பட மூலாதாரம், BBC News tamil
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக ‘லைவ் லா’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்திற்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரை (CISF) பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக, லைவ் லா தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், BBC News tamil
உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வெவ்வேறு தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கமா, அந்தத் தூணின் தன்மை என்ன, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறையில் மாற்றம் செய்யலாமா என்பன இந்த வழக்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக உள்ளன.
தமிழ்நாடு அரசு தரப்பு:
முன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது நீண்டகால வழக்கமாக இருந்ததில்லை என்றும், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றும் வாதிட்டார். ஆகம விதிகளின்படி அந்த இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் தரப்பு:
மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மலை உச்சியில் உள்ள தூண் ஒரு சர்வே கல் என்றும், இமயமலையில்கூட இதுபோன்ற கற்கள் உள்ளன என்றும் வாதிட்டார். இதுபோன்ற சர்வே கற்களில் எல்லாம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழக்கூடும் என்றும், மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடுவது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கத்தைப் பாதிக்கும் என்றும் கூறினார். மத வழக்கங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும், இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டு, புகைப்படங்கள் மற்றும் ட்ரோன் காட்சிகளையும் சமர்ப்பித்தார்.
தர்கா நிர்வாகம் தரப்பு:
தர்கா நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹுசேஃபா அகமதி, எதிர்தரப்புக்கு பதில் மனு தாக்கல் செய்யப் போதிய அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக வாதிட்டார். தர்கா நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் நீதிபதி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ததாகவும், முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டிருந்தால் அந்தத் தூண் கோயிலுக்குச் சொந்தமானது என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டார் என்றும் கூறினார். மலை உச்சியில் புதிதாகத் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய தீர்ப்புகள் நிராகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்து அமைப்புகள் தரப்பு:
மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் கோரிக்கை. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.
அரசின் தற்போதைய வாதங்கள் அதன் முந்தைய நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக இந்து அமைப்புகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி, அந்தத் தூண் எப்போது அமைக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் அரசிடம் இல்லை என்றும், அது தீபத் தூண் என்பதற்கான ஆதாரமும் இல்லை என்றும் அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது. இப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பு அதைச் சர்வே கல் என்று வாதிடுவது ஏன் என்று இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்படும் தீபம் இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைவதற்கான மோட்ச தீபம் என்றும், அது கார்த்திகை தீபம் அல்ல என்றும் அவை கூறுகின்றன.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்:
இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் மாதத்தில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மக்கள் அமைதியையே விரும்புவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். நவம்பர் 13ஆம் தேதி பேசியபோது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கூறினார்.
பட மூலாதாரம், BBC News tamil
வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதன் மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோயிலும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின்போது சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால், ‘மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் முன்வைத்தன.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கின் முடிவில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதியன்று மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
டிசம்பர் 3 ஆம் தேதியன்று வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கோவில் நிர்வாகம் தீபத்தை ஏற்ற எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என, ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அதே டிசம்பர் 3-ஆம் தேதி தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தன்னுடன் பத்து பேரை அழைத்துக் கொண்டு போய் மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் எனவும் உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பட மூலாதாரம், BBC News tamil
அதேநேரம், மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் ஆகியவை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தனர்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள் அமர்வு, பொது அமைதியைக் குலைக்கும் சூழலை உருவாக்கும் என மாநில அரசு முன்வைத்த வாதத்தை நிராகரித்தது. ‘இதுபோன்ற அச்சங்கள் கற்பனையான பேய்’ எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ‘100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தைவிட்டு விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கேட்பது தான் பிரச்னைக்குக் காரணம்’ என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க அரசு வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.