம் மதம் வாளின் வலிமையைக் கொண்டுதான் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், பல வரலாற்று ஆசிரியர்கள் இந்த கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, தெற்காசியாவிலோ அல்லது இந்தியாவிலோ இஸ்லாத்தின் வருகையும் அதன் பிரபலமும் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல; அது ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் விளைவும் அல்ல. மாறாக, அது பல நூற்றாண்டுகளாக நீடித்த ஒரு நீண்ட வரலாற்று மற்றும் சமூகச் செயல்முறையாகும்.
வரலாற்று ஆசிரியர்களும் சமூகவியலாளர்களும் இந்த செயல்முறையை வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள். மேலும், இதனை விளக்குவதற்கு சில முக்கியமான கோட்பாடுகளை முன்வைக்கிறார்கள். அதில் அமைதியான முறையில் மக்கள் குடியேறியது, வர்த்தகம், சூஃபிக்களின் வருகை, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் என அனைத்தும் அடங்கும்.
இவற்றில் முதலாவது மற்றும் மிக முக்கியமான கோட்பாடு, ‘அமைதியான வர்த்தகம் மற்றும் கடல் வழித்தடங்கள்’ மூலமாக இந்தியாவில் இஸ்லாம் நுழைந்தது என்பதாகும்.
இங்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மசாலாப் பொருட்கள் மற்றும் குறிப்பாக கருப்பு மிளகு வர்த்தகம், இந்தியாவில் இஸ்லாம் வந்தடைவதில் ஒரு முக்கியப் பங்காற்றியது.
எனவே, இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த, கேரளாவில் உள்ள கொச்சி நகரத்துக்கும், பின்னர் கொடுங்கல்லூருக்கும் பிபிசி நேரில் சென்று ஆய்வு செய்தது. உள்ளூர் மக்களின் கருத்துப்படி, அங்குதான் ‘முசிறி’ என்ற பழங்காலப் புகழ்பெற்ற துறைமுகம் இருந்தது. இது 14-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் விளைவாக முற்றிலுமாக அழிந்துபோனது.

இந்தியக் கடற்கரைகளுடன் அரேபியர்களின் தொடர்பு
கேரளாவுக்கு பயணிப்பதற்கு முன்பாக, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், இடைக்கால வரலாற்று ஆய்வாளருமான சையத் ஜாகீர் உசேன் ஜாஃப்ரி அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
அவருடைய கருத்துப்படி, வங்காள விரிகுடாவை விட அரபிக்கடல் மிகவும் அமைதியானது. அங்கிருந்து ஒரு சிறு துரும்பையோ அல்லது மரக்கட்டையையோ தூக்கிப் போட்டால் கூட, அது அரேபியா மற்றும் ஓமனின் கடற்கரையைச் சென்றடைந்துவிடும். இந்த கடல் நீண்ட காலமாக அரேபிய தீபகற்பத்தால் ஆளப்பட்டது. அவர்கள் பருவமழை தொடங்கும் போது இந்தியாவுக்கு வருவார்கள், இங்கு தங்குவார்கள், பின்னர் பருவமழை காலம் முடிந்ததும் மீண்டும் அரேபியாவுக்குத் திரும்பி விடுவார்கள்.
அரேபியர்கள் இலங்கை, ஜாவா-சுமாத்ரா மற்றும் மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளை இந்த வழியாக சென்றடைந்ததாக அவர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் சையத் சுலைமான் நத்வி தனது ‘அரப் வ ஹிந்த் கே தல்லுகாத்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த கடல்வழிப் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் முழுமையாக அரேபியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், சுமார் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் எகிப்தைக் கைப்பற்றியபோது, இந்த கடல்வழிப்பாதையை அவர்கள் கைப்பற்றினார்கள்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இயேசு கிறிஸ்து பிறந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாம் தோன்றி அரேபியர்களின் எழுச்சி ஏற்பட்டபோது, அவர்கள் எகிப்திலிருந்து ஸ்பெயின் வரை பரவினர்; அதே நேரத்தில் மத்தியதரைக் கடலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் விளைவாக, உலகின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் வணிகப் பாதை அரேபியர்களின் கைகளுக்கு வந்தது. பல நூற்றாண்டுகளாக அதன் மீதான கட்டுப்பாடு அவர்களிடம் நீடித்தது.” என்று கூறினார்.
எனவே, பேராசிரியர் ஜாஃப்ரியின் கூற்றுப்படி, அரேபியர்கள் தங்கியிருந்த காலக் கட்டத்தில் இங்கிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அரேபியர்களுக்கும் இந்தியர்களுக்குமான இந்த ஆழமான உறவின் காரணமாக, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஒரு தனித்துவமான இஸ்லாமிய சமூகம் உருவானது. அவர்களே ‘மாப்பிள்ளை முஸ்லிம்கள்’ (Mappila) என்று அழைக்கப்படுகிறார்கள்.

