தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
வைரஸ் தொற்றுகள்
மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது.
அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்
அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13 ஆயிரத்து 573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பாதிப்புகள் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, கோவையில்…
அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது.
இதில் அதிகம் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13.573-ல் சென்னையில் மட்டும் 2.584 ஆக உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்காலம்
ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து. ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.
இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான எண்ணிக்கையில் 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேற தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.
பன்றிக் காய்ச்சல்
இதேபோல் பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது.
2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 ஆக உள்ளது.
மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவனம் வேண்டும்
இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?
சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-
சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது தான். மக்கள்தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.