தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 10) சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிகிறார்.
சர்ச்சை:
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தேவைப்பட்ட பெரும்பான்மையை தேர்தலில் வெற்றி பெற்ற இதர கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டர்.
முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்ட விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தனித்தீர்மானம்:
தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இதனையொட்டி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் த.வெ.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது.
தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர். பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.