
-
- எழுதியவர், மிர்சா ஏபி பெய்க்
- பதவி, பிபிசி உருது
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கேரளாவின் கடலோர நகரமான கொச்சியில், ‘யூத நகரம்’ (Jew Town) என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.
புகழ் பெற்ற போர்த்துகீசிய மாலுமியும் ஆய்வாளருமான வாஸ்கோடகாமா 500 ஆண்டுகளுக்கும் முன்பாக வந்து இறங்கிய பகுதி இது.
இந்தியாவில் முதல் ஐரோப்பியக் குடியேற்றம் உருவான இடமும் கொச்சி தான்.
அவரது இறுதி மூச்சு இங்கு தான் பிரிந்தது.
வரலாற்று ரீதியாக, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு, போர்த்துக்கீசியர்கள் யூதர்களைக் குறிவைத்ததால், கொச்சின் ராஜா தனது அரண்மனைக்கு அருகிலுள்ள நிலத்தை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
கூடவே அவர்களிடம் ஒரு செப்புப் பட்டயத்தையும் கொடுத்தார், அதில், “வானில் சூரியனும் சந்திரனும் பிரகாசிக்கும் வரை, இந்த நிலம் யூதர்களுக்குச் சொந்தமானது” என்று எழுதப்பட்டிருந்தது.
யூதர்களின் இந்தக் குடியிருப்புப் பகுதிதான் பின்னர் ‘யூத நகரம்’ என்று அறியப்பட்டது.
இன்று, அவர்களின் நினைவுகள் இந்த இடத்தில் நிலைத்திருக்கின்றன, ஆனால் கீத் ஹெலோகுவா என்ற ஒரே ஒரு யூதரைத் தவிர, மற்ற அனைத்து யூதர்களும் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
அவர்கள் எங்கே போனார்கள், ஏன் போனார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இப்பகுதியில் தற்போது பெரும்பாலான கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பதும், அவற்றுள் காஷ்மீரிகளின் கடைகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
நாம் அங்கு செல்வதற்கு முன், யூதர்கள் முதன்முதலில் எப்போது இந்தியாவிற்கு வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
பட மூலாதாரம், Pardesi Synagogue Website
சாலமன் காலத்தில் கேரள கடற்கரையை வந்தடைந்த முதல் வணிகக் குழு
கிறிஸ்து பிறப்புக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சாலமன் காலத்தில், இப்பகுதியில் யூதர்களின் முதல் குழு கடல் வழியாகத் தென்னிந்தியக் கடற்கரையில் வந்து இறங்கியது.
அக்காலத்தில், கொச்சி கடற்கரைக்குப் பதிலாக, அங்கிருந்து வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் முசிறி (முசிரிஸ் – கிரேக்க பெயர்) அல்லது கிரங்கனூர் (தற்போது கொடுங்கல்லூர்) என்ற துறைமுகம் இருந்தது.
இந்த மக்கள் வர்த்தகப் பொருட்களுடன் வந்து இப்பகுதியில் குடியேறி, இங்கு நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் அவர்கள் மலபார் யூதர்கள் என்று அறியப்பட்டனர்.
கொச்சியில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலமான பர்தேசி சினகாக் பதிவுகளின்படி, 1492ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட ஒடுக்குமுறையிலிருந்து தப்பி வந்த செபார்டி யூதர்களின் வருகையே இந்தியாவை நோக்கிய யூதர்களின் இரண்டாவது பெரிய இடம்பெயர்வாகக் கருதப்படுகிறது.
போர்ச்சுகல், துருக்கி மற்றும் பாக்தாத் வழியாகப் பயணம் செய்து அவர்கள் கேரளாவை அடைந்து கொச்சியில் குடியேறினர். இவர்கள் வெளிநாட்டு யூதர்கள் என்று அறியப்பட்டனர்.
மலபார் மற்றும் வெளிநாட்டு யூதர்கள் ஆகிய இரு பிரிவினரும் இணைந்து கொச்சின் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொச்சியில் குடியேறினர்.
