பட மூலாதாரம், Kiran Sakle/BBC
“என் மூச்சு இருக்கும் வரை என் மகள்களைப் படிக்க வைப்பேன். மூச்சு நின்றுவிட்டால் என்ன நடக்கிறதோ நடக்கட்டும். ஆனால் ஒரு தாயாக எனது கடமையை நிறைவேற்றுவேன்.”
ரமாபாய் ரன்வீர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் பேச்சின் வேகம் மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட போராட்டத்தில் இருந்து வந்த உறுதியை வெளிப்படுத்துகின்றன.
பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் வசிக்கும் 47 வயதான இந்தத் தாயை, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் பார்த்தது.
காரணம், அவர் 3 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெறுங்காலுடன் ஓடி வெற்றி பெற்றார். ஆனால், இந்தக் கதை வெறும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதைப் பற்றியது மட்டுமல்ல. பெண் குழந்தைகளின் கல்விக்காக ஓடிய ஒரு தாயின் கதை இது.
ஆகஸ்ட் 29 அன்று, அம்பாஜோகாயில் ‘அம்ருத் தௌட் மாரத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமாபாய் ஓட்டப்பயிற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. அவரிடம் விளையாட்டு காலணிகளோ, டிராக்சூட்டோ இல்லை. அவரது ஒரே ஓட்டப்பந்தய உடை சேலையும், சாதாரண செருப்பும்தான்.
அவர் கூறுகையில், “காலையில் என் மகள் வந்து, ‘அம்மா, நான் ஓட்டப்பந்தயத்துக்குப் போக வேண்டும்’ என்றாள். ‘எங்கே?’ என்று கேட்டேன். அதற்கு, இங்கேயே போட்டி நடக்கிறது. பரிசும் கொடுக்கப் போகிறார்கள். எனக்கு நோட்டும் பேனாவும் வாங்க வேண்டும் என்றாள்”என்கிறார்.
அவர்களின் இளைய மகள் நாந்தேட்டில் படித்து வருகிறார். சில நாட்களாகவே அவர் புத்தகங்கள் வாங்க பணம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“பணம் கொடுக்க முடியாததால், அவள் என்னிடம் எட்டு நாட்கள் பேசவில்லை. அப்போதுதான் இந்த ஓட்டப்பந்தயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்தேன்.”
3 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது, அவரது செருப்பு தொடர்ந்து கழன்று கொண்டே இருந்தது. இறுதியில், செருப்பை கையில் எடுத்துக் கொண்டு காலில் எதுவும் இல்லாமல் ஓடத் தொடங்கினார்.
போட்டி முடிந்தபோது, அவர் முதல் இடத்தில் இருந்தார். அவருக்கு ரூ.3,000 பரிசாக வழங்கப்பட்டது.
“அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
ரமாபாயின் பதில் ஒரே வரியில் இருந்தது.
“புத்தகங்கள் வாங்குவதற்காக அந்த ரூ.3,000-ஐ என் மகளிடம் கொடுத்துவிட்டேன்.”
ஒரு தாயின் வாழ்வில் மற்றொரு பந்தயம்
ஆனால், ரமாபாயின் வாழ்க்கையில் உண்மையான ஓட்டப்பந்தயம் இதற்கு வெகு முன்பே தொடங்கிவிட்டது. 2012ஆம் ஆண்டு அவரது கணவர் உயிரிழந்தார்.
இரண்டு இளம் மகள்கள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தின் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்தது. அவர் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே முடித்திருந்தார். ஆனால், தனது மகள்கள் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
பட மூலாதாரம், Kiran Sakle/BBC
அவரது மகள் பூஜா ரன்வீர் கூறுகையில், “அப்பா இறந்தபோது நாங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். ஒரு பெண் மறுமணம் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், என் அம்மா அப்படிப்பட்டவர் இல்லை. எங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.”
ரமாபாய் தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்ததாகக் கூறுகிறார்.
“நான் மற்றவர்களின் வயல்களில் வேலை செய்தேன். சோயாபீன் காய்களைப் பறித்தேன். என்ன வேலை கிடைத்ததோ, அதை எல்லாம் செய்தேன்.”
இன்று, அவர் அம்பாஜோகாயில் உள்ள ஞானதீப் அகாடமியில் சமையல்காரராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக மாணவர்களுக்கு உணவு சமைத்து வருகிறார்.
அவரது மூத்த மகள் அதே அகாடமியில் காவல்துறை பணிக்கான தேர்வுக்குத் தயாராகி வருகிறார். இளைய மகள் நாந்தேட்டில் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
ஞானதீப் அகாடமியின் பேராசிரியர் தத்தா தாரடே கூறுகையில், “எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அவற்றை நம்பிக்கையுடன் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பதை அவர் மகாராஷ்டிரா முழுவதற்கும் மட்டுமல்லாமல், நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாகக் காட்டியுள்ளார்” என்றார்.
‘என் மகள்கள் என்னை போல் வாழ வேண்டிய அவசியம் இல்லை’
ரமாபாயின் கனவுகள் பெரிதானவை அல்ல; ஆனால் அவை மிகவும் தெளிவானவை.
“டாக்டர் பாபாசாகேப் உலகுக்கு நிழல் வழங்கினார். நான் அதை என் இரண்டு மகள்களுக்கும் வழங்க வேண்டும்.” அவரது பார்வையில், ‘குளிர்ந்த நிழல்’ என்பது பாதுகாப்பான வாழ்க்கையைக் குறிக்கிறது.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் ஒரே கூரையின் கீழ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சேற்றிலும், வெயிலிலும், மழையிலும் வேலைக்குச் செல்லக் கூடாது. நான் செய்வதைப் போல என் மகள்கள் செய்ய வேண்டிய நிலை வரக்கூடாது”என்கிறார்.
இந்த சொற்கள் தான் அவரது ஒட்டுமொத்த போராட்டத்தின் சாரத்தை வெளிப்படுத்துகின்றன. தன் மகள்கள் அதிகாரிகளாக வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், கூலி வேலை செய்யும் வாழ்க்கையை வாழக்கூடாது என்பது தான் அவரது ஒரே விருப்பம்.
பட மூலாதாரம், Kiran Sakle/BBC
ரமாபாய் வெறுங்காலுடன் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மகாராஷ்டிரா முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
அதன் பின்னர், அவரது போராட்டத்தையும் தேசிய ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டன. தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ் போன்ற நாளிதழ்களும் அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டன.
சுவாரஸ்யமாக, தனது போராட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருப்பதே ரமாபாய்க்குத் தெரியாமல் இருக்கலாம். அவரைப் பொறுத்தவரை முக்கியமானது என்ன? அவரது மகள்களின் கல்விக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் அவர்களின் மேற்படிப்பு.
ரமாபாயின் கதை வெளிச்சத்துக்கு வந்த பிறகு, பலரும் இதை ‘விடாமுயற்சியின் ஊக்கமளிக்கும் கதை’ என்று குறிப்பிட்டனர்.
ஆனால் எழுத்தாளரும் ஆய்வாளருமான சோமிநாத் கோல்வே இதனை வேறுவிதமாகப் பார்க்கிறார்.
“இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் இதை விடாமுயற்சியின் கதையாகப் பார்க்கலாம். பலரும் அந்தத் தாயின் போராட்டத்தைப் பாராட்டுவார்கள். ஆனால், ஏன் அவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது என்று எத்தனை பேர் சுயபரிசோதனை செய்வார்கள்?”என அவர் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Facebook/SominathGholve
கோல்வே கூற்றுப்படி, ரமாபாய் ஒரு போட்டியில் மட்டும் ஓடவில்லை; சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பு ஆகியவற்றின் பின்னணியில் தனது மகள்களின் கல்விக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
“தாயின் விடாமுயற்சியை நாம் பார்க்கிறோம்; ஆனால் மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை. இந்தச் சம்பவம் அரசாங்கம், சமூக அமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது”என அவர் கூறுகிறார்.
அவரது பதிவு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ரமாபாய் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதால் வெளிச்சத்துக்கு வந்தார். ஆனால் விவசாயத்திலும், கூலி வேலைகளிலும், அமைப்புசாரா துறையிலும் தினமும் உழைத்து, தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் தாய்மார்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு சமூகம் கவனம் செலுத்துகிறதா?
“இந்தத் தாய் தனது மகள்களின் கல்விக்காக ஓடியதால் அனைவருக்கும் அவரைப் பற்றித் தெரிந்தது. ஆனால் அவரைப் போன்ற எத்தனையோ தாய்மார்கள் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு பற்றிய கேள்வி
ரமாபாயின் கதையில் இன்னொரு கவலைக்குரிய கேள்வியும் மறைந்திருக்கிறது. தனது மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.3,000 பரிசை வெல்வதற்கு ஒரு தாய் ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டிய நிலை ஏற்படுவது வெறும் தனிப்பட்ட வறுமை சார்ந்த விஷயம்தானா?
அரசுத் திட்டங்களை அறிவிப்பது மட்டும் போதாது; அவை தேவையுள்ளவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது முக்கியம் என்கிறார் கோல்வே.
“திட்டங்களை அறிவிப்பது மட்டும் பலன்கள் கிடைத்துவிட்டதாக அர்த்தமல்ல. அவை திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும்.” இருப்பினும், இந்தக் கருத்தை ஒரு சமூக-அரசியல் நிலைப்பாடாகவே பார்க்க வேண்டும்”.
பட மூலாதாரம், KiranSakle/BBC
ரமாபாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் ஒரே ஒரு அமைப்பை மட்டுமே முழுமையான காரணமாகக் கூற முடியாது.
ஆனால் அவை கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் வறுமை குறித்து நிச்சயம் கேள்விகளை எழுப்புகின்றன.
எப்படியிருந்தாலும், ஓட்டம் இன்னும் தொடர்கிறது. ரமாபாய் ரன்வீர் வென்ற ஓட்டப்பந்தயம் மூன்று கிலோமீட்டர். ஆனால் அவரது வாழ்க்கையின் ஓட்டம் இன்னும் முடியவில்லை.
இன்றும் அவர் சமையல்காரராகப் பணியாற்றுகிறார். இன்றும் தனது மகள்களின் கல்விக்காக பணத்தைச் சேமிக்கிறார். இன்றும் ஒரு தாயாக தனது கடமை நிறைவேறும் வரை காத்திருக்க முடியாது என்ற உணர்வுடன் இருக்கிறார்.
“எனக்கு மூச்சு இருக்கும் வரை என் மகள்களுக்குக் கல்வி தர பாடுபடுவேன்”என்கிறார் ரமா பாய.
இந்த ஒரு வாக்கியமே ரமாபாயின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.
அவர் வெறும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற பெண் மட்டுமல்ல; பதக்கங்கள் எதுவுமின்றி, பாராட்டுகள் எதுவுமின்றி, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியத் தாய்மார்களின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு