பட மூலாதாரம், Submitted photo
-
- எழுதியவர், ராபின் லெவின்சன்-கிங்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
ஜேன் காலின்ஸ், எஃப்.பி.ஐ (FBI) அமைப்பில் 30 ஆண்டுகள் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆனால், அவர் ஓய்வுபெற்ற பிறகும் மனதைவிட்டு அகலாத ஒரு வழக்கு இருந்தது.
மைக்கேல் டொனோவன் ஒரு மோசடி பேர்வழி, முன்னாள் மதகுரு, கோடீஸ்வரர். அவரை பிடிப்பதற்காக காலின்ஸ் பல ஆண்டுகளாகப் போராடினார். ஆனால், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் அந்த வழக்கிலிருந்து அவரால் முழுமையாக விலக முடியவில்லை.
டொனோவன் அடிக்கடி ஊடகங்களிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். புலம்பெயர்ந்தோர் உரிமைகள், இனவெறிக்கு எதிரான நடவடிக்கைகள், நீதித்துறை சீர்திருத்தம் என பல்வேறு விவகாரங்களில் குரல் கொடுப்பவராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார்.
அவரும் அவரது கணவர் ரிச்சர்ட் மூரும், வர்ஜீனியாவின் அகஸ்டா கவுண்டியில், அப்பலாச்சியன் மலைத்தொடரின் அருகே வசித்து வந்தனர். காலின்ஸ் வசித்த இடத்திலிருந்து அவர்களது வீடு சுமார் ஒரு மணிநேர பயண தொலைவில் இருந்தது.
இருவரும் இணைந்து ‘லிப்ரே பை நெக்ஸஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். அமெரிக்காவின் புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டிருந்தவர்களை பிணையில் விடுவிக்க உதவுவதாகக் கூறி, இந்த நிறுவனம் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது. ஆனால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மோசடியானவை என்று அரசு ஒழுங்குமுறை அமைப்புகள் குற்றம் சாட்டின.
காலின்ஸை பொறுத்தவரை, டொனோவனும் மூரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தனர்.
2016 முதல் 2021-ஆம் ஆண்டு எஃப்பிஐ பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை, காலின்ஸ் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் நீடித்த விசாரணையின் முடிவில், இருவரில் மூர் மீது மட்டுமே வரி தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டொனோவன் மீதான விசாரணையும் காலின்ஸ் எதிர்பார்த்த முடிவை எட்டவில்லை.
ஓய்வுபெற்ற பிறகும் அந்த வழக்குடன் தொடர்புடைய சில விசாரணைத் தடயங்களை காலின்ஸ் கைவிடவில்லை. அவற்றில் முக்கியமானது, ஃபுளோரிடாவின் பார்க்லேண்டில் 17 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரியின் சகோதரரான ஜாக் குரூஸ் தொடர்பான விவகாரம்.
‘நெக்ஸஸ்’ தம்பதியினர், ஜாக் குரூஸுக்காக 5 லட்சம் டாலர் பிணைத்தொகையை செலுத்தி, அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அவருக்கு தங்குமிடமும் ஏற்பாடு செய்ததுடன், அவர் சார்பாக ஊடகங்களிலும் பேட்டியளித்தனர்.
ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜாக் குரூஸின் மறைந்த தாயாருக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டுத் தொகையிலிருந்து 4 லட்சம் டாலரை டொனோவனும் மூரும் அபகரித்தது தெரியவந்தது. இந்தப் பணத்தைத் திருடிய குற்றத்துக்காக, கடந்த மாதம் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது காலின்ஸ் முக்கிய சாட்சியாக ஆஜரானார்.
இந்த வழக்கு தொடர்பாக பிபிசிக்கு அளித்த தனது ஒரே நேர்காணலில், டொனோவனையும் மூரையும் நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கும், அவர்கள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்பதை உறுதிசெய்வதற்கும் இதுவே தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு என்று காலின்ஸ் தெரிவித்தார்.
“மக்கள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க செய்யப்படுவது மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறினார்.
ஆவண ஆதாரங்கள்
சிறு வயதிலிருந்தே எஃப்.பி.ஐ அதிகாரியாக வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகக் கூறுகிறார் ஜேன் காலின்ஸ்.
“நீதி கிடைக்க செய்வதிலும், தவறுகளுக்கு தீர்வு காண்பதிலும் எனக்கு எப்போதும் மிகுந்த ஆர்வம் உண்டு. இந்த இரண்டும் இயல்பாகவே ஒன்றோடொன்று இணைந்தவை என்று நினைக்கிறேன்” என்கிறார் 64 வயதான காலின்ஸ். வர்ஜீனியாவின் சார்லோட்ஸ்வில்லில் உள்ள தனது வீட்டிலிருந்து அவர் தனது கடந்தகால அனுபவங்களை நினைவுகூர்கிறார்.
அவரது வீட்டின் சுவரில், தற்போது உயிருடன் இல்லாத அவரது செல்ல நாயான ‘யோகி’ என்ற கோல்டன் ரிட்ரீவரின் புகைப்படம் தொங்குகிறது. வீட்டின் முன்புறத்தில் ஒரு பழங்கால காரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகப் படிப்பை முடித்ததும், எஃப்பிஐ-யின் பயிற்சி மையமான குவாண்டிகோவில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பின்னர் எஃப்பிஐ-யில் இணைந்த காலின்ஸ், படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றார். ரஷ்ய உளவாளிகளைக் கண்காணிப்பது முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டறிவது வரை பல்வேறு விசாரணைப் பணிகளில் ஈடுபட்டார்.
1990-களின் பிற்பகுதியில், நிதி மோசடிகள் உள்ளிட்ட ‘ஒயிட் காலர்’ குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்தப் புதிய பணி அவருக்குப் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. “இதுவே எனக்கு மிகவும் பிடித்தமான பணியாக மாறியது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது” என்று அவர் கூறுகிறார்.
குறிப்பாக, இத்தகைய வழக்குகளில் கிடைக்கும் ஆவண ஆதாரங்களை ஒன்றிணைத்து, அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டறிவது அவருக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு வழக்கும் ஒரு புதிரைப் போல அமைந்திருக்கும். ஆவணங்களில் உள்ள சிறிய தடயங்களைக்கூடத் தொடர்புப்படுத்தி, மோசடியின் முழு பின்னணியையும் கண்டறிவது அவருக்குப் பிடித்த சவாலாக இருந்தது.
“இத்தகைய வழக்குகளில் உறுதியான ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைக்கும். ‘ஆவணங்கள் ஒருபோதும் பொய் சொல்லாது’ என்று நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு. இந்த விசாரணைகள் மிகவும் சவாலானவை” என்கிறார் அவர்.
இந்த விசாரணைகள், நிதி மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களின் துயரத்தை காலின்ஸுக்கு உணர்த்தின. இத்தகைய குற்றங்களால் மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பைக்கூட இழப்பதுடன், ஆழமான மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
“பணத்தை இழப்பதுடன், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது பலரும் தங்களையே குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்கிறார் காலின்ஸ்.
உரிய நேரத்தில் நிகழ்ந்த வருகை
பார்க்லேண்டில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில், தனது அண்ணன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் மூன்று ஊழியர்களும் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தைப் புரிந்துகொண்டு மனதளவில் ஏற்றுக்கொள்ளும் நோக்கில் ஜக்காரே க்ரூஸ் மீண்டும் அந்தப் பள்ளிக்குச் சென்றார்.
ஆனால், அங்கு ஸ்கேட்போர்டிங் செய்துகொண்டிருந்த அவரைக் கண்ட காவல்துறையினர், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்தனர். அப்போது 18 வயதான க்ரூஸுக்கு, அவரது அண்ணன் நடத்திய படுகொலையைத் தொடர்ந்து நீதிமன்றம் 5 லட்சம் டாலர் பிணைத்தொகை விதித்திருந்தது.
அவரை சிறையிலிருந்து விடுவிக்க உதவுமாறு அவரது நண்பர் ஒருவர் ‘நெக்ஸஸ்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். ஆனால், டொனோவனும் மூரும் பிணைத்தொகையை செலுத்தியதோடு நிற்கவில்லை. சிறையிலிருந்து க்ரூஸை நேரில் அழைத்து வந்து, ஹோட்டல் அறையிலும் தங்கவைத்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த க்ரூஸ், அந்த தம்பதியினரை முதன்முதலில் சந்தித்த அனுபவம், “ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது” என்று குறிப்பிட்டார்.
