பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், டாக்டர் ஹிமானி
- பதவி, பிபிசிக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், கணினிகள் மற்றும் புத்தகங்களுடனேயே கழிக்கிறார்களா?
வெளியில் விளையாடுவதும், திறந்தவெளிகளில் நேரம் செலவிடுவதும் குறைந்து வருவதால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறதா?
‘மையோபியா’ என்றால் என்ன? மின்னணு திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது இதற்குக் காரணமாக இருக்குமா?
அட்ரோபின் கண் சொட்டு மருந்துகள் அல்லது பிரத்யேகக் கண்ணாடிகள் மூலம் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியுமா?
இந்தப் பாதிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
கண்பார்வை பற்றி இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான விடைகளை தெரிந்துக்கொள்வோம்.
இன்றைய குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பொதுவான கண் பிரச்னைகளில் ஒன்று ‘மையோபியா’. இது பொதுவாக ‘கிட்டப்பார்வைக் குறைபாடு’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளால் அருகில் இருக்கும் பொருட்களைப் புத்தகங்கள், அலைபேசிகள் போன்றவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், கரும்பலகை, தொலைக்காட்சி, சாலையில் உள்ள குறியீட்டுப் பலகைகள், மற்றவர்களின் முகங்கள் போன்ற தொலைவில் உள்ளவற்றைப் பார்க்கும்போது அவை மங்கலாகத் தெரியும்.
முன்பு, இந்தப் பாதிப்பு பெரும்பாலும் பதின்ம வயதில்தான் கண்டறியப்பட்டது. ஆனால், இப்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் வயதிலேயே பல குழந்தைகளுக்கு மையோபியா ஏற்படுகிறது.
மிகச் சிறிய வயதிலேயே இந்தப் பாதிப்பு தொடங்கினால், குழந்தைகள் வளர வளரப் பார்வைக் குறைபாட்டின் அளவும் வேகமாக அதிகரிக்கலாம். எனவே, அவர்களுக்குக் கண்ணாடி அணிவிப்பது மட்டுமே போதாது. மையோபியா மேலும் தீவிரமடையாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம்.
பட மூலாதாரம், Getty Images
கிட்டப்பார்வைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
பொதுவாக, நாம் பார்க்கும் ஒரு பொருளிலிருந்து வரும் ஒளி, கண்ணின் கார்னியா மற்றும் லென்ஸ் வழியாகச் செல்லும்போது ஒளிவிலகல் அடைந்து, விழித்திரையில் குவிகிறது.
ஆனால், கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவியாமல், அதற்கு முன்னதாகவே குவிந்துவிடுகின்றன. இதற்குக் கண்ணின் நீளம் இயல்பைவிட அதிகமாக இருப்பது அல்லது அதன் ஒளியை வளைத்து குவிக்கும் திறன் அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம். இதனால், தொலைவில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரிகின்றன.
கிட்டப்பார்வை பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தொடங்குகிறது. குழந்தைகளின் உடல் வளரும்போது கண்களும் வளர்வதால், இந்தப் பார்வைக் குறைபாட்டின் அளவும் அதிகரிக்கலாம். குறிப்பாக, 6 முதல் 12 வயதுக்குள் கிட்டப்பார்வை தொடங்கினால், அதன் தீவிரம் துரிதமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளிடையே கிட்டப்பார்வை அதிகரிப்பதற்கான காரணங்கள் யாவை?
மையோபியா எனும் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இரண்டுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மரபணு காரணிகள்
பெற்றோரில் ஒருவருக்குக் கிட்டப்பார்வை இருந்தால், அவர்களின் குழந்தைக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றால், இரு பெற்றோருக்குமே கிட்டப்பார்வை பாதிப்பு இருந்தால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் மேலும் அதிகரிக்கும். இருப்பினும், பெற்றோர் இருவருக்கும் பார்வைக் குறைபாடு இல்லாத நிலையிலும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை ஏற்படலாம்.
அருகில் உள்ளவற்றை நீண்ட நேரம் பார்ப்பது
புத்தகங்கள் வாசிப்பது, அலைபேசிகளைப் பயன்படுத்துவது, டேப்லெட் மற்றும் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற செயல்களால் கண்கள் தொடர்ந்து அருகில் உள்ள பொருட்களையே பார்க்க வேண்டியிருக்கும். இத்தகைய செயல்களில் அதிக நேரம் ஈடுபடுவது கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, புத்தகங்கள் அல்லது அலைபேசிகளை கண்களுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டு, இடைவேளையின்றி நீண்ட நேரம் பார்ப்பது இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
வெளியில் விளையாடும் நேரம் குறைவது
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களில் நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொண்டு, வீட்டிற்குள்ளேயே அலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் காணொளி விளையாட்டுகளில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால், இயற்கையான பகல் வெளிச்சத்தில் இருக்கும் நேரமும் குறைகிறது. இவ்வாறு வெளியில் செலவிடும் நேரம் குறைவதும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடம் அதிகமாக காணப்படும் பார்வைத்திறன் குறைபாடு
ஆய்வுகளின்படி, வெளியில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே கிட்டப்பார்வை பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
1990-ஆம் ஆண்டில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் சுமார் 24.3 சதவீதத்தினருக்குக் கிட்டப்பார்வை இருந்தது. இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 35.8 சதவீதமாக உயர்ந்தது.
