4
2024ஆம் ஆண்டு லேபர் கட்சி பதவியேற்ற பிறகு நடைபெறும் மிகப்பெரிய அளவிலான தேர்தலுக்காக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இன்று (07) காலை 07 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தல் அந்தந்த நாடுகளின் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய சேவைகளை யார் நிர்வகிப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இரு நாடுகளிலும் உள்ள தேசிய நாடாளுமன்றங்களின் அனைத்து இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள ஹோலிரூட் (Holyrood) நாடாளுமன்றத்தின் 129 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடபெறுகிறது.
வேல்ஸ் நாடாளுமன்றமான செனெட்டின் (Senedd) இடங்கள் 60 இலிருந்து 96ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு புதிய விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்மூலம் வாக்காளர்கள் வேட்பாளர்களுக்குப் பதிலாக கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
இங்கிலாந்தில், வாக்காளர்கள் 136 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து சுமார் 5,000 கவுன்சிலர்களையும், லூயிஷாம் (Lewisham), நியூஹாம் (Newham) உள்ளிட்ட ஆறு நகரங்களில் மேயர்களையும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வட அயர்லாந்தில் இன்று தேர்தல் எதுவும் நடைபெறவில்லை; அடுத்த தேர்தல் மே 2027ஆல் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தில் உள்ளூராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்பவர்கள் கடவுச்சீட்டு (Passport) அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற தகுதியான புகைப்பட அடையாள அட்டையைக் கொண்டு வருவது கட்டாயமாகும். இருப்பினும், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு இந்த அடையாள அட்டை அவசியமில்லை.
வாக்குச் சாவடிகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இரவு 10 மணிக்குள் வரிசையில் நின்றவர்கள் அதன் பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடைசி நேரத்தில் நேரில் செல்ல முடியாதவர்கள், இன்று மாலை 05 மணி வரை அவசர கால பதிலி வாக்குக்கு விண்ணப்பிக்கலாம்.
வாக்குச் சாவடிகளுக்குள் புகைப்படம் (Selfie) எடுக்க அனுமதி இல்லை. ஆனால், வெளியே எடுத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலின் முதல் முடிவுகள் நள்ளிரவுக்கு மேல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.