வரலாற்றுச் சான்றுகள் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்
கேரளாவில் முஸ்லிம்கள் வருகை தந்த துல்லியமான ஆண்டை நிர்ணயிப்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்று அவர் கூறுகிறார். ஏனெனில், அரேபிய மாலுமிகள் எந்தக் குறிப்பேடுகளையும் விட்டுச் செல்லவில்லை, தாங்கள் கட்டிய கட்டடங்களில் கல்வெட்டுகளையும் பொறிக்கவில்லை.
ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்திருந்தாலும் கூட, 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின் வருகையின் போதும், அதற்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின் போதும், போர்ச்சுகீசியர்கள் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது மட்டுமன்றி, அவர்களின் வரலாற்று எச்சங்களையும் பெருமளவில் அழித்துவிட்டனர். இதற்கான சான்றுகளை கோவா அருங்காட்சியகத்தில் காணலாம், அங்கு அவை போர்த்துகீசியர்களால் வெற்றிச் சின்னங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியும் வரலாற்று ஆய்வாளருமான சசி தரூர், “இஸ்லாத்தின் எழுச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரபு வணிகர்களும் மாலுமிகளும் மலபார் கடற்கரைக்குத் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தனர்” என்ற உண்மையை அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். புதிய மதமான இஸ்லாம் உருவானபோது, அது வாள் முனையில் திணிக்கப்படவில்லை; மாறாக, உள்ளூர் மக்கள் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்த, அவர்கள் பெரிதும் நம்பிய நம்பிக்கையான பயணிகளின் மூலமாக ஒரு ‘செய்தியாக’ மட்டுமே இங்கு வந்து சேர்ந்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்து மன்னரான சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்ற கதையும் இங்குள்ள மக்களின் வாய்மொழி மரபின் ஒரு பகுதியாக உள்ளது.
கேரளாவின் கொச்சி துறைமுக நகரிலிருந்து அதிகாலையிலேயே நாங்கள் பயணத்தைத் தொடங்கினோம். எங்களுடன் கொச்சி பாரம்பரியத் திட்ட அமைப்பின் நிறுவனர் யுஹான் பெனி கருவில்லா மற்றும் எங்கள் ஒளிப்பதிவாளர் பிமல் தங்கச்சன் ஆகியோர் உடன் வந்தனர். நாங்கள் கொடுங்கல்லூரில் உள்ள பெரியாறு ஆற்றின் கரைக்குச் சென்றோம்; அங்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியா-அரபு கலாசார மையத்தின்’ முன்னாள் இயக்குநரும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகப் பேராசிரியருமான எம்.ஹெச். இலியாஸ் எங்களுக்காகக் காத்திருந்தார்.

இஸ்லாத்தின் வருகை குறித்த பல்வேறு கண்ணோட்டங்கள்
பேராசிரியர் இலியாஸின் கூற்றுப்படி, தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவிய விதம் குறித்து நான்கு கோட்பாடுகள் உள்ளன.
முதலாவது கருத்து என்னவென்றால், இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்நாளிலேயே, பழங்கால முசிறி துறைமுகத்தின் வழியாக இஸ்லாம் இந்தியாவில் நுழைந்துவிட்டது என்பதாகும். இதற்கு ஆதாரமாக சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி திகழ்கிறது. இந்த மசூதி கி.பி. 629 இல் மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மசூதியில் உள்ள கல்வெட்டு இத்தகவலை உறுதிப்படுத்தினாலும், பல வரலாற்றாசிரியர்கள் இதுகுறித்த வரலாற்றை உறுதியாகக் கூறத் தயங்குகின்றனர்; ஏனெனில், சில வாய்மொழி மரபுகள் மாலிக் பின் தினாரை ‘ஸஹாபா’ (Sahaba) பிரிவிலும், வேறு சிலர் அவரை ‘தாபியீன்’ (Tabi’in) பிரிவிலும் வகைப்படுத்துகின்றன.
மசூதியில் உள்ள கல்வெட்டிலும் இதுவே எழுதப்பட்டுள்ளது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் பலர் இதனை வரலாற்று ரீதியாக உறுதியாகக் கூற உடன்படுவதில்லை. ஏனெனில் சில வாய்மொழிக் கதைகளில் மாலிக் பின் தீனார் ‘ஸஹாபாக்கள்’ வரிசையிலும், சிலவற்றில் ‘தாபியீன்கள்’ வரிசையிலும் வைக்கப்படுகிறார்.