2024-ஆம் ஆண்டு ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மாலஜி’ இதழில் வெளியான விரிவான ஆய்வின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் 39.8 சதவீதத்தினருக்குக் கிட்டப்பார்வை ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 740 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
இந்திய நகர்ப்புறங்களிலும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்தப் பாதிப்பு, 1999-ஆம் ஆண்டில் 4.44 சதவீதமாக இருந்தது. இது 2019-ஆம் ஆண்டில் 21.15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
குழந்தைகளிடம் கிட்டப்பார்வையின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறியலாம்?
சிறு குழந்தைகளுக்குத் தங்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்பது தெரியாமல் இருக்கலாம். அதனால், அவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதையும் பெற்றோரிடம் சொல்லத் தெரியாமல் போகலாம். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனித்து, பார்வைக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
- உதாரணமாக, தொலைக்காட்சி அல்லது அலைபேசித் திரைக்கு மிக அருகில் அமர்ந்து பார்ப்பது
- வகுப்பறையில் கரும்பலகையில் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கச் சிரமப்படுவது
- தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்கும்போது கண்களைச் சுருக்கிக்கொள்வது
- புத்தகங்களை வாசிக்கும்போது கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்ப்பது
- அடிக்கடி தலைவலி அல்லது கண் சோர்வு ஏற்படுவது
- தொலைக்காட்சியிலோ கரும்பலகையிலோ உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லை என்று குழந்தைகள் கூறுவது
- படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவது அல்லது கல்வித் திறன் குறைவது/
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், கண் மருத்துவர் அல்லது கண் பரிசோதனை நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் அவர்கள் குழந்தையின் பார்வைத்திறனைப் பரிசோதித்து, கிட்டப்பார்வை பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
கிட்டப்பார்வைக்கு சிகிச்சையளிக்க மூக்குக்கண்ணாடிகள் மட்டும் போதுமானதா?
கிட்டப்பார்வை சிகிச்சை முறையில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன:
- தற்போதுள்ள பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்தல் மற்றும் எதிர்காலத்தில் கண்ணின் ஒளிவிலகல் பிழையில் (கண்ணாடி அல்லது லென்ஸ் பவர்) ஏற்படக்கூடிய அதிகரிப்பைக் கூடுமானவரை குறைத்தல்.
- சாதாரணக் கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் தொலைவில் உள்ள பொருட்களைத் தெளிவாகக் காண உதவினாலும், அவை மட்டுமே கண்ணின் நீள அதிகரிப்பைக் கட்டுப்படுத்தப் போதுமானவை அல்ல.
இதனால்தான், தற்காலத்தில் கிட்டப்பார்வைக் கட்டுப்பாட்டுச் சிகிச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கிட்டப்பார்வைக் கட்டுப்பாட்டில் கண் சொட்டு மருந்தின் பங்கு
குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை வேகமாக அதிகரித்தால், கண் மருத்துவர்கள் குறைந்த செறிவுள்ள சில வகையான கண் சொட்டு மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். இவை கண்ணின் நீளம் அதிகரிக்கும் வேகத்தைக் குறைத்து, கிட்டப்பார்வை மேலும் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆனால், இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஒளியைப் பார்க்கும்போது கூச்சம் ஏற்படுவது, கண்ணின் நடுப்பகுதி பெரிதாக விரிவடைவது, அருகில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் தற்காலிகச் சிரமம் ஏற்படுவது, கண்களில் எரிச்சல் அல்லது ஒவ்வாமை உண்டாவது ஆகியவை அவற்றில் அடங்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி இந்தக் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது மிகவும் முக்கியம். சிகிச்சையை எப்போது தொடங்குவது, எந்த அளவு மருந்தைப் பயன்படுத்துவது, எப்போது மருந்தின் அளவை மாற்றுவது அல்லது சிகிச்சையை நிறுத்துவது என்பதை கண் மருத்துவரே தீர்மானிக்க வேண்டும்.
சில நேரங்களில், கண் சொட்டு மருந்துகளை நிறுத்திய பிறகு கிட்டப்பார்வை மீண்டும் வேகமாக அதிகரிக்கக்கூடும். இது ‘மீள் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
கிட்டப்பார்வை கட்டுப்பாட்டு லென்ஸ்கள்
சாதாரணக் கண்ணாடிகளைப் போலன்றி, கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்தவென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லென்ஸ்கள், கண் நீட்சியடைவதைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை.
இதற்கான முக்கிய உதாரணங்கள்:
- பல பிரிவுகளில் குவியமற்ற ஒளியை உருவாக்கும் தொழில்நுட்பம்
- மிகவும் வளைவுத் தன்மை கொண்ட சிறிய லென்ஸ் பகுதிகளைக் கொண்ட தொழில்நுட்பம்
இவை தவிர, மல்டிஃபோக்கல் காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் ஆர்த்தோகெரட்டாலஜி போன்ற பிற முறைகளும் கிட்டப்பார்வையைக் கையாளப் பயன்படுத்தப்படுகின்றன. எந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, குழந்தையின் வயது, அவர்களின் கண் பார்வைத் திறன், கிட்டப்பார்வை அதிகரிக்கும் வேகம் மற்றும் குடும்பப் பின்னணி போன்ற காரணிகளைப் பொறுத்தே அமையும்.
கிட்டப்பார்வைத் தடுப்பு – வெளிப்புற விளையாட்டுகளின் முக்கியத்துவம்
கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, குழந்தைகள் தினமும் வெளியில் நேரம் செலவிடுவதை ஊக்குவிப்பது மிகவும் எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
குழந்தைகள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரமாவது இயற்கையான பகல் வெளிச்சத்தில் வெளிப்புறச் சூழலில் இருக்குமாறு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
இதற்காக, கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன் போன்ற வெளிப்புற விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடச் செய்யலாம். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அவர்கள் நேரம் செலவிடுவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
அதேபோல, பகல் வெளிச்சம் இருக்கும் காலை அல்லது மாலை நேரங்களில் வெளியில் நடப்பது அல்லது விளையாடுவது போன்ற பழக்கங்களையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும்.
பள்ளிகளும் குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளுக்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவது அவசியம்.
வெளியில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் இது பயனளிக்கும். இருப்பினும், வெளியில் நேரம் செலவிடுவது மட்டுமே கிட்டப்பார்வைக்கான சிகிச்சை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் கண் சொட்டு மருந்துகள் அல்லது பிற கிட்டப்பார்வைக் கட்டுப்பாட்டு சிகிச்சைகளுக்கு இது மாற்றாகாது என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திரையைப் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது அவசியமா?
கைப்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் குழந்தைகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இருப்பினும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, குறிப்பாகத் திரைகளை மிக அருகில் வைத்துத் தொடர்ந்து பார்ப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எனவே, பெற்றோர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
- இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீடியோ அழைப்புகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, மற்ற நேரங்களில் திரையைப் பார்ப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
- சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு, அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு திரையைப் பயன்படுத்தும் நேரத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
- கைப்பேசியை மிக அருகில் வைத்துப் பார்ப்பதைத் தவிர்த்து, கண்களிலிருந்து குறைந்தது 30–40 சென்டிமீட்டர் இடைவெளியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கணினித் திரைகளை ஒரு கை நீள இடைவெளியில் இருக்குமாறு வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
- “20-20-20 விதியைப்” பின்பற்றவும்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, 20 வினாடிகள் இடைவெளி எடுத்துக்கொண்டு, குறைந்தது 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். இது கண் சோர்வைக் குறைக்க பெரிதும் உதவும்.
- இருட்டாக இருக்கும் அறையில் கைப்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யவும். மேலும், உறங்குவதற்கு முன் கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கிட்டப்பார்வைக் குறைபாட்டைப் புறக்கணிப்பது ஆபத்தானதா?
சாதாரண கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு, கண்ணாடிகள் மூலம் பார்வையைச் சரிசெய்ய முடியும். இருப்பினும், கிட்டப்பார்வையானது “அதிகப்படியான கிட்டப்பார்வை” எனப்படும் கடுமையான நிலைக்கு முன்னேறினால், தீவிரமான கண் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இவற்றில் விழித்திரை மெலிதல் அல்லது விழித்திரை பிரிதல், கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய், விழித்திரையின் மையப்பகுதி சிதைவு மற்றும் இளம் வயதிலேயே கண்புரை ஏற்படுதல் ஆகியவை அடங்கும்.
பட மூலாதாரம், Getty Images
தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
தவறான கருத்து: கண்ணாடி அணிவதால் கண் பார்வைக் குறைபாட்டின் அளவு மேலும் அதிகரிக்கும்.
