தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பேரவைக்கு முதல் முறையாக உறுப்பினர்கள் பலர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் செங்கோட்டையன், பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேசிடி பிரபாகரன், ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருந்தாலும் தமிழகத்தில் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினராகியிருக்கிறார்.
இந்தநிலையில், முதல்வர் விஜய் உட்பட 100க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் பாதம் பதித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம், பிற படித்தொகை மற்றும் சலுகைகள் என்ன?
பட மூலாதாரம், DIPR
அதிமுக ஆட்சியில் இரட்டிப்பாக உயர்ந்த எம்எல்ஏக்கள் சம்பளம்!
கடந்த 2017 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியின்போது, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் சம்பளம் மற்றும் படித்தொகைகள் சேர்த்த ஒட்டு மொத்த ஊதியம் ரூ.1,05,000 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு, ரூ.55 ஆயிரமாக இந்த ஊதியம் இருந்தது.
இதில் பதவிக்கேற்ப படித்தொகை மற்றும் இதர சலுகைகள் சார்ந்து வெவ்வேறு அரசாணைகள் மூலமாக வெவ்வேறு விதமான தொகை நிர்ணயிக்கப்படுகிறது
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊதியம் தொடர்பாக, தற்போது நடைமுறையில் உள்ள விதிகள், கடந்த 2024 மே மாதம் 21 ஆம் தேதியன்று திருத்தப்பட்டதாகும்.
இதில் ஊதியம், மாநிலங்களவை தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்கான பயணப்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்கான பயணப்படி உட்பட அனைத்து விதமான பயணப்படிகள், மருத்துவ சிகிச்சை, தொலைபேசி, ரயில் பயணப்படிகள் என மொத்தம் 17 விதமான விதிகளின் கீழ் இந்த தொகை, சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விதிகளின்படி, முதல்வர், துணை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்குமே அடிப்படை ஊதியம் என்பது ரூ.30 ஆயிரம் மட்டுமே.
மாதாந்திர ஈட்டுப்படி ரூ.10 ஆயிரம்.
தொகுதிப்படி ரூ.25 ஆயிரம்
அஞ்சல் படி ரூ.2500,
தொலைபேசிப்படி ரூ.7500,
தொகுப்புப்படி, ரூ.5 ஆயிரம்
ஊர்திப்படி ரூ.25 ஆயிரம் ஆகியவை இதில் அடங்கும்.
சட்டப்பேரவை உறுப்பினர் தொலைபேசி வைத்திருந்தாலும், வைத்திருக்காவிட்டாலும் அவருக்கு தொலைபேசிப் படியாக மாதம் ரூ.7500 வழங்க வேண்டும். அவருடைய குடியிருப்பில் இதை நிறுவுவதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்.
பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது உதவியாளருக்கு மாதந்தோறும் தொகுப்புப்படியாக ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கு உரிமையுடையவராகின்றனர்.
பயணப்படி தவிர்த்து, ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் வாகனப்படியாக ரூ.25 ஆயிரம் பெறுவதற்குத் தகுதியுடையவராகிறார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அல்லது யாராவது ஓர் உறவினருடன், இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் ரயிலில் பயணம் செய்வதற்கு உரிமையுடையவராகிறார். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் சம தவணைகளில் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.
உறுப்பினர் பதவியில் இருக்கும்போது இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பத்தினர் என்பது கணவன் அல்லது மனைவி, உரிய வயது அடையாத மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் மற்றும் உறுப்பினரின் பெற்றோர் என்பதைக் குறிக்கும்.
சட்டப்பேரவை உறுப்பினருக்கு இதயம், சிறுநீரகம் அல்லது உடலின் பிறபகுதியில் ஏற்படும் பாதிப்புக்கு, மத்திய அரசின் மருத்துவமனை அல்லது மாநில அரசின் மருத்துவமனை அல்லது இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவமனை எதிலும் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்படும் செலவைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். ஆனால் மருத்துவ சிகிச்சை குறித்து முன்கூட்டியே தெரிவிப்பது என்பது நிபந்தனையாகவுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினர், மாநில அரசால் நடத்தப்படுகிற மருத்துவமனைகளில் கட்டணமின்றி இலவசமாகத் தங்குவதோடு, மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிமையுடையவராவார்.
பட மூலாதாரம், DIPR
ஓய்வூதியம் பெறுவதற்கு குடும்பத்தில் யார் யாருக்கு தகுதியுண்டு?
சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்த ஒவ்வொருவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் தற்போது ரூ.30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது காணாமல் போய்விட்டால், அவருடைய கணவன் அல்லது மனைவி, 21 வயது நிறைவடையாத மகன் அல்லது 24 வயது நிறைவடையாத திருமணமாகாத மகள், திருமணமாகாத நபராக இருந்தால் பெற்றோருக்கு, அவர்கள் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 50 சதவீதத் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்கள் வசிப்பிடங்களிலிருந்து சென்னை வந்து செல்வதற்கு ரயிலில் குளிரூட்டப்பட்ட படுக்கை வசதியுள்ள பயணச் செலவு கட்டணம் வழங்கப்படும்.
இந்த நாட்களில் சென்னையிலுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிகளில் அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம் வழங்குதல் வேண்டும். மற்ற நாட்களில் வரும்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
பட மூலாதாரம், DIPR
சட்டப்பேரவைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு உறுப்பினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வரும் உறுப்பினர்களுக்கு நாள்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்படும்.
குழு சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினருக்கு நாள்படியுடன் போக்குவரத்துக்கான பயணப்படியையும் அரசே வழங்கவேண்டும். உதகமண்டலம் அல்லது கொடைக்கானலில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது இந்த மொத்தத்தொகையை 50 சதவீதம் அதிகரித்துத்தரவேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினர், தனது இருப்பிடம் என்று பேரவை செயலகத்தில் பதிவு செய்த இடமே இருப்பிடமாகக் கருதப்பட்டு, அங்கிருந்தே பயணப்படி நிர்ணயிக்கப்படும்.
சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தனியாகவும், முன்னாள் பேரவை உறுப்பினர்களுக்கு தனியாகவும் அடுக்குமாடிகளில் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு பேரவை செயலகத்தால் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரவை உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் தங்கலாம்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், விடுதிகளில் தனியாகவோ, வாழ்க்கைத்துணை அல்லது உதவியாளருடன் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் வாடகையாக வசூலிக்கப்படும். ஓர் உறுப்பினருக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
அரசு விழாக்களில் கலந்து கொள்ள வரும் முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டணமின்றி விடுதியில் தங்குமிடம் ஒதுக்கப்படும். இடம் கிடைக்காதபட்சத்தில், அவர்கள் வெளியிடங்களில் தங்குமிடத்திற்கான வாடகைத்தொகை அல்லது விடுதியின் வாடகைத்தொகை இதில் எது குறைவோ அது அவர்களுக்கு வழங்கப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் விடுதியில் தங்குவதற்கான வாடகைத்தொகை, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும்.
விடுதி அறைகளில் கூட்டங்கள் நடத்தவோ, சமையல் செய்யவோ அனுமதி கூடாது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அங்குள்ள தொலைபேசியைப் பயன்படுத்தலாம்.
அமைச்சர்கள், பேரவைத் தலைவர் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் இல்லம் ஒதுக்கப்படும். அத்தகைய வீடு ஒதுக்கப்படாதபட்சத்தில், பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகைத்தொகை அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
அரசால் ஒதுக்கப்படும் குடியிருப்புகளில் இல்லப்பராமரிப்புச் செலவு, மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம் மற்றும் நீரேற்றக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். தூய்மைப் பணியாளர், சிற்றேவலர், தோட்ட வேலை செய்பவர் ஆகியோரை அரசு செலவில் நியமித்துக் கொள்ளலாம். ஏசி, மின்விசிறி, மின்சாதனங்கள், ஃபிரிட்ஜ், கீசர், சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்ட பர்னிச்சர்கள், திரைச்சீலை, படுக்கை விரிப்புகள், தலையணை உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றுவதற்கான செலவையும் அரசு ஏற்கும்.
இவை தவிர, முதல்வர், துணை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், அரசு கொறடா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் உள்ளன.
யார் யாருக்கு எது எதைப் பெற உரிமையுண்டு, படித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கான படிவங்கள் போன்றவை என மொத்தம் 169 பக்கங்களில் அந்த விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.