பட மூலாதாரம், Reuters
-
- எழுதியவர், ஜெரிமி போவன்
- பதவி, சர்வதேச ஆசிரியர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்தது என்ற இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட முதல் நாடு என்ற கறை இப்போது மியான்மர் மீது படிந்துள்ளது.
ரோஹிஞ்சா மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நீதி தற்போது கிடைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு அவர்களின் வாழ்விடங்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் ஆயுதக் குழுக்களும் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டின் கொடூரமான சம்பவங்களுக்குப் பிறகு மியான்மரில் இருந்து வெளியேறிய 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அங்கிருந்த மக்கள் பலர் திரைகளுக்கு முன்னால் கூடி, சர்வதேச நீதிமன்றத்தின் (ஐசிஜே) தலைமை நீதிபதி யூஜி இவாசாவா தீர்ப்பை அறிவிப்பதைக் கவனித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு காம்பியா இந்த வழக்கை நீதிமன்றத்தில் கொண்டு வந்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஆதாரங்களில் சிலவற்றை நீதிபதி நினைவுகூர்ந்தார்.
பெருமளவிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகள், கிராமங்கள் அழிக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் அந்த ஆதாரங்களில் இடம்பெற்றிருந்தன. சில இடங்களில் ரோஹிஞ்சா மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் ஆதரவாகவும் 6 நீதிபதிகள் எதிராகவும் வாக்களித்துத் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு, இனப்படுகொலை தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மற்ற வழக்குகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, இனப்படுகொலைக்கான நோக்கத்தை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களின் தரம் என்ன என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தி, தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கும் இதில் அடங்கும். 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, காஸாவில் பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிகாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளை நம்புவோருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வலுசேர்க்கிறது.
நாஜிக்களின் தோல்விக்கு முந்தைய ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற வன்முறை, போர் மற்றும் இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் முக்கிய அங்கமாக 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் அமைந்தது.
பட மூலாதாரம், Reuters
கடந்த 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட விதிமுறைகளும் சர்வதேச ஒப்பந்தங்களும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்த மூன்று தலைவர்களும் சீனாவில் உச்சி மாநாட்டில் சந்தித்த அதே நாளில் சர்வதேச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சர்வதேச சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு நினைவூட்டுகிறது. பொது மக்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதற்கும் விளைவுகள் உண்டு என்பதை இது உணர்த்தக்கூடும்.
இனப்படுகொலை செய்ய வேண்டுமென்ற மியான்மர் அரசின் நோக்கத்தை காம்பியா எவ்வாறு நிரூபித்தது என்பதை வழக்கறிஞர்கள் இனி விரிவாக ஆராய்வார்கள்.
சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் இனப்படுகொலை வழக்குகளில், அந்தக் குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்தை நிரூபிப்பதுதான் மிகப்பெரிய சவால். அட்டூழியங்கள் நடந்தன என்பதை மட்டும் நிரூபிப்பது போதுமானதல்ல.
நாஜிக்கள் நடத்திய யூத இனப்படுகொலைக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான வாசகம், இந்தக் குற்றத்தை இவ்வாறு வரையறுக்கிறது: “ஒரு தேசிய, இன, இனக்குழு அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்கள்.”
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியவர்கள், இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்த யூதரான ரஃபேல் லெம்கின் தலைமையில், குற்றத்தை நிரூபிப்பதற்கு மிக உயர்ந்த ஆதாரத் தரத்தை நிர்ணயித்தனர். இதனால்தான் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கும் புலனாய்வாளர்களுக்கும் ஏற்ற சூழல் இருந்தால், அரசின் ஆவணங்கள், ராணுவ உத்தரவுகள் போன்ற ஆதாரங்களை அவர்கள் திரட்டுவார்கள். ஆனால் நடைமுறையில் இத்தகைய ஆதாரங்களைப் பெறுவது மிகவும் கடினம்; சில நேரங்களில் சாத்தியமற்றதும்கூட.
இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்ட அரசுகள் தங்களது இலக்குகளை பகிரங்கமாக அறிவிப்பதில்லை. அதற்குப் பதிலாக, ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் ஆயுதக் குழுக்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நோக்கத்தை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பிளாவட்னிக் அரசுப் பள்ளியில் உலகளாவிய பாதுகாப்புத் துறைத் தலைவராக இருக்கும் ஜனினா டில் இதுகுறித்துக் கூறும்போது: “தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போக்கில் இருந்து இனப்படுகொலைக்கான நோக்கத்தை ஊகித்தறிய முடியும். அட்டூழியங்கள் இனப்படுகொலை என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று இதற்குப் பொருளல்ல.
“அப்படி இருந்தால், எதிர்ப்பியக்கங்களை ஒடுக்குவது, தண்டிப்பது அல்லது மக்களை இடம்பெயரச் செய்வது போன்ற வேறு நோக்கங்களுக்காகவும் அட்டூழியங்கள் நிகழ்ந்தன என்பதை நிரூபித்துவிட்டால், இனப்படுகொலைக்கான நோக்கத்தை மறுத்துவிட முடியும்.”
“இத்தகைய நோக்கங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டது. ஆனால், ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆராயும்போது, இனப்படுகொலையும் ஒரு நோக்கமாக இருந்தது என்பதைத் தவிர்த்து அவற்றை விளக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதன் படைகள் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தாலும், அந்த நாட்டின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் இனப்படுகொலையாக அமையக்கூடும்.
ஒவ்வொரு வழக்கும் அதற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் தனித்தனியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சர்வதேச சட்டம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மியான்மர் தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் மற்ற இனப்படுகொலை வழக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அவற்றில் மிகவும் முக்கியமானது, ‘காஸாவில் பாலத்தீன மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்விடங்களை அழித்ததாகக் கூறி’ இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு.
காம்பியாவின் சட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் கேசி, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பைக் கேட்பதற்காக நேரில் இருந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மியான்மருக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டபோது, காஸா விவகாரம் அனைவரின் கவனத்திலும் இருந்ததாக பிபிசியின் ‘வேர்ல்ட் அட் ஒன்’ நிகழ்ச்சியில் சாண்ட்ஸ் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் அணுகுமுறை, அடுத்த வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதனால்தான் இதில் காஸா விவகாரம் எல்லோரும் அறிந்த, அதேநேரம் வெளிப்படையாக விவாதிக்கப்படாத ஒன்றாக இருந்தது.”
மியான்மர் தொடர்பான தீர்ப்பில் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட அணுகுமுறை, இனப்படுகொலையை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களின் தரத்தைத் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
“காம்பியா இந்த வழக்கில் தோல்வியடைந்திருந்தால், தென்னாப்பிரிக்காவின் வழக்கு உண்மையில் முடிவுக்கு வந்திருக்கும்.”
“ஆனால், காம்பியா தற்போது வெற்றி பெற்றிருப்பதால், தென்னாப்பிரிக்காவுக்கான வாய்ப்பு தொடர்ந்து உள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்று அர்த்தமல்ல. காஸாவில் இனப்படுகொலை நடந்ததாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றும் இதற்குப் பொருளல்ல. இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரத் தரம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் பொருள். அடுத்த வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அந்தத் தரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.”
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிஞ்சா மக்களுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ள மகிழ்ச்சியும் நிம்மதியும், அவர்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக அனுபவித்து வரும் அவலமான மற்றும் ஆபத்தான வாழ்க்கைச் சூழலில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்துவதற்கான நேரடி அதிகாரம் அந்த நீதிமன்றத்திற்கு இல்லை. இருப்பினும், ரோஹிஞ்சா மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மியான்மருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைச் செயல்படுத்துவது எளிதாக இருக்காது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மியான்மர் அரசு அமைதியாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பும் குறைவு.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மியான்மர் தொடர்பான விவகாரங்களுக்கான தூதரகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள பிரிட்டன், இந்தத் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ‘பென் ஹோல்டர்’ என்று அழைக்கப்படும் அந்தப் பொறுப்பை வகிக்கும் பிரிட்டன், “இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். இத்தகைய குற்றங்களைச் செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற தெளிவான செய்தியை நீதிமன்றத்தின் தீர்ப்பு அளிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பிரிட்டன் கோரியுள்ளது. லண்டனில் உள்ள மியான்மர் பாதுகாப்புத் துறை இணைப்பாளரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதாகவும், அடுத்த சில நாள்களில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கு மேல் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். மியான்மருக்கு எதிரான கடுமையான தீர்மானம் கொண்டு வரப்பட்டால், சீனா அல்லது ரஷ்யா அல்லது இரு நாடுகளுமே தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கக்கூடும்.
டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்தும் இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துகள் வெளியாகியுள்ளன. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் இனப்படுகொலை செய்ததாக 2022ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவின் தற்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் மைக் வால்ட்ஸ், கடந்த மாதம் நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான சட்டபூர்வ தரத்தைத் தளர்த்திவிடக் கூடாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.
“அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ராணுவ வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே” தாம் இந்தக் கருத்தைத் தெரிவிப்பதாக வால்ட்ஸ் கூறினார். ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் முன்வைக்கும் வாதங்களுக்கு ஆதரவாகவே அவரது கருத்து பார்க்கப்படுகிறது.
சர்வதேச சமூகத்தின் “இடதுசாரி, உலகளாவிய, யூத எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்” என்று அவர் விமர்சித்தார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற நவி பிள்ளையையும் அவர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினார். மியான்மர் வழக்கை விசாரித்த நீதிபதிகளில் அவரும் ஒருவர்.
காஸா பகுதியில் பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஓராண்டுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச ஆணையத்திற்கு நவி பிள்ளை தலைமை வகித்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் வந்தாலும், ரோஹிஞ்சா மக்களுக்கு நீதி கிடைத்திருப்பது, காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த கவனத்தை மீண்டும் திருப்பும் என்பது தெளிவாகிறது.
தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட 1,400-க்கும் அதிகமானோர் உள்ளிட்ட விவகாரங்களும் மீண்டும் கவனத்திற்கு வரும். போர் நிறுத்தம் அமலுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், காஸாவின் இடிபாடுகளுக்கு இடையே வாழும் பாலத்தீன மக்களின் அவலநிலையும் கவனத்தைப் பெறும்.
இருப்பினும், மியான்மர் வழக்கை இஸ்ரேலுக்கு எதிரான வழக்கிற்கான ஒரு ஒத்திகையாகப் பார்ப்பது தவறு என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜனினா டில் இதுகுறித்துக் கூறும்போது, “இவ்வாறு பார்ப்பது ரோஹிஞ்சா மக்களின் பிரச்னையில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அபாயம் உள்ளது. உண்மையில், அவர்கள்தான் நமது கவனத்தின் மையமாக இருக்க வேண்டும். அவர்களுடைய இக்கட்டான நிலை, உலகம் அதிக கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ள ஒரு மோதலுக்கான சோதனை வழக்கு அல்ல” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு