பட மூலாதாரம், Roberto Machado Noa via Getty Images
தான் காணும் வண்ணங்களை தனது மாணவர்களால் காண முடியவில்லை என்பதை உணர்ந்த தருணம், ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார் ஓவியக் கலைஞர் கான்செட்டா ஆன்டிகோ.
பெரும்பாலான மக்கள் நிழல்கள் போன்ற அன்றாட விஷயங்களில் ஒரே ஒரு நிறத்தை மட்டுமே பார்ப்பதாகக் கூறும்போது, தான் அவற்றில் “எண்ணற்ற வண்ணங்களை” காண்பதாக ஆன்டிகோ கூறுகிறார். தனது மாணவர்களால் அவ்வாறு பார்க்க முடியவில்லை என்பது தெளிவாக புரியும் வரை, அனைவரும் உலகைத் தன்னைப் போலவே பார்ப்பதாக அவர் நினைத்திருந்தார்.
“நான் பின்னர் ஒருவரிடம் கேட்டேன்: ‘ஏன் நீங்கள் இதைப்பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை?” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
“அதற்கு அவர்கள்: ‘ஓ, நீங்கள் ஆசிரியர் என்பதால்…ஏதோ கலைநயத்துடன் செய்கிறீர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்’ என்றனர்.”
மரபணு பரிசோதனையின் மூலம், தனக்கு ‘டெட்ராகுரோமேசி’ (Tetrachromacy) எனப்படும் மேம்பட்ட வண்ணப் பார்வைக்கான உயிரியல் சாத்தியக்கூறு இருப்பதை ஆன்டிகோ பின்னர் அறிந்துகொண்டார். இது மற்றவர்களால் பார்க்க முடியாத வண்ணங்களை ஒருவர் பார்க்க அனுமதிக்கும் ஒரு திறனாகும்.
ஒரு கூடுதல் செல் வகை
பெரும்பாலான மக்களின் கண்களில் ‘கூம்புகள்’ (cones) எனப்படும் மூன்று வகையான சிறப்பு செல்கள் உள்ளன.
ஒவ்வொரு வகையும் ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களால் தூண்டப்படுகின்றன; இவை தோராயமாக சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களுடன் தொடர்புடையவை.
இந்த கூம்பு செல்கள் பின்னர் மூளைக்குத் தங்களின் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. நாம் பார்க்கும் குறிப்பிட்ட நிறமானது, வெவ்வேறு கூம்பு செல்களிலிருந்து மூளை பெறும் சமிக்ஞைகளின் கலவையைப் பொறுத்தது.
ஆனால் சிலருக்கு நான்காவது வகை கூம்பு செல்கள் இருக்கலாம். கோட்பாட்டின்படி, இதனால் அவர்களின் மூளை அதிகமான மற்றும் பலவிதமான நிறத் தகவல்களைப் பெறக்கூடும். அதனால், மனிதர்களால் காணக்கூடிய ஒளியின் நிறங்களை இன்னும் நுட்பமாக வேறுபடுத்தி உணரும் திறன் அவர்களுக்கு இருக்கலாம்.
பட மூலாதாரம், ROGER HARRIS/SCIENCE PHOTO LIBRARY via Getty Images
இரண்டு மரபணு மாறுபாடுகள்
சிவப்பு மற்றும் பச்சை நிறத்தை உணரும் கூம்பு செல்களுக்கான மரபணுக்கள் X குரோமோசோமில் உள்ளன. ஒரு நபர் டெட்ராகுரோமேட்டிக் ஆக இருக்க, அவர் இந்த மரபணுக்களில் ஏதேனும் ஒன்றின் இரண்டு வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாகப் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்களும், ஆண்களுக்கு ஒரு X குரோமோசோம் மட்டுமே இருப்பதால், பெரும்பாலும் உயிரியல் ரீதியாகப் பெண்கள் மட்டுமே டெட்ராகுரோமேட்டிக்காக இருக்க முடியும்.