இந்த இடம் முதலில் அரேபியர்களுக்கும், பின்னர் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர் மற்றும் டச்சுக்காரர்களுக்கும் ஒரு வர்த்தக மையமாக மாறியது.
கொச்சி ராஜாவால் யூதர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அப்போது முதல் இருபதாம் நூற்றாண்டில் அவர்கள் வெளியேறும் வரை அங்கு அமைதியாக வாழ்ந்தனர்.

இன்றைய யூத நகரம்
கொச்சி ஹெரிடேஜ் ப்ராஜெக்ட் என்ற அமைப்பை நடத்தி வரும் கொச்சியில் வசிக்கும் யோஹான் பின்னி குருவில்லா, இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்து கொண்டார்.
அங்குள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் சில யூதர்களை நாம் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாங்கள் அங்கு பயணம் செய்தோம், ஏனெனில் இது அவர்களின் மத விழாவான பாஸ்கா காலமாகும்.
யூதர்களின் புனித நூலின்படி, பாரோவிடமிருந்து எகிப்து விடுதலை பெற்றதை இந்த விழா நினைவூட்டுகிறது, ஆனால் இந்த விடுமுறை நாளின் காரணமாக யூத வழிபாட்டுத் தலங்களும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிகழ்விற்காக அங்கு வந்திருந்த ரபி (யூத அறிஞர் மற்றும் மதத் தலைவர்) ஜொனாதன் ஷ்மிட் கோல்ட்ஸ்மித்தை நாங்கள் சந்தித்தோம்.
அவர் எங்களை வரவேற்றது மட்டுமன்றி, அங்குள்ள யூதர்களைப் பற்றியும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதற்கான காரணங்களைப் பற்றியும் எங்களிடம் கூறினார்.
ஆனால் முதலில், நாம் யூத நகரைப் பற்றிப் பேசுவோம்.
ராஜாவின் அரண்மனைச் சுவரிலும் யூத வழிபாட்டுத் தலத்திலும் ஒரு கடிகார கோபுரம் உள்ளது, அதற்கென ஒரு தனி வரலாறு இருக்கிறது.
நாங்கள் ராஜாவின் அரண்மனையை நோக்கி நகர்ந்தபோது, யூத நகரம் பெயர்ப்பலகைக்குச் சற்று முன்பாக உள்ள ஒரு பழங்காலப் பொருட்கள் விற்கும் கடையில் ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணைக் கண்டோம்.
அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உள்ள கட்ச் என்ற வறண்ட பகுதியிலிருந்து வந்து இங்கு குடியேறியதாக அவர் விளக்கினார். அவர்களின் சமூகம் கட்ச் மேமன் சமூகம் என்று அழைக்கப்படுகிறது.
இப்போது இங்கு ஒரு சில யூதர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், இங்குள்ள கடைகளில் 70 சதவீதம் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்றும் அவர் கூறினார்.
நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதே, துணிக்கடைக்கு வெளியே காஷ்மீரைச் சேர்ந்த ஒரு நபரைக் கண்டேன்.
அவரைச் சந்தித்தது மொழித்தடையை நீக்கியது, ஏனெனில் அதுவரை கொச்சி ஹெரிடேஜ் ப்ராஜெக்ட்டின் நிறுவனரும் கொச்சியில் வசிப்பவருமான யோஹான் பின்னி குருவில்லாவிடமிருந்துதான் யூத நகரத்தின் கதையை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.
அவரைத் தவிர, பல ஆண்டு காலமாக இங்கு வசித்து வரும் பிற காஷ்மீரிகளும் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வர்த்தக சங்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
பின்னர், காஷ்மீர் வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சஜித் ஹுசைன் கட்டாயைச் சந்தித்தோம்.
