14
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுக்கு அருகில் பயணிகள் படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 270 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸின் கைரேனியா (கிர்னே) நகரில் இருந்து துருக்கியின் தாசுகு நகரை நோக்கி இன்று (30) பயணித்த ‘பிலோ டெனிஸ்சிலிக்’ நிறுவனத்துக்குச் சொந்தமான கேடமரான் படகே விபத்துக்குள்ளானது.
குறித்த படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேனியாவில் இருந்து சுமார் 5 முதல் 7.5 கிலோமீற்றர் தொலைவில் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, படகுக்குள் திடீரென நீர் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த படகின் கப்டன் உடனடியாக கரையை நோக்கி திரும்ப முயற்சித்துள்ளார். எனினும், கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மற்றுமொரு பாரிய அலையின் தாக்கத்தில் படகு முழுமையாகக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படைப் படகுகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் படகுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடலில் தத்தளித்த பயணிகள் மற்றும் படகின் பணியாளர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிலர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் நிக்கோசியா தூதர் அலி முராத் பாஸ்கெரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மீட்கப்பட்டவர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்குவதற்காக கைரேனியா துறைமுகத்தில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.