தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான நிலம் மற்றும் நிரந்தர வைப்புநிதி தொடர்பான விதிகளைத் தளர்த்தும் வகையில் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகங்களைத் தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்காகவே இந்தத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
ஆனால், இந்தத் திருத்தம் உயர்கல்வியை மேலும் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் விமர்சித்துள்ளன.
அப்படியானால், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துமா? அல்லது உயர்கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்பட்டது.
புதிய திருத்தத்தின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இந்தத் தேவை 12 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 18 ஏக்கரும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கரும் நிலம் வைத்திருக்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் செலுத்த வேண்டிய நிரந்தர வைப்புநிதியும் ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலம் மற்றும் நிதி தொடர்பான தடைகள் குறையும் என்று அரசு கூறுகிறது.
2018-ஆம் ஆண்டு தனிச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட சிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகங்களும் புதிய திருத்தத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரிப்பது சமூகநீதியைப் பாதிக்குமா?
பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன்
இந்தச் சட்டத் திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன், தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிகளைத் தளர்த்துவது உயர்கல்வியை வணிகமயமாக்கும் என்று கூறியுள்ளார்.
“தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிகளை இவ்வளவு தளர்த்துவது ஏன்? இது ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே நிரந்தர வைப்புநிதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை பாதியாகக் குறைத்திருப்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்காமல் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விதிகளைத் தளர்த்துவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் ஏழை மாணவர்களுக்கு எட்டாதவையாகுமா?
இந்திய மாணவர் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய எஸ்.எஃப்.ஐ மாநிலச் செயலாளர் மிருதுளா, தனியார் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், அதன் சுமை மாணவர்களிடம் அதிகக் கல்விக் கட்டணமாக மாற்றப்படலாம் என்று கூறினார்.
“இந்த நிறுவனங்கள் பணக்கார மாணவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறதா? அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நீட் நடைமுறைக்குப் பிறகு மருத்துவக் கல்விக்கான பயிற்சி மையங்களின் செலவு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தனியார் பல்கலைக்கழகங்களும் ஏழை மாணவர்களுக்கு எட்டாதவையாக மாறக்கூடும் என்று கூறினார்.
“அரசு பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும்”
பட மூலாதாரம், TNDIPR
மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் செந்தாமரைக் கண்ணனும் இந்தத் திருத்தம் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
அரசுப் பல்கலைக்கழகங்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குவதுடன் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், அவை நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகளை வழங்குவதாக அவர் கூறினார்.
“அதிகக் கட்டணம் காரணமாக தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறும் நிலை உள்ளது. உயர்கல்வியை வணிகமயமாக்குவது விளிம்புநிலை மாணவர்களைப் பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரித்தால் ஆசிரியர்களின் பணிச்சூழல் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசு தனது வளங்களை தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு என்ன நடந்தது?
தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிகளைத் தளர்த்தும் முயற்சி தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு கொண்டுவந்த தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை ‘பிரவுன்ஃபீல்டு பல்கலைக்கழகங்கள்’ என்ற புதிய வகையின் கீழ் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு முன்வைக்கப்பட்டது.
அந்த மசோதாவில், இத்தகைய பல்கலைக்கழகங்களுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையும் குறைக்கப்பட்டிருந்தது. மருத்துவம், பல் மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளில் 65% இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கும் விதியும் முன்மொழியப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.
2025-ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டுவந்த மசோதாவிலும் நிலத் தேவைகள் குறைக்கப்பட்டிருந்ததை உயர்கல்வி அமைச்சர் பி. விஸ்வநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், முந்தைய மசோதாவில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் ‘பிரவுன்ஃபீல்டு’ முறை இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய திருத்தம் புதிதாக உருவாக்கப்படும் ‘கிரீன்ஃபீல்டு’ பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே முக்கிய வேறுபாடு என்று அவர் கூறியுள்ளார்.
அரசின் பதில் என்ன?
பட மூலாதாரம், X/Viswanathan_INC
படக்குறிப்பு, உயர்கல்வி அமைச்சர் பி. விஸ்வநாதன்
தமிழ்நாட்டுக்கு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை ஈர்ப்பதற்காகவே நிலம் மற்றும் நிரந்தர வைப்புநிதி தொடர்பான தேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
“உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்தால், மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்குச் செலவிடும் அளவுக்கு அதிகமான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்காது. உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதால், தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய சட்டத் திருத்தம் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கானது அல்ல என்று தெரிவித்த அவர், புதிதாக உருவாக்கப்படும் கிரீன்ஃபீல்டு பல்கலைக்கழகங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பாக பிபிசி தமிழ் அமைச்சர் விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் கிடைத்தவுடன் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.