37
கத்தார் தேசத்தின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இலங்கை ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதே விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வெற்றிகொண்டு சம்பியனான பாகிஸ்தான் ஏ அணி சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது.
அதேவேளை, கடந்த வருடம் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் அரை இறுதியில் 5 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை ஏ அணி இந்த வருடம் பதிலடி கொடுத்து கிண்ணத்தை சுவீகரிக்கும் கங்கணத்துடன் களம் இறங்கவுள்ளது.
ஏ குழுவில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை 6 விக்கெட்களாலும் ஹொங்கொங்கை 24 ஓட்டங்களாலும், பங்களாதேஷ் ஏ அணியை 7 விக்கெட்களாலும் வெற்றிகொண்ட இலங்கை ஏ அணி, அரை இறுதியில் இந்தியாவை 6 விக்கெட்களால் வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இலங்கை செய்திகள்
பி குழுவில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 61 ஓட்டங்களாலும் இந்திய ஏ அணியை 48 ஓட்டங்களாலும் நேபாள அணியை 96 ஓட்டங்களாலும் வெற்றிகொண்ட பாகிஸ்தான் ஏ அணி, அரை இறுதியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளினதும் பெறுபேறுகளையும் வீரர்களின் ஆற்றல்களையும் ஒப்பிடுகையில் இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாக தென்படுகின்றன.
இலங்கை ஏ அணியில் லசித் குரூஸ்புள்ளே (ஒரு சதம் உட்பட 260 ஓட்டங்கள்), நிஷான் மதுஷ்க (203), அணித் தலைவர் பவன் ரத்நாயக்க (156), சினேத் ஜயவர்தன (ஒரு சதம் உட்பட 147) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வனுஜ சஹான் (7 விக்கெட்கள்), ரவிந்து பெர்னாண்டோ (6), நிப்புன் தனஞ்சய (5), துலாஜ் சமுதித்த, ஜனித் லியனகே, விஜயகாந்த் வியாஸ்காந்த் (மூவரும் தலா 4 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எ அணியில் ஹசன் நவாஸ் (176 ஓட்டங்கள்), மாஸ் சதாகத் (131), பர்ஹான் யூசுப் (13), அப்துல் சமாத் (124), ஷமில் ஹசன் (115) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் சுபியான் மொக்கிம் (10 விக்கெட்கள்), அலி ராஸா (8) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு அமைய இன்றைய இறுதிப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்படும் என்பதுடன் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()