‘ஸஹாபாக்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் முஸ்லிமாக இருந்து நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவர்கள் ஆவர்; அதே சமயம் ‘தாபியீன்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தபடி ஏதேனும் ஒரு ஸஹாபியை (நபிகள் நாயகத்தின் போதனைகளால் முஸ்லிமாகி, இறுதிவரை இஸ்லாத்தில் வாழ்ந்தவர்களை) நேரில் பார்த்தவர்கள் ஆவர்.
இந்த மசூதி உருவானது குறித்து பல புராணக் கதைகள் நிலவுகின்றன. கொடுங்கல்லூரை ஆண்ட இந்து மன்னரான சேரமான் பெருமாள், நிலவு பிளந்து துண்டுகளாகும் அற்புதத்தை ஒரு கனவிலோ அல்லது நேரிடையாவோ கண்டதாகவும், அதைப் பற்றி அங்கு வந்திருந்த அரபு வணிகர்களிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு அந்த வணிகர்கள், அரேபியாவில் ஒரு இறைத்தூதர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இது அவருடைய அற்புதம் என்றும் மன்னரிடம் கூறினர்.
இதனால் ஈர்க்கப்பட்ட மன்னர், தனது நம்பிக்கைக்குரிய தோழர்களுடன் அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, அவர் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை நேரில் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றும், பின்னர் அங்கிருந்து தாயகம் திரும்பும் வழியில் ஓமனில் உள்ள ‘சலாலா’ என்ற இடத்தில் அவர் காலமானார் என்றும் கூறப்படுகிறது. அங்கேயே அவருடைய சமதியும் கல்லறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மற்றொரு நம்பிக்கை
பேராசிரியர் இலியாஸின் கூற்றுப்படி, சேரமான் பெருமாள், நபிகளை சந்திக்காமலேயே ஓமனில் இறந்துவிட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும், அவர் மாலிக் பின் தினாரைச் சந்தித்ததாகவும், தனது நாட்டில் உள்ள தனது வாரிசுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் இரு மரபுகளுமே குறிப்பிடுகின்றன; அந்தக் கடிதத்தில் மாலிக் பின் தினார் மற்றும் அவரது தோழர்கள் தனக்கு அளித்த மரியாதை மற்றும் நற்பண்புகள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாலிக் பின் தினார் முசிரி துறைமுகத்தை (இன்றைய கொடுங்கல்லூர்) அடைந்தபோது, மன்னரின் வாரிசு அவரை வரவேற்றது மட்டுமல்லாமல், பள்ளிவாசல் கட்டுவதற்காக அரண்மனைக்கு அருகிலேயே அவருக்கு நிலத்தையும் வழங்கினார். அந்தப் பள்ளிவாசல் இன்றும் அங்கு உள்ளது; அங்கு தினமும் ஐந்து வேளை தொழுகைகள் நடைபெறுகின்றன.
யூஹான் கூறும்போது, ”இந்தப் பள்ளிவாசல் மன்னரின் அரண்மனைக்கு அருகிலேயே அமைந்திருந்தாலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முஸ்லிம் மக்கள் யாரும் வசிக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது; ஆனாலும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து, இதை உயிரோட்டமுள்ள இடமாக மாற்றியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
கேரளா முழுவதும் இஸ்லாம் பரவியதற்கு, குறிப்பாக அதன் சமூக சமத்துவக் கோட்பாடே முக்கிய காரணமாக அமைந்தது என்று பேராசிரியர் இலியாஸ் கூறுகிறார். “அது சமூக நீதியைப் போதித்த விதம், ஏற்றத்தாழ்வு மிக்க சாதி முறைக்கு எதிரான நிலைப்பாடு, பாகுபாடு காட்டுவதை எதிர்த்தது மற்றும் ஒரு சாதி அல்லது இனத்தின் மேலாதிக்கத்தை நிராகரித்தது ஆகியவை இப்பகுதி மக்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன.”
“அரேபியர்கள் அடிப்படையில் வாசனைப் பொருட்கள் வணிகத்துக்காக, குறிப்பாகக் கருப்பு மிளகு வணிகத்துக்காகவே இங்கு வந்தனர். ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் நமக்கு இஸ்லாத்தையும் தாண்டிப் பல விஷயங்களை வழங்கினர். உதாரணமாக, கணக்கு வழக்கு முறைகள் மற்றும் எடை-அளவீட்டு முறைகள் போன்றவற்றை அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தனர்; அவற்றை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். இதுமட்டுமின்றி, படகுகளைக் கட்டும் முறையையும் அரேபியர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தனர்; அவர்களிடமிருந்தே சிறந்த படகுகளை உருவாக்கும் திறனை நாம் கற்றுக்கொண்டோம்.” என்றார் பேராசிரியர் இலியாஸ்.

சேரமான் ஜும்மா மசூதி
கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவிய நிலையில், ‘லுஹர்’ (நண்பகல்) தொழுகை நேரத்தில் நாங்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை சென்றடைந்தோம். அங்கு, லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய மதப்பள்ளியான ‘நத்வதுல் உலமா’வில் கல்வி பயின்ற உள்ளூர் இமாம் சலீம் நத்வியை நாங்கள் சந்தித்தோம்.
மசூதியின் அருகிலுள்ள வளாகத்தில் மாலிக் பின் தீனாரின் மகன் யூசுப் பின் தீனார் மற்றும் அவருடைய மனைவியின் கல்லறைகள் அமைந்துள்ளன என்று அவர் எங்களிடம் கூறினார். மேலும், மாலிக் பின் தீனாரும் அவருடைய தோழர்களும் அதே காலகட்டத்தில் இப்பகுதியில் சுமார் பத்து மசூதிகளையும், கான்காக்கள் எனப்படும் துறவிகள் தங்கும் இடத்தையும் நிறுவினர் என்றும், மாலிக் பின் தீனார் இங்கிருந்து வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரபிக்கடலின் கரையோரம் அமைந்த காசர்கோடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் இலியாஸின் கூற்றுப்படி, சேரமான் மன்னர் மூலமாகவே இந்தியாவில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற ஒரு விஷயத்தில் அனைத்துக் கதைகளும் உடன்படுகின்றன.
அரேபிய வணிகர்கள் மூலமாகவே இஸ்லாம் முதன்முதலில் இந்தியத் துணைக்கண்டத்தின் கடற்கரைப் பகுதிகளை அடைந்தது என்று அவர் கூறினார். 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் அரபு வணிகர்கள் அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் வர்த்தக வழித்தடங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்கள் வர்த்தகப் பொருட்களுடன் தங்கள் கலாசாரம் மற்றும் மத விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வந்தனர்.
கேரளா மற்றும் குஜராத்தின் கடற்கரைப் பகுதிகளில் இருந்த உள்ளூர் ஆட்சியாளர்கள், உதாரணமாக கேரளாவின் சாமோரின் போன்றோர், இந்த அரபு வணிகர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும், அவர்கள் மசூதிகளைக் கட்டுவதற்கும், இப்பகுதிகளில் தங்கி வாழ்வதற்கும் அனுமதி வழங்கினர்.
இந்த பரஸ்பர நல்லுறவின் விளைவாக, உள்ளூர் மக்களுக்கும் அரபு வணிகர்களுக்கும் இடையே ஆழமான உறவுகள் ஏற்பட்டன; இதன் மூலமாகவே படிப்படியாக ‘மாப்பிள்ளை’ போன்ற உள்ளூர் முஸ்லிம் சமூகங்கள் உருவாகின.

படையெடுப்புகள் மூலம் இஸ்லாத்தின் வருகை
‘அரேபியப் படையெடுப்புகள் மற்றும் அரசியல் விரிவாக்கம்’ என்பது இது தொடர்பான ஒரு கண்ணோட்டமாகும். இதன்படி, கி.பி. 712-இல் முகமது பின் காசிமின் தலைமையிலான அரபு ராணுவம் சிந்து மற்றும் முல்தான் பகுதிகளைக் கைப்பற்றியபோதுதான், இந்த துணைக் கண்டத்தில் இஸ்லாத்துக்கு முதல் பெரிய அரசியல் வெற்றி கிடைத்தது.
கடல்சார் கொள்ளையை ஒடுக்கும் நடவடிக்கையின் பின்னணியிலேயே இப்படையெடுப்பு தொடங்கியது. பின்னர், கஸ்னவி மற்றும் கோரி வம்சத்தினரின் படையெடுப்புகள் டெல்லி சுல்தானகத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தன. சில பழங்கால வரலாற்றாசிரியர்கள் இதனை ‘வாள் முனையில் இஸ்லாத்தின் பரவல்’ என்று குறிப்பிட்டிருந்தாலும், நவீன ஆய்வாளர்களின் கருத்துப்படி, இப்படையெடுப்புகளின் உண்மையான நோக்கம் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதே தவிர, மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது அல்ல. மதமாற்றச் செயல்முறை என்பது பெரும்பாலும் படிப்படியாகவும், சமூக ரீதியாகவும் நிகழ்ந்த ஒன்றாகும்.

‘சூஃபிகள் மற்றும் ஞானிகளின் பிரசாரம்’
‘தி கிரேவ்ஸ் ஆஃப் தாரிம்’ என்ற நூல், ஏமன் மற்றும் ஹத்ரமவுத் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்ற இடங்களிலெல்லாம் மசூதிகள், கல்லறைகள் மற்றும் ‘கான்கா’க்கள் எனப்படும் சூஃபி துறவிகள் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்துகிறது என்று பேராசிரியர் ஜஃப்ரி கூறுகிறார். இவை அனைத்தும் அரசியல் இஸ்லாத்தின் வருகைக்கு முன்பே அமைக்கப்பட்ட அமைதி மையங்களாகும், இங்கிருந்தே இஸ்லாம் போதிக்கப்பட்டு பரப்பப்பட்டது.
அந்தப் புத்தகத்தின்படி, கேரளாவின் மலபார் மற்றும் குஜராத்தின் துறைமுகங்கள் போன்ற இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள், வணிகர்களுக்கும் சூஃபிக்களுக்கும் மிக முக்கியமான தளங்களாக விளங்கின. அவர்கள் இங்கிருந்து வணிகம் செய்தது மட்டுமல்லாமல், மலேசியா மற்றும் இந்தோனீசியா வரையிலும் இஸ்லாத்தைப் பரப்பினர்.
11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, சிஷ்தியா, சுஹரவர்தியா மற்றும் இதர மரபுகளைச் சார்ந்த சூஃபி துறவிகள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறினர். அவர்கள் தங்கள் போதனைகளில் அன்பு, சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினர்; இது சாதாரண மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
சூஃபி கான்காக்களும் தர்காக்களும் ஆன்மீக மையங்களாக உருவெடுத்தன, அங்கு அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் வந்து சென்றனர். அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்கா இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்; அங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் பக்தியுடன் வந்து செல்கின்றனர். இவ்வாறு, இஸ்லாத்தைப் பரப்புவதில் சூஃபி இயக்கம் மென்மையான மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேராசிரியர் ஜாஃப்ரியின் கூற்றுப்படி, இஸ்லாத்தின் ‘சமூக சுதந்திரம் மற்றும் சமத்துவ’ கொள்கை மக்களைத் தன் பால் ஈர்த்தது. இக்கொள்கையின் அடிப்படையில், இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பலர் – குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் – கடுமையான சாதி அமைப்பிலிருந்து விடுதலை பெற இஸ்லாத்தை நாடினர்.
இஸ்லாத்தின் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய கோட்பாடுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கின. இருப்பினும், நவீன ஆராய்ச்சியாளர்கள் இந்த சமத்துவக் கோட்பாட்டில் உள்ள சில எல்லைகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில், இந்தியாவில் இஸ்லாம் மிக வேகமாகப் பரவிய சில குறிப்பிட்ட பகுதிகளில், நாட்டின் பிற பகுதிகளைப் போல சாதியக் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேளாண் பாதுகாப்பு மற்றும் அரசு ஒருங்கிணைப்பு
‘விவசாயப் பாதுகாப்பு மற்றும் அரசு ஒருங்கிணைப்பு’ என்பது ஒப்பீட்டளவில் ஒரு நவீன கோட்பாடாகும். இதனை ரிச்சர்ட் ஈட்டன் போன்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர். இக்கோட்பாட்டின்படி, வங்காளம் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் இஸ்லாம் பரவியதற்கு, வேளாண்மை வளர்ச்சி மற்றும் அரசின் கொள்கைகளே முக்கியக் காரணங்களாக அமைந்தன.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் மத நிறுவனங்கள், சூஃபி கான்காக்கள் மற்றும் மசூதிகளுக்குப் தரிசு நிலங்களை (பயன்படுத்தப்படாத நிலங்களை) மானியமாக வழங்கினர். இந்த நிறுவனங்கள் அங்கு புதிய விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கின. இப்பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்; ஏனெனில், அது அவர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசாங்கக் கட்டமைப்பின் ஓர் அங்கமாக மாறியிருந்தது.
இவற்றிலிருந்து, இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம் பரவியது ஒரு தனிப்பட்ட காரணத்தினால் மட்டும் நிகழவில்லை என்பதும், பல்வேறு காரணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டாலேயே அது சாத்தியமானது என்பதும் தெளிவாகிறது. வணிகம், ஆன்மீகம், அரசியல், சமூக நீதி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு வரலாற்றுச் செயல்முறையை உருவாக்கின; இச்செயல்முறை அப்பகுதியின் மத மற்றும் கலாசார அடையாளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு