பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital
படக்குறிப்பு, நோயாளி டிம் ஆண்ட்ரூஸ் (நடுவில்), மருத்துவர் டட்சுவோ கவாய் (இடது), மருத்துவர் லியோனார்டோ ரியெல்லா (வலது)கட்டுரை தகவல்
எழுதியவர், ஜேம்ஸ் கல்லேகர்
பதவி, சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பன்றியிடம் இருந்து மனிதருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், அவரது உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது. மனித உடலில் பன்றியின் சிறுநீரகம் செயல்பட்டதிலேயே மிக நீண்ட காலம் இருந்தது இதுவே முதல்முறை என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தனக்கு “நம்பிக்கையை” அளித்ததாகவும், ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக டயாலிசிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல மாதங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவியதாகவும் டிம் ஆண்ட்ரூஸ் கூறினார்.
அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், மனித சிறுநீரகம் கிடைக்கும் வரை பன்றியின் உறுப்பை ஒரு “பாலமாக” பயன்படுத்த முடியும் என்பதை இந்தச் சிகிச்சை காட்டுவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், பன்றியின் சிறுநீரகம் இறுதியில் செயலிழந்ததால் அது அகற்றப்பட்டது. அதன் பிறகு, மனித தானதாரரிடம் இருந்து சிறுநீரகம் கிடைக்கும் வரை ஆண்ட்ரூஸ் மீண்டும் சிறிது காலம் டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வேறு உயிரினங்களின் உறுப்புகளைப் பயன்படுத்தும் முறையை, அதாவது வேற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சையை, உறுப்பு பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வழியாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு சுமார் 25,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே நடைபெறுகின்றன.
பிரிட்டனில் 7,000க்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் தனது முறை வருவதற்கு ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆண்ட்ரூஸிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேவேளையில், டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital
படக்குறிப்பு, ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த அறுவை சிகிச்சைக்கு டிம் ஆண்ட்ரூஸ் தயாராகி வந்தபோது…
“எனக்குப் போதுமான கால அவகாசம் இல்லை… அது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது,” என்று ஆண்ட்ரூஸ் கூறினார். ஆனால், பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தும் யோசனை தனக்கு “சுரங்கத்தின் முடிவில் தெரியும் வெளிச்சத்தைப் போன்ற நம்பிக்கையை” அளித்ததாக அவர் தெரிவித்தார்.
“நம்பிக்கைதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. அந்த [டயாலிசிஸ்] இயந்திரத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு அது,” என்று அவர் கூறினார்.
பன்றி உறுப்புகள் பயன்படுத்தப்படுவது ஏன்?
வேற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு பன்றிகள் பொருத்தமான விலங்குகளாகக் கருதப்படுகின்றன. அவற்றின் உறுப்புகள் மனித உறுப்புகளுக்கு ஏறக்குறைய பொருத்தமான அளவில் உள்ளன. மேலும், பன்றிகள் பல ஆண்டுகளாக பண்ணைகளில் வளர்த்து வருவதால், அவற்றைக் கையாள்வதில் ஆய்வாளர்களுக்கு நீண்ட கால அனுபவமும் உள்ளது.
ஆனால், ஒரு பன்றிப் பண்ணைக்குச் சென்று, பன்றியிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து அதை அப்படியே மனிதருக்குப் பொருத்திவிட முடியாது.
மனித உடல் அந்த உறுப்பை உடனடியாக அந்நியமானதாக அடையாளம் கண்டு, அதன் மீது கடுமையான நோய் எதிர்ப்புத் தாக்குதலைத் தொடுக்கும். இதனால் அந்தச் சிறுநீரகம் அழிக்கப்படும்.
பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital
படக்குறிப்பு, மனிதர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றும் வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்து சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டிருந்தது
உடலில் பொருத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே சிறுநீரகம் கருமையாக மாறக்கூடும். அதன் ஒவ்வொரு அணுவிலும் துளைகள் ஏற்பட்டு, உறுப்புக்கு உள்ளேயே ரத்தம் உறையத் தொடங்கும்.
இதற்குத் தீர்வு காண, யுகடான் சிறிய ரகப் பன்றிகளின் (Yucatan miniature pigs) மரபணுத் தொகுப்பில் ஆராய்ச்சியாளர்கள் 69 மாற்றங்களைச் செய்துள்ளனர். அவற்றின் உறுப்புகளை மனித உடலுக்கு ஏற்றவாறு “மனிதமயமாக்குவதே” இதன் நோக்கம்.
இந்த மரபணுத் திருத்தங்களில் சில, மனித நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு தாக்கும் பன்றிகளின் செல்களில் உள்ள குறிப்பிட்ட அம்சங்களை அகற்றுகின்றன. மேலும், பன்றியின் திசுக்களை மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து மறைப்பதற்காக மனித டிஎன்ஏ-வின் சில பகுதிகள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒரு வகையில் மறைப்பு வலை போலச் செயல்படுகின்றன.
பன்றியின் மரபணுத் தொகுப்புக்குள் மறைந்திருக்கும் வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் வகையிலும் கூடுதல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital
படக்குறிப்பு, அந்த உறுப்பு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வகையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியின் சிறுநீரகத்தை டிம் ஆண்ட்ரூஸின் உடலுக்குள் இருந்த ரத்த நாளங்களுடன் இணைத்தனர்
ஆண்ட்ரூஸின் சிறுநீரகத்திற்கு என்ன ஆனது?
டைப் 2 நீரிழிவு நோயின் காரணமாக ஆண்ட்ரூஸுக்கு இறுதிக் கட்ட சிறுநீரக நோய் ஏற்பட்டிருந்தது. அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து கொண்டிருந்தன. 2025 ஜனவரி 25ஆம் தேதி அவருக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அப்போது அவருக்கு 66 வயது.
மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியதாக தி லான்செட் மருத்துவ ஆய்விதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் தொடர்ந்து செயல்பட்டது. 2025 அக்டோபரில் அது அகற்றப்பட்டது. அதன் பிறகு ஆண்ட்ரூஸ் 82 நாட்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றார். இந்த ஆண்டு ஜனவரியில் மனித தானதாரரிடம் இருந்து அவருக்கு சிறுநீரகம் கிடைத்தது. அந்தச் சிறுநீரகம் தற்போது நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
மாஸ் ஜெனரல் பிரிகாமின் மாற்று அறுவை சிகிச்சை அறிவியல் மையத்தைச் சேர்ந்த மருத்துவர் லியோனார்டோ ரியல்லா, மாற்று அறுவை சிகிச்சைக்குக் கிடைக்கும் உறுப்புகளின் பற்றாக்குறை காரணமாக “நாம் ஒரு நெருக்கடியில் இருக்கிறோம்” என்று கூறினார்.
“நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிப்பதற்காக நாங்கள் மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். உயிருடன் இருக்கும் தானதாரர் கிடைக்காத நோயாளிகளுக்கு வேற்றின உறுப்பு மாற்று சிகிச்சை ஒரு மாற்று வழியாக அமையலாம் என உறுதியாக நம்புகிறோம். இதன் மூலம் அவர்கள் டயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்த்து, மனித உறுப்பு கிடைக்கும் வரை காத்திருக்க முடியும்,” என்றார்.
பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital
படக்குறிப்பு, பிப்ரவரி 1, 2025 அன்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் டிம் ஆண்ட்ரூஸும் அவரது மனைவி கேரனும்…
ஆண்ட்ரூஸின் உடலில் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை அவரது நோய் எதிர்ப்பு மண்டலம் நிராகரிக்கத் தொடங்கியதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளில் மாற்றம் செய்து அந்தப் பிரச்னையை மருத்துவர்கள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள் சேதமடையத் தொடங்கின. அந்த உறுப்பில் அழற்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் செயல்பாடும் குறையத் தொடங்கியது.
அந்தச் சிறுநீரகம் ஏன் செயலிழந்தது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆண்ட்ரூஸின் உடலில் உருவான எதிர்ப்புரதங்கள் பன்றியின் சிறுநீரகத்தைத் தாக்கியதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
மருத்துவர்கள் தி லான்செட் இதழில் வெளியிட்டுள்ள ஆய்வில், “மனிதர்களுக்கான சிறுநீரக வேற்றின உறுப்பு மாற்று சிகிச்சையின் சாத்தியக் கூறுகளையும், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சவால்களையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.