ஒற்றைப் பாலனடி – கிளியே
உயிரும் போனதடி!
பஞ்சு முகம்வாடப் பாலகனைத் தீயவர்கள்
நெஞ்சில் குண்டேற்றிக் – கிளியே
நினைத்தால் வலிக்குமடி!
அம்மா எனக்கதறி அஞ்சியவன் நிற்கையிலே
கும்மியாடிச் சுட்டாரடி – கிளியே
கொடுமை மிகுந்ததடி!
உண்ண உணவின்றி ஓடிவந்த பிள்ளையினை
விண்ணில் சேர்த்தார் – கிளியே
வேதனை ஆகுதடி!
பிஞ்சுப் பாலகனைப் பேய்கள் சூழ்ந்துநின்று
வஞ்சித்தே கொன்றாரே – கிளியே
வையம் அழுகுதடி!
கண்கள் பயத்தாலே கலங்கித் தவித்தவனைப்
புண்கள் செய்தாரே – கிளியே
பூமி துடித்ததடி!
ஆயுதங்கள் ஏந்தாத அண்ணன் மகவினைத்
தீயுமிழ்ந்து சுட்டாரே – கிளியே
தீமை வென்றதடி!
தந்தை முகம்மறந்து தாயைத் தொலைத்தவனைச்
சிந்தை கெட்டுநின்ற – கிளியே
சிங்களப்பேய் தின்றதடி!
வெள்ளை மனமுடைய வேங்கை இளங்கன்றைக்
கொள்ளி வைத்தவர் – கிளியே
கொள்கை அழித்தாரே!
ஈழத் தமிழ்நிலத்தின் இளைய நிலவினைக்
வீழச் செய்தாரே – கிளியே
விம்மி அழுவோமடி!
காக்கிச் சீருடைகள் கவ்விப் பிடித்தவனைத்
தூக்கி எறிந்தாரே – கிளியே
துயரம் வாட்டுதடி!
சித்திரமே போன்றவனைச் சிங்களம் சிதைக்கையிலே
நித்திரையைப் போலவன் – கிளியே
நிலத்தில் கிடந்தானே!
நாளை வருமென்று நம்பி நின்றவனை
வேளை அறிந்து – கிளியே
வேதனை செய்தாரே!
பாலகன் என்றேனோ பாவிக்குத் தெரியவில்லை
ஞாலம் அழுததடி – கிளியே
நியாயம் செத்ததடி!
புலிக் குருளையினைப் புல்லர் படைவளைத்து
பலியெடுத் தனரடி – கிளியே
படுபாவிக் கூட்டமடி!
சாகும் தருணத்திலும் சாட்சிக்கு ஆளின்றி
வேகும் மனமுடனே – கிளியே
வெம்பித் துடித்தானடி!
-வன்னியூர்ப் பூங்குழலி