17
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், பராமரிப்பு நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் சாத்தியமான அலட்சியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக உரிமையாளரை கைது செய்துள்ளனர். அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தனியார் பராமரிப்பு நிலையத்தில் முதியவர்களுடன் மனநலப் பாதிப்புகளைக் கொண்ட நபர்களும் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு (03) ஏற்பட்ட தீ விபத்தின் போது அந்த நிலையத்தில் சுமார் 72 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 06 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்தின் காரணமாக கட்டிடத்தின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. சம்பவத்தின் போது தீயில் சிக்கிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதனை கண்டறியும் நோக்கில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.