இதுகுறித்துப் பேசிய அவர், “தற்போது இங்கு யூதர்கள் அரிதாகவே காணப்பட்டாலும், இங்குள்ள அனைத்துக் கட்டடங்களும் முந்நூறு முதல் நானூறு ஆண்டுகள் பழமையானவை. கட்டடங்களின் வெளிப்புறக் கட்டடக்கலை வடிவத்தையாவது மாறாமல் அப்படியே வைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் ஒரு நல்ல காரியத்தைச் செய்துள்ளது” என்றார்.
அங்குள்ள பல கட்டடங்களில் தாவீதின் நட்சத்திரம் இன்னும் முக்கியமாகக் இடம்பெற்றிருப்பதை நாங்கள் கவனித்தோம்.
ஆறு முனைகள் கொண்ட இந்த நட்சத்திரம், இஸ்ரேலியக் கொடியிலும் இடம்பெறும் யூதர்களின் புனிதச் சின்னமாகும்.
சில கட்டடங்களில் நாஜி ஜெர்மனியின் சின்னமாகவும், ஆரிய இனத்துடன் தொடர்புடையதாகவும் உள்ள சுவஸ்திகா சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இனப் பாகுபாட்டின் ஒரு வழிமுறையாக இந்தச் சின்னங்களைத் தங்களின் கதவுகள் மற்றும் சுவர்களில் யூதர்கள் வரைந்திருக்கலாம்.

மசாலா மையம்
இங்கு வாசனைப் பொருட்கள் வர்த்தகம் நடைபெற்று வந்ததாக சஜித் ஹுசைன் கட்டாய் விளக்கினார்.
யூத நகரின் ஒரு பக்கத்தில், ஒவ்வொரு கட்டடத்திற்கும் இடையே குறுகலான தெருக்களையும், மறுபக்கத்தில் கடலையும் நீங்கள் காணலாம். மக்கள் படகுகள் மூலம் இந்தப் பகுதிக்கு வாசனைப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.
ரோமானியப் பேரரசு, கிரேக்கர்கள், அரேபியர்கள் மற்றும் பின்னர் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷாரும் வாசனைப் பொருட்களுக்காக இங்கு வந்தனர்.
யோஹானின் கூற்றுப்படி, கொச்சின் ராஜா யூதர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கினார். ஏனெனில் அக்காலத்தில் சாமோரின்கள் என்று அழைக்கப்பட்ட பிற அரசர்கள்அரேபியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக இருந்தனர்.
யூத நகரைச் சேர்ந்த யூதர்கள் கப்பல்களை இயக்கியதுடன், வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தனர் என்றும் யோஹான் தெரிவித்தார்.
அவர்கள் கொச்சின் ராஜாவின் பிரதிநிதிகளாக முகலாய அரசவை உட்பட பிற அரசவைகளுக்கும் பயணம் செய்தனர்.

மிளகு ‘பரிமாற்றம்’
யூத நகரில் மிளகு வர்த்தக மையம் ஒன்று உள்ளது என்றும், அங்கு வால் ஸ்ட்ரீட்டைப் போலவே வாசனைப் பொருட்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் கொச்சி கைவினைப் பொருட்கள் சங்கத்தின் செயலாளர் ஜுனைத் சுலைமான் தெரிவித்தார்.
இது இந்திய மிளகு மற்றும் வாசனைப் பொருட்கள் வர்த்தக சங்கத்தின் (IPSTA) கீழ் இயங்குகிறது.
ஜுனைத் சுலைமான் தற்போதும் வாசனைப் பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார், மேலும் யூத வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் ‘மோச்சா கஃபே’ என்ற உணவகத்தையும் நடத்தி வருகிறார்.
2013 ஆம் ஆண்டில் இளவரசர் சார்லஸ் (தற்போது மன்னர் மூன்றாம் சார்லஸ்) மற்றும் கார்ன்வால் சீமாட்டி கமிலா ஆகியோர் யூத நகருக்கு வந்திருந்த போது, அவர்கள் யூத வழிபாட்டுத் தலத்துடன் சேர்த்துத் தனது கஃபேவிற்கும் வருகை தந்ததாக அவர் கூறினார்.
