பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, பிபிசி ரஷ்ய சேவை ஆசிரியர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வியாழக்கிழமை நடைபெறவுள்ள விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங் ஆகியோர் இடையிலான சிறிய உச்சி மாநாடு ஏற்கெனவே ரஷ்யாவுக்கு சாதகமான ஒன்றாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் சரி.
2022-ஆம் ஆண்டை நினைத்துப் பாருங்கள். யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, புதின் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவையும் அதன் தலைவரையும் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஆனால், 2026-ஆம் ஆண்டில் நிலைமை மாறியுள்ளது. சீனாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சந்திப்பில் புதில் கலந்துகொள்கிறார்.
வரலாற்றிலேயே முதல்முறையாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மூவர் மட்டுமே நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
புதின் விரும்பிய இடத்துக்கு அவர் வந்துவிட்டார்: உலக அரசியலின் முக்கியத் தலைவர்கள் அமரும் உயர்மட்ட மேடையில், இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்களுடன் இணைந்து அமரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று பெருமையாகக் கூறிக்கொள்ளவும் இந்தச் சந்திப்பு அவருக்கு வாய்ப்பளிக்கிறது.
“முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகள் மூலம் அழுத்தத்தை எதிர்கொண்ட ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த முயற்சிகளிலும் இதுபோன்ற உதாரணங்களைக் காணலாம்” என்று ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வர்த்தகக் கூட்டத்தில் புதின் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, ஷி ஜின்பிங்குடனான புதின் சந்திப்பு நடைபெற்றது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள இந்த மும்முனைச் சந்திப்புதான் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்று ரஷ்யா கூறுகிறது. இதில் புதின், ஷி ஜின்பிங், டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ரஷ்ய ராணுவம் தொடர்ந்து யுக்ரேனின் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நிபந்தனையற்ற, விரிவான போர் நிறுத்தம் என்ற யோசனையை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இத்தகைய சூழலிலும், உலகத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள இந்தச் சந்திப்பு புதினுக்கு வாய்ப்பளிக்கிறது.
இந்த ஒரு குறுகிய சந்திப்பு உலகையே மாற்றிவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தச் சந்திப்பின் மூலம் வெளிப்படும் காட்சிதான் முக்கியம். அந்தப் புகைப்படம் முக்கியம். மூன்று நாடுகளின் தலைவர்கள், மூன்று பெரிய சக்திகள், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பது போன்ற காட்சி.
ஒருவகையில், இந்தச் சந்திப்பைப் பயன்படுத்தி விளாடிமிர் புதின் உலக நாடுகளுக்கு ஒரு வாழ்த்து அட்டையை அனுப்புவார். அதில், “நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும்” என்று எழுதுவதற்குப் பதிலாக, “பாருங்கள், நான் இங்கே இருக்கிறேன்” என்று எழுதுவார்.
ஆனால், இந்தச் சந்திப்பில் இடம்பெறாத நாடுகளின் நிலை என்ன?
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும், குறிப்பாக யுக்ரேனும், இந்த மும்முனைச் சந்திப்பு ஒரு புகைப்படத்துடன் முடிந்துவிடாமல் வேறு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று கவலைப்படுகின்றனர்.
ஆனால், அந்த விளைவுகள் யுக்ரேனுக்கு சாதகமாக இருக்காது என்பதே அவர்களின் அச்சம்.
ஷென்சென் நகரில் நடைபெறும் சந்திப்பில், ”தனக்குப் பிடித்தமான விவகாரமான” யுக்ரேன் போர் குறித்து விவாதிக்க விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் தலைவர்களோ, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோ அந்த அறையில் இல்லாத நிலையில், தனது தரப்பு நியாயங்களை டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கிடம் எடுத்துரைக்கக் கிடைக்கும் வாய்ப்பை ரஷ்யா வரவேற்கும்.
பட மூலாதாரம், Reuters
கடந்த மாதம், புதின் – டிரம்ப் – ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற யால்டா மாநாட்டைப் போல அமைந்துவிடுமோ என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்க, அப்போது சோவியத் ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களான ஜோசப் ஸ்டாலின், வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஆகியோர் அந்த மாநாட்டில் சந்தித்தனர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, “செல்வாக்கைப் பகிர்ந்துகொள்வது போன்ற வகையில், இது ‘யால்டா 2, 3, 4’ என்று மாறுவதை நாங்கள் உண்மையிலேயே விரும்பவில்லை” என்று ஸெலென்ஸ்கி கூறினார்.
ஷென்சென் நகரில் நடைபெறும் இந்த மும்முனைச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் யுக்ரேன் போரைச் சேர்க்க சீனா விரும்புமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சந்திப்பு குறித்து சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கைகளில், யுக்ரேன் போர் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, “உலக அமைதியைப் பாதுகாப்பது, வியூக ரீதியான நிலைத்தன்மையை மேம்படுத்துவது” குறித்து விவாதிக்க வேண்டியதன் அவசியத்தைப் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Reuters
ஷென்சென் நகரில் நடைபெறும் இந்தச் சந்திப்பின் மூலம் கிடைக்கும் காட்சியை ரஷ்யா முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால், ராஜ்ஜிய ரீதியிலான வெற்றி என்பது ராணுவ வெற்றிக்கு இணையானது அல்ல.
அதிபர் புதின், ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று குறிப்பிட்ட படையெடுப்பைத் தொடங்கி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், யுக்ரேன் மீதான போரில் வெற்றி பெற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தக் காலகட்டத்தில், போர்க்களத்தில் ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.
மேலும், உச்சி மாநாட்டுக்கு முந்தைய நாளில், ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது யுக்ரேன் நடத்திய தாக்குதல், ரஷ்யாவுக்கு பின்னடைவாக அமைந்தது.
யுக்ரேனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பிறகு கட்டப்பட்ட, பல பில்லியன் டாலர் மதிப்பிலான அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்தச் சேதம் ரஷ்ய அதிகாரிகளுக்குப் போக்குவரத்து ரீதியிலான சிக்கலை மட்டுமல்ல, அதையும் தாண்டிய விளைவைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் குறிப்பிட்ட ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்பதை இது நினைவூட்டுகிறது.
ஷென்சென் உச்சி மாநாடு விளாடிமிர் புதினுக்கு ஒரு பெரிய மேடையையும், உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுத் தரலாம்.
ஆனால், அது அவரைப் போரில் வெற்றி பெறுவதற்கு நிச்சயமாக நெருக்கமாகக் கொண்டுசெல்லாது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு