11
யுத்தத்தினால் கண்பார்வையை இழந்த 21 முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிளி மக்கள் அமைப்பினால் நிலையான வைப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிரந்தர மாதாந்த வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் வங்கியில் நிலையான வைப்புத்தொகை இடப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் மாதாந்த வட்டித் தொகையைக் கொண்டு அவர்கள் தொடர்ச்சியான வாழ்வாதார வருமானத்தைப் பெற முடியும். ஏற்கெனவே இச்சங்கத்தின் நடவடிக்கையினால் 33 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க அலுவலகத்தில், அதன் தலைவர் மகிந்தகுமார், ஞானகுமார் மற்றும் நிர்வாகிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்று (03) நடைபெற்றது. கிளி மக்கள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் கிருஷ்ணபிள்ளை விக்கினராஜா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பல்வேறு புலம்பெயர் தனவந்தர்கள் நிதி அனுசரணை வழங்க முன்வந்துள்ளனர்.
இதற்கமைய, இலண்டன் வர்த்தகர் தங்கராஜா கலாமோகன் 10 பயனாளிகளுக்கான வைப்புத் திட்டத்திற்கு 5 மில்லியன் ரூபாவையும், கிளி மக்கள் அமைப்பின் உபதலைவர் மகாலிங்கம் விஜய் இரண்டு பேருக்காக ஒரு மில்லியன் ரூபாவையும், இலண்டனிலிருந்து கலந்துகொண்ட இலண்டன் வர்த்தகர் விசுவாசம் ஒரு பயனாளிக்காக 5 இலட்சம் ரூபாவையும், இலண்டன் மருத்துவ பீட மாணவி அபினயா விஜயராஜா இரண்டு பேருக்கான வைப்புத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவையும் நன்கொடையாக வழங்க இணங்கியுள்ளனர்.
இத்திட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவுசெய்யப்பட்டு, எதிர்வரும் வாரங்களில் முறைப்படி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிளி மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

