61
பிரித்தானியாவில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கணிசமான அளவு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். கடந்தகாலங்களில் புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழரின் அரசியல் பிரவேசமானது தமது இனத்தின் வலிமையான இருப்பினை பதிவு செய்வதாக அமைகின்றது. இந்த வகையில் பிரித்தானியாவில் வலுச் சேர்ப்பவர்கள் பலர்.
பிரித்தானியாவில் பரவலாக அறியப்பட்ட ஒரு சமூகச் செயற்பாட்டாளர் இந்த முறை களம் இறங்கியுள்ளார். Franco Group(UK) நிறுவனத்தில் Chief Operating Officer ஆகக் கடமையாற்றும் இவர், யாழ்ப்பாணம் இளவாலை புனித கன்னியர் மடக் கல்லூரியின் ( Ilavalai Holy Family Convent) மாணவியாகவும் பின்னர் வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவியாகவும், இப்போது இலண்டனில் தமிழ்ச் சமூக நலன் கொண்ட சமூக சேவகியாகவும் அறியப்பட்ட ஜொய்சி ஜோசப் தெற்கு இலண்டன் சட்டன் பகுதியில் Sutton St Helier West வட்டாரத்தில் லிபரல் டெமோகிராட்ஸ் (Liberal Democrats Party) கட்சி சார்பாக போட்டியிடுகின்றார்.

ஒரு வட்டாரத்தில் மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அரசியல் யாப்பின் நடைமுறையில் இவர் களமிறங்கிய Liberal Democrats (Lib Dem) கட்சி சார்பாக மேலும் இரண்டு வேட்பாளர்கள் மற்றைய சமூகத்திலிருந்து போட்டியிடுகின்றார்கள். இவர்களைக் கட்சியே தெரிவுசெய்வது நடைமுறை. இந்த வட்டாரத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலும் செல்வாக்குச் செலுத்துவதாலும் ஈழத்தமிழ்ப் பெண் ஜொய்சி ஜோசப் இன் பிரவேசம் இன்றியமையாதது என அந்தக் கட்சி கருதியிருக்கலாம். ஆகவே தமிழர்கள் ஆகிய நாம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தவறக்கூடாது.
சமூகம் சார்ந்த சிந்தனை உடையவர்கள், தாம் சார்ந்த இனத்தின் நலனிலும், வளர்ச்சியிலும் கரிசனையைக் காட்டுவர். புலம்பெயர்ந்த தேசமொன்றில் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தினை நிலைநிறுத்தி எமக்கென்ற அரசியலை முன்னெடுக்கும் ஆற்றல் ஜொய்சி ஜோசப் அவர்களுக்கு உண்டு.
யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்து ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் வவுனியாவில் வளர்ந்து உயர் கல்வியைக் கற்றதுடன் வவுனியாவில் வாழும் காலத்தில் அந்த சமூகத்துடன் இணைந்த இவரது பயணம்
பிரித்தானியாவில் குறிப்பாக இலண்டனில் பல சமூக அமைப்புக்களுடன் களமுனைகளில் இணைந்து இயங்கும் வலுவைக் கொடுத்தது எனலாம்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்புடன் (KILI PEOPLE) கடந்த 15 வருடங்களாக ஒரு வலுச்சேர்க்கும் செயற்பாட்டாளராக இயங்கி வருவதுடன் அண்மைக்காலங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் முதன்மைச் செயற்பாட்டாளராகவும் ஆளுகை சபை உறுப்பினராகவும் இயங்குகின்றார். வவுனியா பாடசாலைப் பழைய மாணவர்களின் கூட்டமைப்பு நடாத்தும் வவுனியாச் சங்கமத்தின் பின்புலத் தூணாகச் செயற்படுபவர். அதுமட்டுமல்ல, தெற்கு இலண்டனில் இயங்கும் சேபிட்டன் விளையாட்டுக் கழகத்தின் (Surbiton Sports Club) நிர்வாகிகளில் ஒருவராகவும் செயற்பட்டுள்ளார்.

இலண்டனில் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களின் கலைப் பண்பாட்டியல் வளர்ச்சிக்காக பணியாற்றும் சிகரம் அமைப்பின் பணிப்பாளராக இயங்கும் இவர் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளம் தலைமுறையினரின் இசை ஆர்வத்தினை வளப்படுத்தி அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் தலைமுறை தாண்டிய பயணத்தில் முன்னின்று உழைப்பவர். அதில் பல வெற்றிகளையும் காண்பவர். இவர் அறிமுகப்படுத்திய இளம் பாடகர்கள் இன்று ஏணிப்படிகளில் சிகரம் தொடும் பயணத்தில் தமது ஆற்றலால் முன்னேறுகின்றார்கள். அவர்களின் ஆற்றலை அடையாளம் கண்டு களம் கொடுத்த பெருமைக்குரியவர் ஜொய்சி ஜோசப்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மக்களுக்கு நெருக்கமானதாக அமைவதாலும் அவர்களின் வாழ்வியலின் தேவைகளை அருகிலிருந்து நிறைவேற்றுவதாலும் மக்களுடன் களமுனைகளில் செயலாற்றுபவர்கள் பிரதிநிதிகளாக இருப்பது மக்களுக்கு நன்மைதரும். மக்களின் ஆதரவோடு இந்தத் தலையாய பணியை செயற்படுத்தும் தகுதி Sutton St Helier West வட்டாரத்தில் லிபரல் டெமோகிராட்ஸ் (Liberal Democrats Party) கட்சி சார்பாக போட்டியிடும் ஜொய்சி ஜோசப் அவர்களுக்கு உண்டு.
பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழ் பெண் ஜொய்சி ஜோசப் அவர்களை தெரிவு செய்வது எம் இனத்திற்கான வலிமை என்பதை நாம் மனதிலிருத்தி செயற்படுவோம். Sutton St Helier West வட்டாரத்தில் வசிப்பவர்கள் இம்மாதம் 7 ஆம் திகதி தவறாது ஜொய்சி ஜோசப் அவர்களுக்கு வாக்களியுங்கள். இந்த வட்டாரத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் வாக்களிக்க அழையுங்கள்.
– சுப்ரம் சுரேஷ்-