உண்மை: சரியான பவர் கொண்ட கண்ணாடியை அணிவதால் கிட்டப்பார்வை தீவிரமடையாது. மாறாக, கண்ணாடி அணியாமல் இருப்பது பார்வை தொடர்பான சிரமங்களையும், படிப்பதில் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
தவறான கருத்து: அலைபேசிகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே கிட்டப்பார்வை ஏற்படுகிறது.
உண்மை: கிட்டப்பார்வை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மரபணு, அருகில் உள்ள பொருட்களை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, வெளிப்புறங்களில் போதிய நேரம் செலவிடாமல் இருப்பது ஆகியவை அவற்றில் சில.
தவறான கருத்து: ஒருவர் வயது வந்த பிறகு கிட்டப்பார்வை தானாகவே மறைந்துவிடும்.
உண்மை: குழந்தைகள் வளரும்போது அவர்களுக்குக் கிட்டப்பார்வையின் அளவு அதிகரிக்கலாம். வயது வந்த பிறகு இந்தக் குறைபாடு அதிகரிப்பது நின்று நிலையாக இருக்கலாம். ஆனால், அது முழுமையாக மறைந்துவிடாது.
தவறான கருத்து: கண் பயிற்சிகள் மூலம் கிட்டப்பார்வையைக் குணப்படுத்தவோ, அதன் அளவைக் குறைக்கவோ முடியும்.
உண்மை: கண் பயிற்சிகளால் கிட்டப்பார்வையைக் குணப்படுத்த முடியாது. இருப்பினும், கண் தசைகள் தொடர்பான சில குறிப்பிட்ட பிரச்னைகளுக்குச் சில பயிற்சிகள் உதவக்கூடும்.
தவறான கருத்து: சில வகையான கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தினால், கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இருக்காது.
உண்மை: சில கண் சொட்டு மருந்துகள் கிட்டப்பார்வையின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவலாம். ஆனால், ஏற்கெனவே உள்ள பார்வைக் குறைபாட்டை (பவரை) அவை முழுமையாக நீக்கிவிடாது.
தவறான கருத்து: பிரத்யேகக் கண்ணாடிகளை அணிவதன் மூலம் கிட்டப்பார்வையை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும்.
உண்மை: கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேகக் கண்ணாடிகள், பார்வைக் குறைபாட்டின் அளவு (பவர்) அதிகரிப்பதைக் குறைக்க உதவும். ஆனால், அவை கிட்டப்பார்வையை முழுமையாகக் குணப்படுத்தும் நிரந்தரத் தீர்வல்ல.
குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய 10 வழிகள்
- குழந்தைகள் தினமும் குறைந்தது 2 மணிநேரம் வெளியில் செலவிடுவதை உறுதிசெய்யவும்.
- அலைபேசிகள் மற்றும் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும்.
- படிக்கும்போது உரிய இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும்.
- போதுமான வெளிச்சம் உள்ள இடத்தில் வாசிப்பதை ஊக்குவிக்கவும்.
- ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை உறுதிசெய்யவும்.
- பள்ளியில் கரும்பலகையில் உள்ளவை தங்களுக்குத் தெரியவில்லை என்று குழந்தைகள் கூறினால், உடனடியாக அவர்களின் பார்வையைப் பரிசோதிக்கவும்.
- குடும்பத்தில் யாருக்கேனும் கிட்டப்பார்வை பாதிப்பு இருந்திருந்தால், குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
- கண் மருத்துவ நிபுணரின் அறிவுரைப்படி, அவ்வப்போது கண் பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.
- குழந்தையின் கண் பார்வைக் குறைபாட்டின் அளவு வேகமாக அதிகரித்தால், கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
- மருத்துவரின் பரிந்துரை இன்றி, எந்தவொரு கண் சொட்டு மருந்தையோ அல்லது பிற கண் தொடர்பான மருந்துகளையோ பயன்படுத்த வேண்டாம்.
கிட்டப்பார்வைக் குறைபாடு என்பது வெறும் கண்ணாடிகள் மூலம் சரிசெய்துவிடக்கூடிய ஒரு சாதாரணப் பிரச்னை மட்டுமல்ல. இது சிறு வயதிலேயே தொடங்கி, விரைவாக மோசமடைந்தால், பிற்காலத்தில் தீவிரமான கண் பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
எனவே, குழந்தைகளிடம் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தேவைப்படும்போது நவீன முறைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை, விலையுயர்ந்த மின்னணு சாதனங்களை விட, ஆரோக்கியமான விளையாட்டுகள், இயற்கையான வெளிச்சத்தில் நேரம் செலவிடுதல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல் ஆகியவை மிக முக்கியமானவை.
(குறிப்பு: கட்டுரையாசிரியர் ஒரு மருத்துவர். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆரோக்கியம் தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு