புதிய தலைவராக பொறுப்பேற்க போகும் மாணிக்கம்தாகூர் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கிடையிலான வலுவான உறவு, தமிழக மக்கள் மத்தியில் இந்த கூட்டணிக்கும் தலைவர்களுக்கும் மிகப்பெரிய நம் பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணமாகும். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது.
த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியுள்ளது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்த பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன்.
தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியம்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடினோம். தற்போது அந்த மரியாதை கிடைத்திருக்கிறது. இந்த மரியாதையுடன் மக்களுக்கான பணியில் கட்சி மிக கவனமாகச் செயல்படும்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.