• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

மணிப்பூரில் தொடரும் வன்முறை.. 3 பேர் உயிரிழப்பு – வீடுகள் எரிப்பு

Byadmin

Apr 25, 2026


மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையிலான வன்முறை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

நேற்று உக்ருல் மாவட்டத்தில் குகி – நாகா இனக்குழுவை சேர்ந்தவர்கள் இடையே நடைபெற்ற மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய தங்கூல் நாகா ஆண்கள் முல்லம் மற்றும் ஷோங்பால் குகி கிராமங்களைத் தாக்கியதாக ‘குகி மனித உரிமைகள் அமைப்பு’ குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இரண்டு குகி தன்னார்வலர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

கிராமவாசிகள் தற்காப்பிற்காகத் திருப்பித் தாக்கியதில், தாக்குதல் நடத்திய நாகா சமூக ஆண்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் முல்லம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ‘நாகா கிராமக் காவல் படை’ மறுத்துள்ளது.

நாகா மக்கள் வசிக்கும் சினாகெய்தே கிராமத்தின் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, குகி ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது.

இதில் 29 வயதுடைய நாகா தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ருல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய நபர்களுக்கிடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினர் தற்போது அந்தப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

By admin