• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

பாரதிராஜா: சிவாஜிக்கு போட்டியாக வர நினைத்தவர் இயக்குநர் இமயமானது எப்படி?

Byadmin

Jun 10, 2026


பாரதிராஜா: சிவாஜிக்கு போட்டியாக வர நினைத்தவர் 'இயக்குநர் இமயம்' ஆனது எப்படி?

பட மூலாதாரம், Instagram/dirbharathiraja

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கிராமத்து திரைப்படங்களுக்கு வேறொரு பரிணாமம் அளித்த பாரதிராஜாவின் மறைவு, அந்த நெடிய பாரம்பரியத்தில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. 1970களின் தமிழ் சினிமாவில் அதற்கு முந்தைய தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் கோலோச்சிய காலகட்டமாக இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வருகையின் ஆரம்பகாலமாக இருந்தது.

பெரும்பாலும் ஸ்டுடியோவுக்கு உள்ளேயே எடுக்கப்பட்டிருந்த தமிழ் படங்கள், மெல்ல தமிழகத்தின் கிராமப்புற நிலப்பரப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலகட்டம். வலுவான கதைகள், கிராமப்புற யதார்த்த வாழ்வியல் ஆகியவற்றை நோக்கி நகரத் தொடங்கியிருந்த தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ ஒரு “புதிய பாய்ச்சலை” ஏற்படுத்தியது என்கின்றனர் திரைத்துறையினர்.

நாயக – வில்லன் கதாபாத்திர வடிவமைப்பை வேறொரு பரிணாமத்தில் சொல்லிய படம் ’16 வயதினிலே. ‘அவர்கள்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அந்த படத்தில் ‘சப்பானி’ போன்ற கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எனும்போது அந்த கதாபாத்திரத்தை எவ்வளவு பேர் உதாசீனப்படுத்தியிருப்பார்கள். நிச்சயம் முதலில் என்னிடம் வந்து பாரதிராஜா கதை சொல்லியிருக்க மாட்டார், பலரிடமும் கதை சொல்லியிருப்பார். பல படங்களில் சிறு கதாபாத்திரமாக வந்துபோகக்கூடிய ‘சப்பானி’ போன்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து 16 வயதினிலே எடுக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பில் யார் இயக்குநர் என்று எல்லோரும் தேடுவார்கள். அப்படி எல்லா வேலைகளையும் பார்ப்பார் பாரதிராஜா. அவர்தான் உண்மையான ‘சப்பானி'” என பேட்டி ஒன்றில் கூறியிருப்பார் கமல்ஹாசன்.

காணொளிக் குறிப்பு,

முன்னுதாரணமாக மாறிய ’16 வயதினிலே’

அழுக்கு படிந்த – கிழிந்த சட்டை, வாயில் வெற்றிலை என கதாநாயக பிம்பத்துக்கான எந்த அடையாளங்களும் இல்லாத ‘சப்பானி’, வில்லன் கதாபாத்திரத்துக்கான இலக்கணங்களை மீறிய ‘பரட்டையாக’ ரஜினிகாந்த், துருதுரு பெண்ணாக இருந்து பின்னர் முதிர்ச்சியான பாத்திர மாற்றத்தைக் காட்டும் ‘மயிலு’ ஸ்ரீதேவி, இளையராஜாவின் இசை என, தன் முதல் படத்திலேயே வலுவான முத்திரையை பதித்திருந்தார் பாரதிராஜா.

கமல், ரஜினிகாந்த் போன்ற வளர்ந்து வரும் இளம் நடிகர், ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட ஸ்ரீதேவி ஆகிய நடிகர்கள் இருந்தும் அந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கியதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

By admin