• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

Byadmin

Jul 14, 2026


இன்று (13) திங்கட்கிழமை சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் என தெரிவித்தனர்.

இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசியலமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்திற்குள் நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.

மேலும், ஜனநாயக பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் காணி பிரச்சினைகள்

நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்ததுடன், இந்த விடயங்களில் பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

The post தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு appeared first on Vanakkam London.

By admin