• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பிப்பதை தடுக்க கூடாது: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு

Byadmin

Sep 17, 2026


தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒருபோதும் கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை தமிழகம் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்காக நிலத்தை அடையாளம் காணுமாறு, தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த தனது முந்தைய உத்தரவைத் திரும்ப பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசு, இந்தி மொழி உட்பட அவற்றின் மும்மொழிக் கல்வி முறை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையுடன் முரண்படுகிறது என்ற அடிப்படையில் எதிர்த்து வருகிறது.

தமிழக வழக்கறிஞர்

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மாநில அரசின் எதிர்ப்பு என்பது வெறும் மனநிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரம் தொடர்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மேலும் அவர் மாநில அரசு இந்தி மொழிக்கு எதிரானதல்ல என்றும், ஆனால் நவோதயா திட்டத்தில் இந்தி மொழியை முதன்மை மொழியாக வலியுறுத்துவதையே எதிர்ப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

மேலும், மத்திய அரசின் திட்டம் விருப்பத்திற்குரியது என்றும், ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு மாநிலத்தை கட்டாயப்படுத்தி நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தினர்.

மேலும் டிசம்பர் 15, 2025 தேதியிட்ட உத்தரவை நிறைவேற்றவும், முன்மொழியப்பட்ட பள்ளிகளுக்கான பொருத்தமான நிலத்தை அடையாளம் காணவும் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.

மேலும் நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்து வரும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் மேலாக, கூடுதலாக ஒன்றைச் செய்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது என்று நாங்கள் கூறுகிறோம்.

டெல்லியிலிருந்து வருவதால் சென்னையின் தரம் குறைந்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியைப் புறக்கணிக்கக் கூடாது, டெல்லி மக்களும் சென்னையைப் புறக்கணிக்கக் கூடாது.

இன்று கல்வி, நாளை வேறு ஒன்றாக மாறிவிடும். உங்கள் மனதில் உள்ள இந்த விறைப்புத்தன்மையை நீங்கள் தளர்த்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.

தமிழகத்தை உடனடியாக நிலம் கையகப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட செலவினத்திற்கு மாநிலத்தைக் கட்டுப்படுத்தவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

டிசம்பர் 2025 பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு தனது அரசாங்கத் திட்டத்தில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண மட்டுமே கோரியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஆறு வாரங்களுக்குள் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, மாநில அரசில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தமிழக அரசு அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரியது.

இதையடுத்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்ப பெற நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. அதே நேரத்தில், அதற்குக் கட்டுப்பட மாநில அரசுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியதுடன், கொள்கை மற்றும் அதன் செயலாக்கம் குறித்து மத்திய, மாநிலப் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தமிழக அரசு தமிழை இரண்டாம் மொழியாக விரும்பினால், அது பரிசீலிக்கப்படக்கூடிய ஒரு விஷயமே, என்று கூறிய நீதிபதி அமர்வு, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்களது கல்விச் செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டது.

By admin