ஜுனைத் சுலைமானின் கூற்றுப்படி, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாசனைப் பொருட்கள் விவசாயிகள், குறிப்பாக மிளகு பயிரிடுபவர்கள், தங்களின் விளைபொருட்களை ஒரு குறிப்பிட்ட விலையில் இந்த வர்த்தக மையத்தில் டெபாசிட் செய்கிறார்கள்.
அவர்கள் வாசனைப் பொருட்களின் விலையில் தோராயமாக 80 சதவீதத்தை உடனடியாகப் பணமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். பின்னர், ஒரு பங்குச் சந்தையைப் போலவே, உரிமையாளரின் விருப்பப்படி அந்த வாசனைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
நல்ல மிளகைக் கண்டறிவது குறித்துக் கேட்டபோது, மிளகு மிகவும் பளபளப்பாகக் காணப்பட்டால், அதில் ஏதோ முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
“ஒன்று அதற்கு எண்ணெய் பாலிஷ் செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது அதன் எடையை அதிகரிப்பதற்காக அது தண்ணீரில் ஊற வைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, பார்ப்பதற்குப் பெரிய அளவில் கவர்ச்சியாக இல்லாத மிளகே உண்மையானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவின் மிகப் பழமையான கடிகார கோபுரம்
யூத நகரின் பன்முகப் பண்பாட்டுத் தன்மையைச் சுட்டிக்காட்டிய யோஹான், அங்குள்ள கடிகார கோபுரத்தைக் குறிப்பிட்டுக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, இது இந்தியாவில் உள்ள மிகப் பழமையான கடிகார கோபுரங்களில் ஒன்றாகும். 1760கள் மற்றும் 1770களில் கட்டப்பட்ட இது, பிரிட்டனின் புகழ்பெற்ற பிக் பென் கடிகார கோபுரத்தை விடவும் பழமையானது.
இந்தக் கடிகார கோபுரத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதன் நான்கு பக்கங்களிலும் உள்ள கடிகாரங்கள் ஆகும். நீண்ட காலமாகப் பழுதடைந்த நிலையில் இருந்த இவை, தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள கடிகாரங்கள் வெவ்வேறு மொழிகளில் உள்ள எண்களைக் காட்டுகின்றன.
யூத வழிபாட்டுத் தலத்தை நோக்கியுள்ள கடிகாரத்தில் ரோமானிய எண்களும், ராஜாவின் அரண்மனையை நோக்கியுள்ள கடிகாரத்தில் மலையாள எண்களும், யூத நகரை நோக்கியுள்ள கடிகாரத்தில் எபிரேய எண்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிகார கோபுரம் கட்டப்பட்ட போது, கடல் நோக்கிய சுவரில் அரபு எண்களும் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எண்கள் தொலைதூரத்திலிருந்து வரும் மாலுமிகளுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
இருப்பினும், தற்போது அந்தச் சுவரில் எந்த எண்களும் இல்லை.

யூத நகரில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்
யூத நகர (Jew Town) சந்தை இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்று சஜித் ஹுசைன் கட்டாய் கூறுகிறார்.
வாசனைப் பொருட்கள் கடைகளுக்குப் பதிலாகப் பழங்காலப் பொருட்கள் விற்கும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வாசனைப் பொருட்கள் சந்தை இன்னும் உள்ளது, ஆனால் அது ஃபோர்ட் கொச்சியை நோக்கிய ஸ்பைஸ் ரோட்டில் அதிகமாகக் காணப்படுகிறது,
இருப்பினும் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
நாங்கள் யூத வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் வழியில், சில இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.
அவர்களில் சிலரிடம் நாங்கள் பேசினோம்.
சமூக ஊடகங்கள் மூலம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்ததாக ரஃபா கூறினார், அதே நேரத்தில் சனா கூறுகையில், அங்கு விற்கப்படும் பொருட்கள் சற்று விலை அதிகமாக இருந்தாலும், அவை தனக்கு ஒரு நினைவுப் பொருட்கள் போன்றது என்பதால் அவற்றை வாங்கியதாகத் தெரிவித்தார்.
யூத நகரம் இரண்டு அல்லது மூன்று தெருக்களுடன் “யூ(U)” வடிவத்தில் அமைந்துள்ளது.
அதன் மூலையில் ‘காஷி ஹெலோகுவா’ கட்டடம் உள்ளது, இது 1761 இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, இப்போது இது ஓர் ஓவியக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
மட்டஞ்சேரியின் மிகப் பழமையான வணிகக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த ஜுனைத் சுலைமான் கூறுகையில், இப்பகுதி ஒரு காலத்தில் ஐரோப்பியத் தெருவைப் போல காட்சியளித்தது, இங்குள்ள அனைத்து வீடுகளும் இரண்டு மாடிகளைக் கொண்டிருந்தன என்றார்.
யூதக் குடும்பங்கள் மேல் தளங்களில் வசித்தன, கீழ் தளங்களில் அவர்களின் கடைகள் இருந்தன, சில வீடுகளின் கீழ் தளங்களில் பணியாளர்கள் அல்லது ஊழியர்கள் வசித்து வந்தனர் என்றார்.
மாலை நேரங்களில் அவர்கள் அனைவரும் தெருவில் அமர்ந்து, தேநீர் அருந்தி, சீட்டு விளையாடி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது.

‘வாக்களிக்கப்பட்ட பூமி’
யூதர்கள் இங்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தபோதும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாதபோதும், அவர்கள் ஏன் இங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
யூத வழிபாட்டுத் தலத்திற்கு வந்திருந்த ரபி ஜொனாதன் ஷ்மிட் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இங்குள்ள யூதர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள யூதர்கள், தாங்கள் ஒரு நாள் ஜெருசலேமிற்குத் திரும்புவோம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள். கடவுள் ஒரு நாள் எங்களை ‘வாக்களிக்கப்பட்ட பூமியில்’ ஒன்று சேர்ப்பார் என்று எங்களது புனித நூல்களில் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
“எனவே இஸ்ரேல் நாடு உருவான போது, இந்த தீர்க்கதரிசனத்தின் படி உலகம் முழுவதிலும் உள்ள யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்றனர். இங்குள்ள யூதர்களும் அவ்வாறே செய்தனர்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள யூதர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், ஆனால் தீர்க்கதரிசனத்தின் காரணமாகவே அவர்கள் இஸ்ரேல் நோக்கித் திரும்பினர் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஜுனைத்தின் கூற்றுப்படி, இங்குள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலுக்குச் செல்லவில்லை, மாறாக அவர்கள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றனர், அவர்களில் சிலர் இப்போதும் இங்கு வருகிறார்கள்.
அவரது கூற்றுப்படி, இங்கு வாழ்ந்த யூதர்களில் மிகச் சிலரே எபிரேய மொழியை அறிந்திருந்தனர், ஏனெனில் அவர்களின் தாய்மொழி மலையாளமாக இருந்தது, அதே நேரத்தில் அவர்களின் கல்வி மொழி ஆங்கிலமாக இருந்தது.
சூரியன் மறையும் நேரத்தில், நாங்கள் யூதர்களின் கல்லறை அமைந்துள்ள மூன்றாவது தெருவை அடைந்தோம்.
அதைப் பார்த்தபோது, இதுதான் மனிதகுலத்தின் இறுதி இலக்கு என்பதையும், “சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை இந்த நிலம் யூதர்களுக்குச் சொந்தமானது” என்று எழுதப்பட்டிருந்த ராஜாவின் செப்புப் பட்டயத்தின் வார்த்தைகள், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதர்களுக்கு எவ்வளவு அர்த்தமுள்ளவை என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு