• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! | சிவசக்தி ஆனந்தன்

Byadmin

Jun 20, 2026


இந்திய அரசுடன் தமிழ்க் கட்சிகள் ராஜதந்திர உறவை பலப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அதுவே எமக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று (19) நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

போர் முடிந்து 17 வருடங்கள் ஆகியும் எமது மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைக் கூட எங்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

புதிய அரசியலமைப்பு விடயத்திலோ அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற விடயம் உட்பட பல விடயங்களிலோ இந்த அரசாங்கம் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

மாறியுள்ள புதிய உலக அரசியல் ஒழுங்கானது  மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடியும். இஸ்ரேல், ஈரான், உக்ரேன், ரஷ்ய போர்களை பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் சபையை தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்பது தமிழ் மக்களை மீண்டும் பின்நோக்கித் தள்ளுகின்ற நிலையினை உருவாக்கும் என்பது புலனாகின்றது.

எனவே அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு புள்ளியில் ஒன்றிணையவேண்டிய தேவைப்பாடு உள்ளது. அந்த வகையில் இந்திய அரசுடன் தமிழ்க் கட்சிகள் ராஜதந்திர உறவை பலப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அது ஒன்றே எமக்கு இருக்கக்கூடிய சந்தர்ப்பம்.

இந்த அரசு தீர்வினை தருவார்கள் என்று வெறுமனே பாராளுமன்றத்துக்குள் இருந்து எதனையும் செய்ய முடியாது.

தமிழர்களின் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக புதுடில்லி அரசாங்கத்துடன் பேசுவதன் ஊடாகவே குறைந்தபட்சமான தீர்வினையாவது காணமுடியும். அதுவே இந்த போரில் உயிரிழந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் செய்கின்ற அர்ப்பணிப்பாக இருக்கும்.

எனவே தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இதுவே இந்த தியாகிகள் தினத்தில் நாங்கள் விடுக்கின்ற பிரதான கோரிக்கை என்றார்.

By admin