படக்குறிப்பு, டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் மீது தனது காதலனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
எழுதியவர், கேத்தரின் இவான்ஸ்
பதவி, பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
துபையில் 23 வயதான டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் மீது தனது காதலனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டனின் கென்ட் பகுதியில் உள்ள கிரேவ்செண்ட்டைச் சேர்ந்த ப்ரூக் ஜார்ஜ் மீது தனது காதலனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவருக்கும் ஆன்லைனில் அறிமுகம் ஏற்பட்டு, அதன் பிறகு அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இந்தத் தகவலை ‘டிடெய்ன்ட் இன் துபை’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது காதலரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காகத் தான் கத்தியை எடுத்ததாக ப்ரூக் கூறியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை குடும்ப வன்முறை வழக்காகப் பார்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வகையிலான மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
‘ஆண் போலீஸார் முன்னிலையில் ஆடைகளைக் கழற்றக் கட்டாயப்படுத்தினர்’
பட மூலாதாரம், Detained in Dubai
படக்குறிப்பு, ப்ரூக் ஜார்ஜ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் (கோப்புப் படம்)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிரிட்டிஷ் பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவி வருவதாக பிரிட்டனின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிராண்டான ஜான் லூயிஸில் பணிபுரிந்த ப்ரூக் ஜூன் 22 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டார், அவர் மீது முதலில் ‘திட்டமிட்டு கொலை செய்தல்’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஒரு பெண் போலீஸ் கூட இல்லாத நிலையில், ஆண் போலீஸ்காரர்கள் முன்னிலையில் தனது ஆடைகளைக் கழற்றக் கட்டாயப்படுத்தியதாக ப்ரூக் குற்றம் சாட்டியுள்ளார் என ‘டிடெய்ன்ட் இன் துபை’ அமைப்பு கூறியுள்ளது. இது தனக்கு ‘மிகவும் அவமானமாகவும் வேதனையாகவும்’ இருந்தது என்று அவர் கூறினார்.
‘பார்ட்னர் தாக்கினா, பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டார்’
பட மூலாதாரம், @RadhaStirling
படக்குறிப்பு, ப்ரூக் ஜார்ஜுக்கு உதவி வரும் அமைப்பு, அவரது காதலன் அவரிடம் மிகவும் வன்முறையாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது
ப்ரூக் முதல் முறை துபைக்குச் சென்று திரும்பியபோது, அதைத் தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த காலம் என்று குறிப்பிட்டிருந்தார்.
துபைக்கான இரண்டாவது பயணத்தின் போது அவரது காதலன் வன்முறையாளராக மாறினார் என ‘டிடெய்ன்ட் இன் துபை’ அமைப்பின் சிஇஓ ராதா ஸ்டர்லிங் கூறினார்.
“காதலர் மெல்லமெல்ல தன் மீது அதிகக் கட்டுப்பாட்டை செலுத்தத் தொடங்கியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் ப்ரூக் கூறுகிறார். அவர் தன்னை முஷ்டியால் குத்தியதாகவும், தனது பாஸ்போர்ட்டைத் வைத்துக் கொண்டதாகவும், ஃபிளாட்டிற்குள் வைத்துத் தன்னைத் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்குப் பிறகு அவர் துபையை விட்டு வெளியேற முயன்று கொண்டிருந்தார்,” என ஸ்டர்லிங் தெரிவித்தார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பயந்ததால், அருகில் இருந்த கத்தியை தற்காப்புக்காகப் பயன்படுத்தியதாகப் ப்ரூக் கூறுகிறார்.
ப்ரூக்கின் தாயார் தெரசா ஜார்ஜ் தனது அறிக்கையில், “ப்ரூக் இரண்டாவது முறை துபைக்குச் சென்றபோது, இருவரின் உறவிலும் தெளிவான மாற்றம் தெரிந்தது” என்று கூறியுள்ளார்.
“சம்பவத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு அவர் எப்போதும் போலத் தெரியவில்லை. அவர் அமைதியாக இருந்தார், வழக்கம்போல மகிழ்ச்சியாக இருக்கவில்லை, ஆனால் அவர் என்னிடம் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அன்று மாலை இருவரும் துபையில் உள்ள ஒரு பாருக்குச் சென்றிருந்தனர். சம்பவத்திற்குப் பிறகு உடனே என் மகள் ப்ரூக்கிடம் பேசியபோது, அவர் மிகவும் பயந்திருந்தார். என் மகளை நான் இதுவரை இந்த அளவுக்குப் பயந்து பார்த்ததே இல்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். அவரது ஒரு கண் மிகவும் வீங்கி, மூடத் தொடங்கியிருந்தது” என அவர் கூறினார்.
தெரசா ஜார்ஜ் தனது மகளின் பாதுகாப்பு குறித்து “மிகவும் கவலையாக” இருப்பதாகக் கூறினார்.
“அவர் எப்படியாவது வீட்டிற்குத் திரும்ப விரும்பினார் என்றும், தனக்கு நேர்ந்த எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்ல விரும்பினார் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
“ப்ரூக்கை பொய் சொல்லி துபைக்கு வரவழைத்து, தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அப்படிச் செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் ப்ரூக்கிற்கு நெருக்கமானவர்களுக்கு மெல்ல மெல்ல வரத் தொடங்கியது” என்றார் ‘டிடெய்ன்ட் இன் துபை’ அமைப்பின் சிஇஓ ராதா ஸ்டர்லிங்.
“அவரது பார்ட்னரின் நடத்தை திடீரென மாறியதால் அவரின் கவலை அதிகரித்தது. ப்ரூக்கிற்கு ஒரு வழி டிக்கெட் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. முதல் பயணத்தின் போது அவர் பிகினியில் ஒரு தொழில்முறை போட்டோஷூட் செய்திருந்தார். இரண்டாவது பயணத்திற்குப் பிறகு அவரது பாஸ்போர்ட்டை காதலர் தன்னிடம் வைத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லாம் சரியாக இல்லை என்றும், எப்படியாவது அங்கிருந்து வெளியேற விரும்புவதாகவும் ப்ரூக் தன் நண்பர்களிடம் சொல்லியிருந்தார்.” என அவர் கூறினார்.
‘தூதரகத்தைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது’
பிரிட்டன் தூதரக அதிகாரிகளைச் சந்திக்க ப்ரூக்கிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவர் வழக்கறிஞர் இல்லாமல் வாக்குமூலம் அளிக்க வேண்டியிருந்தது என்றும் ‘டிடெய்ன்ட் இன் துபை’ அமைப்பு கூறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை, தற்காப்பு உரிமை, சட்ட நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் குடிமக்களை நடத்தும் விதம் குறித்து இந்த வழக்கு கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என ஸ்டர்லிங் கூறினார்.
“விசாரணை முடியும் வரை ப்ரூக்கைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலமுறை பெண்கள் வன்முறை குறித்துப் புகார் அளித்தபோது, அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.
விசாரணையின் போது ப்ரூக்கிற்குப் பாதுகாப்பு, முறையான சிகிச்சை, சட்ட உதவி மற்றும் உடனடியாகப் பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று ‘டிடெய்ன்ட் இன் துபை’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.