பட மூலாதாரம், GettyIamges & BBC
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால், வரும் கார்த்திகை தீப நாளில் (நவம்பர் 24) ஒருமுறை நிகழ்வாக தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ‘இது இறுதி அங்கீகாரம் அல்ல’ எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. இதுகுறித்து இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினர் கூறுவது என்ன?
வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் மலை உச்சியில் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.
தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாவட்ட ஆட்சியர், சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம், சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழ்நாடு அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் என்பதால் அதற்கு முன்னதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை, தர்கா நிர்வாகம் ஆகியவை தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தன.
‘இறுதி அங்கீகாரம் அல்ல’ – நீதிபதிகள்
பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை இந்து அமைப்புகள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், கார்த்திகை தீப நாளான நவம்பர் 24 ஆம் தேதி மட்டும் தூணில் தீபம் ஏற்றிக் கொள்வதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். ‘இந்த ஏற்பாட்டை இறுதி அங்கீகாரமாக கருதக் கூடாது’ என நீதிமன்றம் குறிப்பிட்டதாக, ‘லைவ் லா’ தளம் கூறுகிறது.
‘நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை வழக்கமான நடைமுறை இருந்ததற்கான ஆதாரமாக எந்த தரப்பும் பயன்படுத்த முடியாது. இதை அடிப்படையாக வைத்து வரும் ஆண்டுகளில் இதேபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு உரிமை கோர முடியாது’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதி குறித்து மேலதிக கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள நீதிபதிகள், “வரலாற்று ரீதியாக மத சடங்குகள் செய்யும் இடமாக கல் தூண் இருந்ததையோ அல்லது தனி நபர்களோ அல்லது அமைப்புகளோ அங்கு தீபம் ஏற்றுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையோ இந்த ஏற்பாடு உறுதிப்படுத்தவில்லை” எனத் தெரிவித்தனர்.
‘கார்த்திகை தீப நாளில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அந்த இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என நீதிமன்றம் தெரிவித்தது.
‘பொதுமக்கள் யாரும் தூண் அமைந்துள்ள பகுதிக்குச் செல்வதற்கு அனுமதியில்லை. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது ஊர்வலங்கள், மக்கள் கூடுதல், முழக்கமிடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை’ எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தீபம் ஏற்றும் நிகழ்வுக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாநில அரசு கோரிக்கை விடுத்தால், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை (CRPF) பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிட்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளின்கீழ் மத உரிமைகளின் வரம்பு உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள், இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது எழுந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘தற்போதுள்ள நிலையில் இந்த கேள்விகளை நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை’ எனவும் ‘அவை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்’ எனத் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் மத சடங்கை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என இரண்டு நீதித்துறை அமைப்புகள் அனுமதி அளித்திருந்தன என்பது இடைக்கால நிவாரணம் வழங்குவதில் முக்கிய காரணியாக கருதப்படுவதாக நீதிமன்றம் கூறியது.
‘இரு தரப்பு நலன்களை சமநிலைப்படுத்தும்’

‘நவம்பர் 24ஆம் தேதி விழாவை நடத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால் பிற்காலத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் அதனை மீண்டும் ஈடுசெய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ஏற்பாடு, இரு தரப்பினரின் நலன்களை சமநிலைப்படுத்தும் என நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
‘மாவட்ட ஆட்சியரே தீர்மானிக்க வேண்டும்’

