• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

'தேனிசைத் தென்றல்' தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் இசைஞானி இளையராஜா!

Byadmin

Nov 21, 2026


மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்‘ தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் பிறந்தநாளான நேற்று மாலை 6.30 மணியளவில், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கில் நினைவேந்தல் விழா நடைபெற்றது.

படத்திறப்பு & இசை அஞ்சலி

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா, தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் அரங்கேறியது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு மற்றும் சென்னை மத்திய மாவட்ட தெற்குச் செயலாளர் திலீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரபலங்கள் பங்கேற்பு

மேலும், திரையுலகம் சார்பில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர்கள் பி. வாசு, பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் டி. இமான், ஹிப் ஹாப் ஆதி, நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, பாண்டியராஜன், ஒய்.ஜி. மகேந்திரன், ஜெய், சவுந்தர் ராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.

அரசுக்கு ஸ்ரீகாந்த் தேவா வைத்த கோரிக்கைகள்

விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய தேவாவின் புதல்வர் ஸ்ரீகாந்த் தேவா, மேடையில் இருந்த அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக அரசுக்கு மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதன்படி, மறைந்த இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், பத்மநாபன் தெருவிற்கு தேவா அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் மற்றும் தேவாவின் பிறந்தநாளான நவம்பர் 20-ஆம் தேதியை ‘கானா தினம்’ என்று அரசு அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

“இது வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சி அல்ல; தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்ட ஒரு இசை மேதைக்குச் செலுத்தப்பட்ட உரிய மரியாதை” என விழாவில் கலந்துகொண்ட திரையுலகப் பிரமுகர்களும் இசைக் கலைஞர்களும் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டனர்.

By admin