9
தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் நடிகராக உயர்ந்து வரும் ஏகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
கவித்துவமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஹைக்கூ என்பது நவீன தமிழ் இலக்கியத்தின் கவிதை வடிவம் என்பதால் இசையுடன் கூடிய கவிதையாக டீசர் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.