‘தீபம் ஏற்றும் குழுவில் யார் இடம் பெற வேண்டும் என்பதை கோவிலின் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகம் (ASI) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் ஆகியோருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
‘தீபம் ஏற்றும் நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார் எனவும் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு நிகழ்வு நடைபெறும் நேரம், குழுவினர் செல்லும் பாதை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்’ என நீதிபதிகள் கூறினர்.
‘தீபம் ஏற்றும் நிகழ்வு முடிந்த உடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும். எந்தவொரு புதிய கட்டமைப்பை உருவாக்கவோ, ஏற்கெனவே உள்ள அமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ அனுமதி இல்லை’ எனத் தீர்ப்பு கூறுகிறது.
‘சிக்கந்தர் தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது’ எனத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது என அறிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் சமர்ப்பிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
‘இந்த ஆண்டு தீபம் ஏற்றினால் போதும்’ – இந்து அமைப்பினர்
பட மூலாதாரம், Handout
இப்படியொரு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகக் கூறுகிறார், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.
“ஆண்டில் ஒருநாள் தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். அதைத் தான் உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது. ஆனால், கடந்த தி.மு.க ஆட்சியில் தீபம் ஏற்றப்படுவதை 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்தினார்கள்” என்கிறார் அவர்.
“வரும் 24 ஆம் தேதி தூணில் தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களுக்கு இந்த ஆண்டு தீபம் ஏற்றினால் போதும்” எனக் கூறிய சோலைக்கண்ணன், “தி.மு.க அரசு செய்த தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது” எனக் கூறினார்.
‘சர்வே கல் என்று கூறியதில் வருத்தம்’

உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 18ஆம் தேதி நடந்த வாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘மலை உச்சியில் உள்ள தூண், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டது அல்ல’ எனக் குறிப்பிட்டார்.
நிலத்தை அளவீடு செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவீட்டுக் கல் எனவும் எவரெஸ்ட் சிகரத்திலும் இதனைப் பார்க்கலாம் எனவும் அவர் வாதிட்டார்.
‘கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற அனைத்து தூண்களுக்கும் மதச்சாயம் பூசப்பட்டுவிடும் என்பது மாநில அரசின் அச்சமாக உள்ளது’ என கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய சோலைக்கண்ணன், “உச்ச நீதிமன்றத்தில் சர்வே கல் என அரசு கூறியது ஏற்புடையதல்ல. அது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதை தீபத்தூணாகவே பார்க்கிறோம்.” என்கிறார்.
“தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை வெற்றியாக பார்க்கிறோம்” என்கிறார் இந்து அமைப்புகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் நிரஞ்சன் குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆவணங்களை ஒருங்கிணைத்து சமர்ப்பிக்குமாறு தர்கா நிர்வாகம், கோவில் நிர்வாகம், மனுதாரர் தரப்பு ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.” என்றார்.
‘தீர்ப்பு கவலையளிக்கிறது’ – சிக்கந்தர் தர்கா நிர்வாகி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது கவலையளிப்பதாக உள்ளதாகக் கூறுகிறார், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் துணைச் செயலாளர் அல்தாஃப்.
தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வாதிடும் போது, உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வதாகத் தெரிவித்தது. தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் அல்தாஃப், “தமிழ்நாடு அரசு தனது வாதத்தை உறுதியாக எடுத்து வைத்தது. தர்கா தரப்பிலும் அனைத்து ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. அதையும் மீறி இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
“திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் படிக்கட்டுகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. சிக்கந்தர் தர்காவுக்கு என தனியாக பாதை உள்ளது. இதனால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.
“தீபம் ஏற்ற அனுமதியளித்ததன் மூலம் புதிதாக எந்த பிரச்னைகளும் வந்துவிடக் கூடாது” என்று அல்தாஃப் குறிப்பிட்டார்.
“முரண்பாடான தீர்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்
பட மூலாதாரம், Handout
அதேநேரம், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முரண்பாடாக உள்ளது” எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்க வேண்டும். ‘தடை தருகிறோம். ஆனால், இந்த ஆண்டுக்குத் தடையில்லை’ எனக் கூறியுள்ளது முரண்பாடானது” என்கிறார்.
“இடைக்கால தடை தொடர்பான வழக்கில், ‘தடை தர மாட்டேன்’ என நீதிபதிகள் கூறியிருந்தால் பிரச்னை இல்லை. இந்த ஆண்டுக்கு தடை இல்லை எனக் கூறுவது உறுதியான உத்தரவாக தெரியவில்லை” என்கிறார் அரி பரந்தாமன்.
“இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு