• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

Byadmin

Nov 15, 2026


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தற்போதைய தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69ஆவது வயதில் நேற்றிரவு (14) காலமானார்.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சிவாஜிலிங்கம் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு 11.35 மணியளவில் தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

சில வருடங்களாக சிறுநீரகச் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்துக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையிலேயே நேற்றிரவு காலமானார்.

வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாகத் தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகப் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகப் பொறுப்பேற்று, மக்கள் சேவையை முன்னெடுத்து வந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டுத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.

அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அவரது மறைவுக்குத் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தற்போதைய தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுத் தகவல் அறிந்து, வணக்கம் இலண்டன் இணையதளம் ஆழ்ந்த கவலையும் துயரமும் அடைகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு, தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கும், வல்வெட்டித்துறை மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் இலண்டன் இணையதளம் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், இப்பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்க இறைவனை வேண்டுகின்றோம்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

வணக்கம் இலண்டன் இணையதளம்

By admin