அன்று இரவு உணவின்போது, க்ரூஸ் விரும்பினால் வர்ஜீனியாவுக்கு வந்து தங்களது நிறுவனத்தில் பணியாற்றலாம் என்று டொனோவனும் மூரும் அவரிடம் தெரிவித்தனர். அவரது நன்னடத்தை கண்காணிப்புக்குப் பொறுப்பான ஃபுளோரிடா நீதிபதியும் இதை ஓர் “அற்புதமான வாய்ப்பு” என்று வர்ணித்தார்.
விரைவிலேயே க்ரூஸ் அந்த தம்பதியினருடன் வசிக்கத் தொடங்கினார். அவர்களது ஊடக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். டொனோவனும் மூரும் அவரை தங்களுடன் நேர்காணல்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தனது அண்ணன் செய்த குற்றங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் தான் முயற்சிப்பதாகக் க்ரூஸ் பேசினார்.
மேலும், பிரபல கொலையாளியின் சகோதரராக வாழ்வது எப்படியிருக்கும் என்பதை மையமாகக் கொண்டு, ‘பீயிங் சாக் க்ரூஸ்’ என்ற குறுகிய கால இணைய ரியாலிட்டி நிகழ்ச்சியை உருவாக்கவும் அந்த தம்பதியினர் உதவினர்.
“அது ஒரு சாதாரணமான வாழ்க்கையாக இருக்கவில்லை” என்று பின்னர் க்ரூஸ் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த நேர்காணலில், க்ரூஸ் தங்களது குடும்பத்தில் ஒருவராகிவிட்டதாக மூரும் டொனோவனும் கூறினர். அவரை தங்களது “மகன்” என்றே அழைத்த அவர்கள், ஸ்கேட்போர்டிங் துறையில் அவர் தொடர்ந்து ஈடுபடுவதற்காகப் பெருமளவில் பணம் செலவிட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், இந்த உறவின் மறுபுறத்தில் வேறொரு நிலைமை இருந்தது. அந்த தம்பதியினர் பெரும் கடனில் சிக்கியிருந்ததுடன், கடன் வழங்கியவர்களுடனும் வருமான வரித்துறை அதிகாரிகளுடனும் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கிடையிலும், அவர்களின் நிதி முறைகேடுகள் குறித்து ஜேன் காலின்ஸ் தனது விசாரணையைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.

டொனோவனும் மூரும் தங்களது செல்வத்தை ஆடம்பரமான வாழ்க்கைக்காக பணத்தை வாரி இறைத்தனர். சொகுசு கார்களின் அணிவகுப்பு, 5 லட்சம் டாலர் செலவில் பிரமாண்ட திருமணம், ‘சுதந்திரமற்ற அமெரிக்கா: உங்கள் அரசாங்கம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாதவை’ என்ற தலைப்பில் ஒரு மில்லியன் டாலர் செலவில் சுயமாக வெளியிட்ட புத்தகம் என அவர்களது ஆடம்பரமான செலவுகள் நீண்டன.
ஆனால், அவர்களுக்குப் பெருமளவில் கடன்களும் இருந்தன. உரிமம் பெறாமல் பிணை பத்திர வணிகத்தை நடத்தியதற்காகப் பல்வேறு மாநிலங்களின் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்புகள் விதித்த அபராதத் தொகையை அவர்கள் செலுத்தாமல் இருந்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய வாடிக்கையாளர்களுக்காக செலுத்திய பிணைத்தொகையைத் திரும்பப் பெற முடியாததால், தங்களது முன்னாள் வணிகக் கூட்டாளியான ஆர்.எல்.ஐ இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் பல மில்லியன் டாலர்கள் கடன்பட்டிருந்தனர். இதுதவிர, அமெரிக்க வருவாய்த் துறைக்கு மட்டும் மூர் 3 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வரி பாக்கி வைத்திருந்தார்.
இந்த வரிக்கடனே, க்ரூஸுக்கு சேர வேண்டிய வாரிசு சொத்தை அபகரிக்க மூரையும் டொனோவனையும் தூண்டியதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், டொனோவன் தனது வழக்கறிஞர் மூலம் பிபிசி நேர்காணலுக்கு மறுப்புத் தெரிவித்தார்.
தொடக்கத்தில், ‘லிப்ரே பை நெக்ஸஸ்’ நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், அந்நிறுவனம் ஏதேனும் சட்டவிதிகளை மீறியுள்ளதா என்பதைக் கண்டறிவதிலும் காலின்ஸ் தனது விசாரணையை மையப்படுத்தியிருந்தார்.
ஆனால், டொனோவனும் மூரும் க்ரூஸைப் பயன்படுத்தித் தனிப்பட்ட ஆதாயம் தேடக்கூடும் என்ற தகவல் கிடைத்ததும், விசாரணையின் போக்கு மாறியது.
மாவட்ட நீதிமன்றத்தின் தேடுதல் உத்தரவின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட வங்கிப் பதிவுகள் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. க்ரூஸின் தாயார் இறந்த பிறகு, அவருக்கு சேர வேண்டிய 4,28,000 டாலர் ஆயுள் காப்பீட்டுத் தொகை, 2019-ஆம் ஆண்டு க்ரூஸும் மூரும் இணைந்து வைத்திருந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது. பின்னர், அந்தப் பணம் மூரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கும் மாற்றப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் க்ரூஸ் இன்னும் டொனோவனுடனும் மூருடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவரிடம் நேரடியாகப் பேசுவதற்காக காலின்ஸ் முயற்சி மேற்கொண்டார்.
ஒரு மாலை நேரத்தில், அவர்களது வீட்டுக்குக் காரில் சென்றபோது, அங்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் ஒருவர் பணியில் இருந்ததைக் கண்டதாகக் காலின்ஸ் கூறுகிறார். மேலும், வீட்டின் முன்கதவுக்கும் வாகனங்கள் உள்ளே செல்லும் பாதைக்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
“யாரும் அவ்வளவு எளிதாக அந்த வீட்டுக்குள் வந்துவிடவோ, வெளியேறிவிடவோ முடியாது” என்று அப்போது தனக்குள் நினைத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார்.
ஆனால், காலின்ஸ் எவ்வளவு முயன்றும் க்ரூஸ் வீட்டின் கதவைத் திறக்கவில்லை.
சந்தேகத்தின் நிழல்
2016-ஆம் ஆண்டு முதல், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு வருவாய்த் துறை மற்றும் குடியேற்ற சட்ட அமலாக்கம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் காலின்ஸ் இணைந்து பணியாற்றி வந்தார். நெக்ஸஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதா, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைப் பணியமர்த்தியதா, க்ரூஸுக்கு சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதா, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தன.
ஆனால், காலின்ஸ் ஓய்வுபெறும் நேரத்தில், இந்த வழக்கைக் கையாண்டு வந்த கூட்டாட்சி அரசு வழக்கறிஞர், விசாரணையை வரி மோசடி குற்றச்சாட்டுடன் மட்டும் வரையறுத்து, வழக்கை வேறொரு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். இதனால், பல ஆண்டுகளாக இந்த வழக்கில் போராடி வந்த காலின்ஸ் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
இறுதியில், குற்றவியல் வழக்குகளைத் தொடரும் அதிகாரம் இல்லாமல், உரிமையியல் வழக்குகளைத் தொடரும் அதிகாரம் கொண்ட அமெரிக்காவின் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம், நெக்ஸஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக, அந்த நிறுவனத்துக்கு எதிராக 811 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
“மற்ற சட்ட அமலாக்க வழிகள் பலனளிக்காதபோது, பெருநிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. இதன்மூலம், மிகவும் அவசியமான ஒரு பணியை அது மேற்கொள்கிறது” என்று பெர்க்லி நுகர்வோர் சட்டம் மற்றும் பொருளாதார நீதிக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் டெட் மெர்மின் தெரிவித்தார்.
“ஒரு குற்றவியல் வழக்கைத் தொடர வேண்டுமானால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். ஆனால், உரிமையியல் வழக்கில், அவர்கள் சட்டத்தை மீறியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை நிரூபித்தாலே போதுமானது” என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், காலின்ஸின் ஓய்வுக்காலம் நெருங்கியது. எஃப்.பி.ஐ அமைப்பில் 57 வயது என்பது கட்டாய ஓய்வு வயதாகும். ஏற்கெனவே அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் தனது 59-வது வயதில் அவர் ஓய்வுபெற்றார்.
பணிஓய்வுபெற்று சில மாதங்களுக்குப் பிறகு, க்ரூஸ், டொனோவன் மற்றும் மூர் ஆகிய மூவரும் காலின்ஸுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்பு ஒன்றுடன் இணைந்து போலியான கூட்டு விசாரணையை நடத்த அவர் சதி செய்ததாகவும், துறை விதிகளையும் சட்டங்களையும் மீறி தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டதால் அவரது பனிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், எஃப்பிஐ தரப்பு மறுப்பைத் தொடர்ந்து, கூட்டாட்சி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதை ஆதாரமற்ற முயற்சி என குறிப்பிட்ட காலின்ஸ், “அவர்களைக் கண்டு எனக்கு அச்சமில்லை” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், டொனோவன் தனது வழக்கறிஞர் மூலம் பிபிசியின் கருத்து தெரிவிக்கும் கோரிக்கையை நிராகரித்தார். நெக்ஸஸ் நிறுவனத்தின் வரிக் கணக்குகளில் மோசடி செய்த குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மூர், பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
எஃப்.பி.ஐ பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பு, காலின்ஸ் தனது மேலதிகாரிகளையும், அந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கப் பொறுப்பேற்ற அதிகாரியையும் சந்தித்துப் பேசினார். அந்த வழக்கில் ஒருநாள் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் கைவிடவில்லை.
ஆனால், ஓராண்டுக்கும் மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
சீட்டுக்கட்டு
சில காலத்துக்கு, இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றியது. ஆனால், 2022-ஆம் ஆண்டு அக்டோபரில், உள்ளூர் காவல்துறையினரும் வர்ஜீனியா மாநில காவல்துறையினரும் ஃபிஷர்வில்லில் இருந்த மூர் மற்றும் டொனோவனின் வீட்டிலும், வெரோனாவில் அமைந்திருந்த அவர்களது அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
காலின்ஸ் எதிர்பார்த்தபடி இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கையாக இல்லாவிட்டாலும், குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
இந்த சோதனையின்போது, மடிக்கணினிகள், செல்போன்கள், உடலில் பொருத்தப்படும் கேமராக்கள் மற்றும் பென் டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். டொனோவனும் மூரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறையினரின் அதிரடி சோதனைக்கு சில நாட்களுக்குப் பிறகு, பிபிசி குழுவினர் நெக்ஸஸ் அலுவலகத்துக்கு சென்று அந்தத் தம்பதியினரை நேர்காணல் செய்தனர். அப்போது, முன்கதவின் உடைந்த கண்ணாடித் துண்டுகள் சோதனையின் தடயங்களாக அங்கேயே கிடந்தன.
நேர்காணலின்போது, க்ரூஸைத் தாங்கள் ஒருபோதும் சுரண்டவில்லை என்றும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் டொனோவனும் மூரும் மறுத்தனர். அப்போது அவர்களுடன் வசித்து வந்த ஜாக் க்ரூஸும், தனது வாரிசு சொத்துப் பணத்தைத் தனது விருப்பத்தின்பேரிலேயே செலவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். எனினும், தற்போது அவர் அந்தத் தம்பதியினருடன் வசிக்கவில்லை. வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சியாகவும் ஆஜரானார்.
2021-ஆம் ஆண்டு எஃப்பிஐ பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, காலின்ஸ் மற்றொரு மாநில அரசு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள அவர், அதன் பிறகு தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும் விரும்புகிறார்.
தனது பணிக்காலத்தின் இறுதியில் நடந்த இந்த சம்பவத்தை அவர் ஏமாற்றமளிக்கும் ஓர் அத்தியாயமாகவே கருதுகிறார். இந்த வழக்கை இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
“எனது பணியை நான் மனப்பூர்வமாக நேசித்தேன். அதற்காக நான் மேற்கொண்ட எந்தச் செயலையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. பல்வேறு வழிகளில், என்னால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததாகவே உணர்கிறேன். இருப்பினும், இந்த வழக்கின் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது” என்று அவர் கூறுகிறார்.
ஆயினும், இறுதியில் யாரோ ஒருவர் இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, அதன் முடிவை எட்டச் செய்ததற்காக அவர் நன்றியுணர்வுடன் இருக்கிறார்.
டொனோவன் மற்றும் மூர் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மையானவை, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் குழு தீர்ப்பளித்த செய்தியைக் கேட்டபோது, “இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது” என்று தான் உணர்ந்ததாக காலின்ஸ் தெரிவிக்கிறார்.
“நீதிக்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் கட்டியெழுப்பியிருந்த பொய்களின் கோட்டை, சீட்டுக்கட்டு சரிந்து விழுவதைப் போல முற்றிலும் தகர்ந்து விழும் தருணத்திற்காகவும் காத்திருக்க வேண்டியிருந்தது” என்று அவர் தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு