இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? இது யுபிஐ மற்றும் கிரிப்டோவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? முன்னோடித் திட்டத்தில் எந்தெந்த வங்கிகள் இணைந்துள்ளன, இதில் எப்படி இணைவது?
மேலும் டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் ரொக்கப் பணத்திற்கு மாற்றாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
டிஜிட்டல் கட்டண முறையை விரிவுபடுத்தவதையும், வாடிக்கையாளர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆஃப்லைன் டிஜிட்டல் ரூபாயை (e₹) அறிமுகப்படுத்தியது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, டிஜிட்டல் ரூபாய் அல்லது e₹ என்பது இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி ஆகும் (சிபிடிசி).
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிஜிட்டல் ரூபாய் அல்லது e₹ என்பது இந்தியாவின் காகிதப் பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படுகிறது. e₹ முற்றிலும் ரொக்கப் பணத்தைப் போலவே செயல்படுகிறது, அதன் மதிப்பும் அதேதான். இதற்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் உண்டு.
நீங்கள் இதை உங்கள் போனில் உள்ள டிஜிட்டல் வாலட்டில் வைத்துக்கொள்ளலாம். சாதாரண ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவது போலவே, பணம் அனுப்பவும், பெறவும் மற்றும் கட்டணம் செலுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. காகிதப் பணத்தைப் போலவே இதன் விநியோகத்தை வங்கிகள் கையாளுகின்றன. ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை உருவாக்கி, அதனை மின்னணு முறையில் வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு அனுப்புகிறது.
அதன்பிறகு, இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இணைக்கவும் , அவர்களின் மொபைல் போன்களில் e₹ வாலட்டை அமைக்கவும் உதவுகின்றன. அன்றாடப் பரிவர்த்தனைகளுக்கான e₹ பயன்பாடு டிசம்பர் 1, 2022 முதல் முன்னோடித் திட்ட அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தற்போது, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுடன் இணைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
e₹- இதை எவ்வாறு பயன்படுத்தவும் முடியும்?
வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் வாலட்கள் மூலம் நீங்கள் e₹-ஐ சேமித்து பயன்படுத்தலாம். இந்த வாலட்கள் நேரடியாக ஒரு நபருக்கோ அல்லது வியாபாரிக்கோ பணம் செலுத்த உதவுகின்றன.
இதனை தொடங்குவதற்கு, பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து e₹ வாலட் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு உங்கள் வங்கி அல்லது வாலட் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். கடைக்காரரிடம் உள்ள சிபிடிசி கியூஆர் குறியீடு அல்லது கடையில் உள்ள யுபிஐ கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
பயன்படுத்த சேமிப்புக் கணக்கு அவசியமா?
பட மூலாதாரம், Getty Images
e₹-ஐப் பயன்படுத்த சேமிப்புக் கணக்கு அவசியமா என்பது மற்றொரு கேள்வியாகும்.
தற்போது, e₹ வாலட் தொடங்குவது பயனரின் சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்யும் முறை எளிதாகிறது மற்றும் தனியாக கேஒய்சி (KYC) செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கருத்துகள் மற்றும் பயன்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில் புதிய மாடல்களை ஆராய்ந்து வருவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் தற்போது முன்னோடித் திட்ட நிலையில் உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் ரூபாய் Vs யுபிஐ
டிஜிட்டல் ரூபாய் என்பது யுபிஐ பரிவர்த்தனை போலவே தோன்றலாம், ஆனால் இரண்டிற்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. யுபிஐ என்பது ஒரு கட்டண முறை, இது பணம் அல்ல.
இது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்ற உதவும் ஒரு வசதி மட்டுமே. எளிமையாகச் சொன்னால், யுபிஐ வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது, ஆனால் டிஜிட்டல் ரூபாய் என்பதே ஒரு பணம் தான், அது டிஜிட்டல் வடிவில் உள்ளது.
நீங்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் குறைகிறது. ஆனால் e₹ பயன்படுத்தும்போது, உங்கள் வாலட்டில் உள்ள டிஜிட்டல் ரொக்கத்தை மாற்றுகிறீர்கள். இது காகித நோட்டுகளைப் போலவே நேரடியாக ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லும். மேலும், யுபிஐ பரிவர்த்தனையில் வங்கியின் பங்கு அவசியம், ஆனால் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை ரொக்கத்தைப் போலவே செயல்படும்.
டிஜிட்டல் ரூபாய் Vs கிரிப்டோகரன்சி
பட மூலாதாரம், Getty Images
பிட்காயின் அல்லது பிற கிரிப்டோகரன்சிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாதவை. ஆனால் டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் ரூபாய் ஒரு சட்டப்பூர்வமான கரன்சி, ஆனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது.
19 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பில் இணைந்துள்ளன.
இந்த வங்கிகள் மொபைல் செயலிகள் மூலம் வாலட் வசதியை வழங்குகின்றன. தற்போது இது முன்னோடித் திட்டமாக இருப்பதால், வங்கிகள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை அழைக்கலாம் அல்லது படிப்படியாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தலாம். இதில் இணைய நீங்கள் வங்கியின் சிபிடிசி வாலட் செயலியைப் பதிவிறக்கி, கேஒய்சி மற்றும் பதிவை முடித்து, வங்கிக் கணக்கை இணைத்து வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டும்.
டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் ரொக்கப் பணத்தின் இடத்தை பிடிக்குமா?
டிஜிட்டல் ரூபாயின் நோக்கம் தற்போதுள்ள நாணய வடிவங்களை மாற்றுவது அல்ல, மாறாக அவற்றுக்கு ஒரு துணையாக இருப்பதே என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது.
இந்தியா இன்னும் பெருமளவில் ரொக்கப் பணத்தையே சார்ந்துள்ளது, குறிப்பாகக் கிராமப்புறங்களில். டிஜிட்டல் ரூபாய், ரொக்கப் பணத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், டிஜிட்டல் கட்டண வசதியையும் வழங்கும். இது பண மேலாண்மைச் செலவைக் குறைக்கவும், பரிவர்த்தனை திறனை அதிகரிக்கவும் மற்றும் எதிர்காலத்தில் இணையம் இல்லாத ஆஃப்லைன் கட்டணங்களைச் சாத்தியமாக்கவும் உதவும்.