ஆண்களில் காணப்படும் இதே மரபணு மாறுபாடு, ஒருவித நிறப் பார்வைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
நான்காவது கூம்பு வகையைக் கொண்டிருப்பது ‘ரெட்டினல் டெட்ராகுரோமேசி’ (retinal tetrachromacy) என்று அழைக்கப்படுகிறது. மரபணு பரிசோதனை மூலம் இந்த நான்கு வகையான கூம்பு செல்களை உருவாக்கும் மரபணு மாறுபாடுகள் உள்ளவர்களை அடையாளம் காண முடியும்.
பிரிட்டனில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் ‘டெட்ராகுரோமேசி திட்டத்தின்’ படி, சுமார் 12% பெண்களுக்கு இந்த மரபணுத் திறன் இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த எண்ணிக்கை வெவ்வேறு மக்கள் குழுக்களிடையே மாறுபடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
பட மூலாதாரம், NEMES LASZLO/SCIENCE PHOTO LIBRARY via Getty Images
ஆனால், கூடுதல் கூம்பு செல் இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மேம்பட்ட வண்ணப் பார்வை இருக்கிறது என்று அர்த்தமல்ல.
இதை ‘செயல்பாட்டு டெட்ராகுரோமேசி’ என்று அழைக்கலாம் என அமெரிக்காவின் யூசி இர்வின் ப்ரூன்சன் மையத்தின் முனைவர் கிம்பர்லி ஏ ஜேம்சன் கூறுகிறார். மேலும் இதை நிரூபிப்பது மிகவும் கடினம்.
எவ்வாறாயினும், இந்த மரபணுத் திறன் மேம்பட்ட வண்ணப் பார்வைக்கு வழிவகுக்கும் என நம்புவதற்குக் காரணங்கள் உள்ளன.
ஜேம்சன் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நான்கு வகையான கூம்பு செல்களைக் கொண்ட பெண்கள், நிறங்களை மற்றவர்களைவிட அதிகமான தனித்தனி நிழல்களாக வேறுபடுத்தி அடையாளம் கண்டனர். இதன் மூலம், மூன்று வகையான கூம்பு செல்களைக் கொண்டவர்களை (trichromats) விட இவர்களால் வண்ணங்களை இன்னும் நுட்பமாக வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது என்பது தெரியவந்துள்ளது.
விலங்கு உலகிலும் இதற்கான சான்றுகள் உள்ளன. சில வகையான குரங்குகளில், ஆண் உயிரினங்கள் இரண்டு வகையான கூம்பு செல்களைக் கொண்ட டைக்ரோமேட்டுகளாகவும், பெண் உயிரினங்கள் மூன்று வகையான கூம்பு செல்களைக் கொண்ட ட்ரைக்ரோமேட்டுகளாகவும் உள்ளன. டைக்ரோமேட்டுகளை விட ட்ரைக்ரோமேட்டுகள் சிவப்பு நிறப் பழங்களை விரைவாகச் சாப்பிடுவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். இது அவை அந்த நிறத்தை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்றால், கூடுதல் வகையான கூம்பு செல் கொண்ட பெண்கள் வண்ணங்களை வித்தியாசமாகப் பார்க்கலாம் என்று பிரிட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பார்வை நரம்பியல் நிபுணரான ஜென்னி போஸ்டன் கூறுகிறார். ஆனால் இது எப்படி இருக்கும் என்பது விவாதத்திற்குரியது.
‘விவரிக்க முடியாத வண்ணங்கள்’
டெட்ராகுரோமேட்டுகள் எதைப் பார்க்கிறார்கள் என்பது குறித்து கட்டுரை எழுதியுள்ள அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் தத்துவவியலாளர் மைக்கேல் நியூவால், “உங்களுக்குக் கூடுதலாக ஒரு வண்ண ஏற்பி (Receptor) இருந்தால்…உங்களால் விவரிக்க முடியாத வண்ணங்களைப் பார்க்க முடியும். சிவப்பு-பச்சை நிறப் பார்வைக் குறைபாடு உள்ள ஒருவரிடம் சிவப்பு அல்லது பச்சை நிறம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் எப்படி விளக்க முடியாதோ, அதே போன்றது தான் இது,” என்று கூறுகிறார்.
“இன்னொரு சாத்தியமும் இருக்கிறது…ஒருவேளை அவர்களால் சாதாரண வண்ணங்களின் மிக நுண்ணிய வேறுபாடுகளைக் காண முடியலாம்.”
மக்கள் பார்க்கும் வண்ணங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவது கடினம்.
“ஒரு சாதாரண ட்ரைக்ரோமேடிக் நபரின் வண்ண அனுபவத்தைக் கூட அளவிடுவது சாத்தியமற்றது,” என்கிறார் போஸ்டன்.
கூடுதல் கூம்பு செல் வகையின் உணர்திறனைப் பொறுத்து பல்வேறு வகையான டெட்ராகுரோமேசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இது மேலும் சிக்கலானதாகிறது என்று ஜேம்சன் கூறுகிறார்.
ஆனால் மக்கள் வண்ணங்களை எவ்வளவு சிறப்பாக வேறுபடுத்துகிறார்கள், அல்லது நிறங்களுக்கு இடையிலான வேறுபாட்டை அவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதை ஆராய்வது, மக்கள் பார்ப்பதில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் என்று போஸ்டன் கூறுகிறார்.
பட மூலாதாரம், OsakaWayne Studios via Getty Images
நீங்கள் ஒரு டெட்ராக்ரோமேட் என்பதை அறிவது எப்படி? முக்கிய அறிகுறிகள்
இணையத்தில் தேடினால் டெட்ராகுரோமேசியை ஆன்லைனில் பரிசோதிக்கும் பல இணையதளங்கள் கிடைக்கும், ஆனால் இந்த முறையில் ஒரு டெட்ராகுரோமேட்டைக் கண்டறிவது சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான நவீன திரைகளில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணத் தடங்கள் மட்டுமே உள்ளன. இதன் பொருள், டெட்ராகுரோமேட்டுகளால் புதிய வண்ணங்களைப் பார்க்க முடிந்தாலும், அவர்கள் அவற்றை ஒரு திரையில் சரியாகப் பார்க்க முடியாது.
இது பரிசோதிப்பதைக் கடினமாக்கினாலும், நிஜ வாழ்க்கையிலும் திரைகளிலும் நீங்கள் பார்க்கும் வண்ணங்களுக்கு இடையே தொடர்ந்து வேறுபாடுகளைக் கவனிப்பது டெட்ராகுரோமேசியாவைக் குறிக்கலாம் என்று நியூவால் கூறுகிறார்.
ஒருவர் டெட்ராக்ரோமேட் ஆக இருப்பதற்கான மற்றொரு அறிகுறி என்னவென்றால், வண்ணங்களைப் பற்றிய தங்களின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபடுவதை அவர்கள் தொடர்ந்து கவனிப்பதுதான் என்று ஜேம்சன் கூறுகிறார்.
“அவர்களுக்கு ஆழ்ந்த விழிப்புணர்வு இருக்கிறது…சிறு வயதிலிருந்தே, மற்றவர்களை விட அவர்களுக்கு கூர்மையான மற்றும் அதிக உணர்திறன் கொண்ட வண்ணப் பார்வை இருந்துள்ளது”.
பட மூலாதாரம், A. Martin UW Photography via Getty Images
ஒருவர் டெட்ராக்ரோமேட் ஆக இருக்கலாம் என்பதற்கான மற்றொரு சுவாரஸ்யமான அறிகுறி, வெப்பமான நிறஒளியுடன் ஒப்பிடும்போது, கடுமையாகத் தோன்றும் எல்இடி ஒளிக்கு அவர்கள் மிகவும் அதிக உணர்திறன் கொண்டிருப்பதுதான்.
“டெட்ராக்ரோமேட் பெண்களால்… நீண்ட அலைநீள ஒளிக்கூறு போதுமான அளவில் இல்லாத மின்விளக்குகளின் ஒளியைத் தாங்கிக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
“அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம், ‘இந்த ஒளியை என்னால் தாங்க முடியவில்லை. இந்த ஃப்ளூரசென்ட் விளக்குகளின் ஒளி எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு அசௌகரியமாகவும் உடல்நலக்குறைவு ஏற்படுவது போலவும் உணர வைக்கிறது’ என்று கூறுவார்கள்.”
தந்தைக்கு லேசான நிறக்குறைபாடு இருப்பவர்களுக்கும் டெட்ராக்ரோமேட் ஆக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.
ஆனால், இவை சில அறிகுறிகளை மட்டுமே தருகின்றன. ஒருவருக்கு டெட்ராக்ரோமேட் தன்மை இருக்கிறதா என்பதை உறுதியாகக் கண்டறிய, மரபணு பரிசோதனையும் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளும் மிகவும் நம்பகமான வழிமுறைகளாகக் கருதப்படுகின்றன.
நிறச் சமிக்ஞைகளை பயன்படுத்த வேண்டிய தேவை
பட மூலாதாரம், Concetta Antico
டெட்ராக்ரோமேசி குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத மற்றொரு விஷயம், விழித்திரையில் நான்கு வகை கூம்பு செல்கள் இருப்பது மட்டும் எப்படி உண்மையில் அதிக நிறங்களை வேறுபடுத்திப் பார்க்கும் திறனாக மாறுகிறது என்பதாகும்.
“அதற்கு ஒரு குறிப்பிட்ட வகையான கூம்பு செல் இருக்க வேண்டுமா? அல்லது அந்த நிறச் சமிக்ஞைகளை மூளை எப்படிப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறது என்பதுதான் முக்கியமா?” என்று போஸ்டன் கேட்கிறார். இது பார்வை அமைப்பின் மற்ற பகுதிகளின் செயல்திறனுடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
“மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அந்த நிறச் சமிக்ஞைகளை பயன்படுத்த வேண்டிய தேவையிருந்தால்தான், அவற்றை நுணுக்கமாக வேறுபடுத்திப் பார்க்கும் திறன் வளரக்கூடும்” என்றும் அவர் கூறுகிறார்.
ஓவியரான ஆன்டிகோவுக்கு, தனக்கு அப்படித்தான் நடந்ததாக நம்பிக்கை உள்ளது.
“என்னுடைய நிறங்களைப் பார்க்கும் திறனை நானே வளர்த்துக்கொண்டேன். அது உடலின் ஒரு தசை போன்றது,” என்று அவர் கூறுகிறார்.
“சிறு வயதிலிருந்தே நான் ஓவியம் வரைந்து வருகிறேன். பல்வேறு நிறங்களைக் கலந்து பார்த்து சுமார் ஒரு லட்சம் மணி நேரம் செலவிட்டிருப்பேன். இதை நான் தினமும் தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Concetta Antico
‘ஒரு துணிச்சலான கூற்று’
செயல்பாட்டு டெட்ராகுரோமேசி உள்ளதா என்பது பற்றிய விவாதம் தொடர்கிறது. சிலருக்குக் கூடுதல் வண்ணப் பார்வை உள்ளது என்ற கருத்தை ஒரு “துணிச்சலான கூற்று” என்று போஸ்டன் அழைக்கிறார்.
ஆனால் ஒரு “சரியான பரிசோதனை” இல்லாமல், “வெவ்வேறு சோதனைகள், வெவ்வேறு நபர்கள் மீதான ஆய்வுகள் மூலம் முடிந்தவரை அதிக தகவல்களைப் பெற முயற்சிக்கிறீர்கள், அனைத்தையும் ஒன்றாக இணைத்தவுடன், ‘சரி, சான்றுகள் பெரும்பாலும் இதற்கு சாதகமாக உள்ளன’ என்று நீங்கள் கூறுவீர்கள்” என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆன்டிகோ, மற்றவர்களின் சந்தேகங்கள் தனது உற்சாகத்தைக் குறைப்பதில்லை என்கிறார். இந்த மரபணு மாற்றம் தனக்குக் கிடைத்த “அதிர்ஷ்டம்” என்று கூறுகிறார்.
“மற்றவர்களால் பார்க்க முடியாத விஷயங்களை என்னால் பார்க்க முடிகிறது என்பது ஒருவிதமான ஆச்சரியம்” என்று அவர் கூறுகிறார். “இது என் வாழ்க்கையை அற்புதமாக்கியுள்ளது.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு