படக்குறிப்பு, பாம்புகள் வருவதைத் தடுக்கவும் வந்தாலும் விரட்டவும் கூடும் ஸ்பிரே என்ற பெயரில் இணையத்தில் சில பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை பயனுள்ளவை அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்கட்டுரை தகவல்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வீடு, தோட்டம், விவசாய நிலம் போன்ற இடங்களில் பாம்புகள் வராமல் தடுக்கும் என்று இணையத்தில் பல்வேறு ஸ்பிரேக்களும் ரசாயனப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவை உண்மையில் பாம்புகளை விரட்டுகின்றனவா? அறிவியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளனவா?
“Snake Repellent” என்று இணையத்தில் தேடினால், “பாம்புகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும், குறிப்பிட்ட பகுதிக்குள் பாம்புகள் நுழைவதைத் தடுக்கும்” எனக் கூறும் ஏராளமான பொருட்கள் காணக் கிடைக்கின்றன.
சிலவற்றில் அத்தியாவசிய எண்ணெய்களும், சிலவற்றில் கந்தகம், நாப்தலீன் போன்ற ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்தப் பொருட்கள் குறித்த விளக்கவுரைகளில் கூறப்பட்டுள்ளன. சில தயாரிப்புகள் தாங்கள் உருவாக்கும் கடுமையான வாசனை காரணமாக பாம்புகளை அந்தப் பகுதியைத் தவிர்க்க வைக்கும் என்றும் விளம்பரப்படுத்துகின்றன.
ஆனால் ஒரு பொருளுக்குக் கடுமையான வாசனை இருப்பது மட்டுமே, அது பாம்புகளை விரட்டும் என்பதற்கான நம்பகமாக ஆதாரமாகிவிடாது என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஊர்வனம் அமைப்பின் நிறுவனர் விஸ்வநாதன். பாம்புகளின் வாழ்வியல், பாம்பு-மனித எதிர்கொள்ளல் குறித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வரும் அவர், பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய பாம்புகளில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுவது என்ன?
இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வு இதுகுறித்து நடத்தப்பட்ட முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஆய்வு 2012 ஜூலை 29ஆம் தேதி சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்ற ஆய்விதழில் வெளியானது. இந்தியாவின் முக்கிய நச்சுப் பாம்புகளான நாகப் பாம்பு, கட்டு வரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு எதிராக சில பாம்பு விரட்டும் தயாரிப்புகள் பரிசோதிக்கப்பட்டன.
ஆய்வக சூழலில் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனைகளில், சில தயாரிப்புகள் பாம்புகளைத் தவிர்க்கச் செய்தன. குறிப்பாக சில தயாரிப்புகள் மற்றும் கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜினால் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
இதில் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. இந்தப் பரிசோதனைகள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் நடத்தப்பட்டவை. இதன் முடிவுகளை அப்படியே வீடு, தோட்டம், வயல்வெளி போன்ற இயற்கைச் சூழலுக்குப் பொருத்த முடியாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும், அவற்றை ஒரு முழுமையான பாதுகாப்பு நடவடிக்கையாகவோ அல்லது அணுகுமுறையாகவோ நம்பக்கூடாது என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஆய்வகத்தில் வேலை செய்வது, வெளிப்புறச் சூழலிலும் வேலை செய்யுமா?
இது பாம்பு விரட்டி என்ற பெயரில் விற்கப்படும் பொருட்களைப் பற்றி எழக்கூடிய முக்கியமான கேள்வி, இயற்கையான புறச்சூழலில் அவை வேலை செய்யுமா என்பதுதான்.
கடந்த 2008ஆம் ஆண்டு அப்லைட் ஹெர்பெடாலஜி என்ற ஊர்வனவியல் துறை சார்ந்த ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வில், நாப்தலீன், கந்தகம் அடங்கிய கலவை பாம்புகளுக்கு எதிராகப் பரிசோதிக்கப்பட்டது.
இயற்கையான வெளிப்புறச் சூழலை ஒத்த அமைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மிகச் சில பாம்புகளே ரசாயனம் பயன்படுத்தப்பட்ட பகுதியைத் தவிர்த்தன. அதேவேளையில், பல பாம்புகள் அந்தப் பகுதியைக் கடந்து சென்று வழக்கம் போலச் செயல்பட்டன.
இந்த ஆய்வின் இறுதியில், இப்படியான பாம்பு விரட்டி கலவைகள் பாம்புகளை முழுமையாக விரட்டி, நமக்கு ஆபத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்நேக் பிளான்ட் என்றழைக்கப்படும் பாம்புக் கற்றாழை
இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள்?
இணையத்தில் விற்கப்படும் பல புதிய தயாரிப்புகள் “இயற்கை முறை தயாரிப்பு” என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. இலவங்கப்பட்டை, புதினா, கிராம்பு, தேவதாரு போன்ற எண்ணெய்கள் இதில் இடம்பெறுகின்றன.
ஆனால் “இயற்கையானது” என்பதும் “பாம்புகளை விரட்டும்” என்பதும் ஒன்றல்ல.
சமீபத்தில், ஃபிரான்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, ஆப்பிரிக்காவில் விற்கப்படும் பாம்பு விரட்டி கலவை தயாரிப்புகளை ஆராய்ந்தது.
அவற்றில் பல தயாரிப்புகளில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பதையும், அவற்றின் செயல்திறனுக்கான அறிவியல் ஆதாரங்கள் குறைவாக இருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
வெளிப்புறச் சூழலில் நடத்தப்பட்ட சில பரிசோதனைகளில், சோதிக்கப்பட்ட எந்தத் தயாரிப்பும் தண்ணீரைக் காட்டிலும் சிறப்பாகப் பாம்புகளை விரட்டவில்லை என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சோற்றுக் கற்றாழை
பாம்பு விரட்டிச் செடிகள் இருப்பது உண்மையா?
அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழக விரிவாக்க சேவையின் நிபுணர் வழிகாட்டுதலில், பல்வேறு பாம்பு விரட்டிகள் பரிசோதிக்கப்பட்டு இருந்தாலும், “எதுவும் தொடர்ந்து ஒரே மாதிரியான செயல்திறனைக் காட்டவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை வலியுறுத்திப் பேசிய விஸ்வநாதன், “ஸ்நேக் பிளான்ட், சிறியா நங்கை, பெரியா நங்கை, சர்ப்பகந்தி, சோற்றுக் கற்றாழை போன்ற தாவரங்கள் பாம்பு விரட்டிச் செடிகளாக நம் ஊர்களில் நம்பப்படுகின்றன. ஆனால் அதற்கான எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரத்தையும் இதுவரை காணவில்லை என்பதுடன் நடைமுறையிலும் இந்தத் தாவரங்களின் மத்தியிலேயே பாம்புகள் நடமாடுவதைப் பார்த்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, “எலி, பெருச்சாளி போன்ற அவை விரும்பி வேட்டையாடும் இரை உயிரினங்கள் அதிகம் தென்பட்டால் பாம்பு விரட்டிச் செடிகளோ அல்லது பாம்பு விரட்டி ஸ்பிரே போன்ற வேதிம தயாரிப்புகளோ எதுவாக இருந்தாலும், பாம்புகளின் நடமாட்டத்தைத் தடுக்கப் போவதில்லை.”
அதோடு, “வீடுகளைச் சுற்றி குழந்தைகள் விளையாடுவதும் நடமாடுவதும் தினசரி அதிகமாக இருக்கும். எங்கேனும் கீழே விழும் பந்தை அவர்கள் எடுக்கும்போது அல்லது அவர்களாகவே ஏதேனும் பகுதிகளில் கைகளை வைப்பது போன்ற நடவடிக்கைகளால் இந்த வேதிமங்கள் அவர்களுடைய கைகளில் தங்கலாம்.”
“குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே வாயில் வைக்கிறார்கள் என்பதை நம்மால் நூறு சதவிகிதம் உறுதி செய்யவே முடியாது. எனவே, இத்தகைய பொருட்கள் பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்குவதைவிட குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாகும் வாய்ப்புகளே அதிகம்” என்று எச்சரிக்கிறார் விஸ்வநாதன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிறியா நங்கை, பெரியா நங்கை போன்ற தாவரங்கள் இருந்தால் பாம்புகள் வராது எனப் பொதுவான நம்பிக்கை நிலவினாலும் உண்மை அப்படியில்லை என்கிறார் ஊர்வனம் அமைப்பின் நிறுவனர் விஸ்வநாதன்
பாம்புகள் வீட்டுக்குள் வருவதைத் தடுப்பது எப்படி?
உலக சுகாதார அமைப்பும் பாம்பு கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில், ரசாயன விரட்டிகளை நம்புவதற்குப் பதிலாக சுற்றுப் புறத்தை முறையாகப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
அதுகுறித்து விளக்கிய விஸ்வநாதன், “வீட்டைச் சுற்றியுள்ள புல் மற்றும் புதர்களை அதிகமாக வளரவிடாமல் இருப்பது, குப்பைகள் மற்றும் பாம்புகள் மறைந்துகொள்ள ஏதுவான இடங்களை அகற்றுவது, வீடுகளுக்குள் பாம்புகள் நுழையக்கூடிய இடங்களை அடைப்பது போன்ற நடவடிக்கைகள்” ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறார்.
வீட்டைச் சுற்றி எலிகள் போன்ற பாம்புகளுக்கு மிக விருப்பமான இரை விலங்குகள் அதிகமாகக் காணப்படாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
பாம்பு விரட்டும் ஸ்பிரேக்களால் பயனேதும் இல்லையா?
வீடுகளைச் சுற்றி இப்படியான ஸ்பிரே தெளிக்கப்படுவதால் பாம்புகள் நிச்சயமாக வராது என்று அறுதியிட்டுக் கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்பதே நிபுணர்களின் பதிலாக உள்ளது.
எனவே, இணையத்தில் விற்கப்படும் பாம்பு விரட்டி ஸ்பிரேக்களை பாம்புகளுக்கு எதிரான உறுதியான பாதுகாப்பு அரணாகக் கருதுவது தவறான அணுகுமுறை என்பதை ஊர்வனம் அமைப்பின் நிறுவனர் விஸ்வநாதன் வலியுறுத்துகிறார்.
முன்னதாக, பிபிசி தமிழிடம் குடியிருப்புகளில் பாம்புகளால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க, “அவை நுழையக் கூடிய இடங்களை அடைப்பது, வீட்டைச் சுற்றியுள்ள புதர் மற்றும் குப்பைகளை அகற்றுவது, எலிகள் போன்ற இரை விலங்குகளைக் கட்டுப்படுத்துவது போன்ற நடைமுறை நடவடிக்கைகளே அதிக நம்பகமான தடுப்பு முறைகளாக இருப்பதாக” பாம்பு மீட்பு நிபுணரும் காட்டுயிர் ஆர்வலருமான சாம்சன் கிருபாகரன் விளக்கியிருந்தார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு பொருள் “பாம்புகளை 100% விரட்டும்” என விளம்பரம் செய்யப்படுவதற்கும், அது இயற்கைச் சூழலில் அறிவியல்ரீதியாக நிரூபணமாவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.