• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

பிரான்ஸில் கடும் வெப்பம்: தடைவிதிக்கப்பட்ட நீர்நிலைகளை நாடும் மக்கள்; 9 பேர் உயிரிழப்பு!

Byadmin

May 28, 2026


பிரான்ஸ் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இதுவரை குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா முழுவதையும் தாக்கியுள்ள சக்திவாய்ந்த வெப்பம் காரணமாக பல நகரங்களில் வெப்பநிலை உயர்ந்து பதிவாகியுள்ளது.

இந்தக் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். குறிப்பாக, நீண்டகாலமாக நீந்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த செயிண்ட்-மார்ட்டின் கால்வாய் பகுதியில் ஏராளமான மக்கள் திரள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நீரில் இறங்கக் கூடாது என்ற தடை நீண்ட காலமாக அமலில் இருந்தாலும், தற்போதைய கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் அதை புறக்கணித்து நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர். ஆழமான நீர், மாசுபாடு மற்றும் விபத்து அபாயங்கள் குறித்து தொடர்ந்து நினைவூட்டப்பட்டபோதிலும், பலர் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி, கால்வாயில் நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் வெப்பம் காரணமாக பல நாடுகளில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பிரான்ஸின் யோன் பகுதியில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், துலூஸ் நகரில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவ நிபுணர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளனர். போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நேரடி வெயிலைத் தவிர்த்தல் மற்றும் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளை குறைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிரான்ஸில் கடும் வெப்பம்: தடைவிதிக்கப்பட்ட நீர்நிலைகளை நாடும் மக்கள்; 9 பேர் உயிரிழப்பு! appeared first on Vanakkam London.

By admin