• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம்: மேலும் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

Byadmin

May 31, 2026


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வாலிபருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

முந்தைய நாள் இரவு மணமகனின் வீட்டின் அருகில் சில வாலிபர்கள் பேனர் வைத்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், ஊர் பெரியவர்கள் சேர்ந்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

திருமணம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மணமகன் வீட்டின் அருகே சிலர் கூடியிருந்தனர். அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களை எடுத்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரி வெட்டினர்.

அதில் நெட்டூரை சேர்ந்த ரமேஷ் (வயது 49), அவரது மகன் அருள் மாறன் (23), கணேசன் மகன் சந்தோஷ்குமார் (21), காபிரி யேல் மகன் ராயப்பன் (18), ஆய்க்குடி அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த சேகர் மகன் ராம்குமார் (20) மற்றும் திருமணத்துக்கு மேளம் அடிக்க வந்திருந்த சாம்பவர்வடகரையை சேர்ந்த பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆலங்குளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ராயப்பன், அருண்மாறன், ரமேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் உறவினர்கள் நள்ளிரவில் ஆலங்குளம்-ரெட்டியார்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 9 பேர் கும்பல் நம்பர் பிளேட் இல்லாத 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (35), முபாரக் (30) ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். அவர்கள் இருவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த கும்பல் அம்பை பகுதியில் இருந்து அட்டகாசத்தை தொடங்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதே கும்பல் அம்பை பிரம்மதேசம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி, அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற கும்பல், வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வ கணேசனை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் சென்றனர். ஆனால் அவர் இல்லாததால், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

மேலும் அங்கு வேலை செய்யும் ஊழியரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். செல்கின்ற வழியில் சாலையோரமாக நடந்து சென்ற மேலும் ஒருவரை அரிவாளால் வெட்டி விட்டு சென்றுள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5 தாக்குதல் சம்பவங்களில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நள்ளிரவில் சுத்தமல்லி அருகே கல்லூர் பகுதியில் வைத்து நெட்டுரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் இசக்கிமுத்து (19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நேற்று அதிகாலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் இன்னும் 2 பேர் மானூர் அருகே ஒரு கிராமத்தில் குளம் மற்றும் தோட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் அங்கு டிரோன் கேமராவுடன் சென்றனர். டிரோன் கேமராவை அந்த பகுதியில் பறக்க விட்டு, 2 பேரும் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

டிரோன் தங்களை நெருங்குவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் ஒரு நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஐயப்பன் என்பவரை தனிப்படை போலீசார் பிடிக்க முயற்சித்தபோது தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

காவல்துறையினரை தாக்கிவிட்டு ஐயப்பன் தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுபாய்ந்த ஐயப்பனும், தாக்குதலில் காயமடைந்த காவலரும் சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டு சம்பவத்தில் தற்போது வரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

By admin