பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கிரேஸ் டீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
காதலனுடன் மின்சார காரில் பயணித்துக் கொண்டிருந்த லோலா பெயர்ட், காரைச் சாலையோரமாக நிறுத்துமாறு கூறினார். பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு கடுமையான குமட்டல் ஏற்பட்டது. இறுதியில், வாந்தி எடுப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வடக்கு லண்டனைச் சேர்ந்த 24 வயதான லோலாவுக்கு, இதற்கு முன்பு ‘மோஷன் சிக்னஸ்’ எனப்படும் பயணத்தின்போது ஏற்படும் தலைச்சுற்றல் அல்லது குமட்டல் பிரச்னை இருந்ததில்லை.
ஆனால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது காதலன் மின்சார வாகனம் ஒன்றை வாங்கிய பிறகு, அவர் லோலாவை நீண்ட தூரக் கார் பயணங்களுக்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் கடுமையான குமட்டல் ஏற்படத் தொடங்கியது.
இந்தப் பிரச்னை நாளடைவில் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், அந்தக் காரை மாற்றுமாறு அவர் தனது காதலனிடம் கூறியுள்ளார்.
மின்சார வாகனத்தில் பயணிக்கும்போது குமட்டல் ஏற்படுவது லோலாவுக்கு மட்டுமே உள்ள பிரச்னை அல்ல. மின்சாரக் காரில் செல்லும்போது தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கோ கடுமையான கார் சிக்னஸ் ஏற்படுவதாக மேலும் சிலர் பிபிசி நியூஸிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பல மின்சாரக் கார் ஓட்டுநர்கள் தங்களுக்கு இதுபோன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
அப்படியானால், பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் அல்லது மயக்கத்துக்கு என்ன காரணம்?
கிங்ஸ் காலேஜ் லண்டனில் உடற்கூறியல் மற்றும் பயோமெக்கானிக்ஸ் துறையின் மூத்த விரிவுரையாளராக உள்ள டாக்டர் ஐரீன் டி ஜியுலியோ, ‘மோஷன் சிக்னஸ்’ குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
பெட்ரோல் அல்லது டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது, சிலருக்கு மின்சார வாகனங்களில் பயணிக்கும்போது அதிகளவில் குமட்டல் ஏற்படுவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறுகிறார்.
சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மெடிசின் நரம்பியல் நிபுணரான டாக்டர் நிக்கோலஸ் ஹெக்கும் தனது நோயாளிகள் சிலரிடமிருந்து இதுபோன்ற புகார்களைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
இவர் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் தொடர்பான பிரச்னைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
“மின்சார வாகனங்களில் பயணிக்கும் போது தங்களுக்கு பயணக் குமட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அதற்கு தங்கள் உடல் அதிக உணர்திறன் கொண்டிருப்பதாகவும் சிலர் உணர்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
“இதுபற்றி நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு நோயாளிகள், மின்சார வாகனங்களில் பயணிக்கும்போது தங்களுக்கு ஏற்படும் குமட்டல் குறித்து என்னிடம் தெரிவிக்கின்றனர்” என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Lola Baird
இருப்பினும், மின்சார வாகனங்களுக்கும் பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் அல்லது மயக்கத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன.
தற்போதைய நிலையில், இவ்விரண்டுக்கும் இடையே நேரடியான தொடர்பு இருப்பதாக உறுதியாகக் கூறுவதற்குப் போதுமான வலுவான அறிவியல் சான்றுகள் இல்லை என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ‘மோஷன் சிக்னஸ்’ குறித்து ஆய்வு செய்துள்ள டாக்டர் பில் யேட்ஸ், இந்தத் தலைப்பு தொடர்பான இதுவரையிலான ஆய்வுகள் “மிகவும் வரையறுக்கப்பட்டதாகவும் தெளிவற்றதாகவும்” உள்ளன என்கிறார்.
“சிலரின் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் மட்டுமே தற்போது உள்ளன. இதுவரை, இதுகுறித்து போதுமான அளவில் தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஒரு மின்சார வாகன ஓட்டுநர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது, “காரை ஓட்டுவது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால், என் மகளுக்கு அதில் பயணிக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது” என்று கூறுகிறார்.
“என் மகளுக்குத் உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது”
கடந்த ஆண்டு புதிய கார் வாங்குவது குறித்து மார்க் குவிக் பரிசீலித்தபோது, பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவு குறைவாக இருந்ததால், மின்சார வாகனம் அவருக்குச் சிறந்த தேர்வாகத் தோன்றியது.
லிங்கன்ஷையரைச் சேர்ந்த 45 வயதான மார்க், தனது புதிய மின்சாரக் காரை ஓட்டுவது “மிகவும் அற்புதமாக” இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதில் பயணிக்கும்போது தனது ஒன்பது வயது மகளுக்குப் ‘பயணக் குமட்டல்’ பிரச்னை முன்பைவிட கணிசமாக அதிகரித்திருப்பதை அவர் கவனித்தார்.
முன்பு, பள்ளி விடுமுறையின்போது பிரான்ஸுக்குச் செல்லும் சுமார் 600 மைல் நீண்ட பயணங்களின்போது மட்டுமே அவரது மகளுக்குப் பயணக் குமட்டல் ஏற்பட்டது. ஆனால், இப்போது அருகிலுள்ள நகரத்துக்குச் செல்லும் 30 நிமிடப் பயணத்தில்கூட அவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதாக மார்க் கூறுகிறார்.
சமீபத்தில், ஒரு பயணத்தின்போது அவரது மகள் வாந்தியும் எடுத்துள்ளார். இதுபோன்று இதற்கு முன்பு ஒருபோதும் நடந்ததில்லை என்று மார்க் கூறுகிறார்.
பட மூலாதாரம், Mark Quigg
‘மோஷன் சிக்னஸ்’ எனப்படும் பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் அல்லது மயக்கம், மின்சார வாகனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் ஏற்படுவதில்லை.
பல மின்சாரக் கார் உரிமையாளர்கள் பிபிசி நியூஸைத் தொடர்புகொண்டு, தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ மின்சார வாகனங்களில் பயணிக்கும்போது இதுபோன்ற எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்று தெரிவித்தனர். சிலர், பாரம்பரிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, மின்சாரக் கார்களில் பயணிக்கும்போது தங்களுக்கு குறைவாகவே பயணக் குமட்டல் ஏற்படுவதாகவும் கூறினர்.
மின்சார வாகன ஓட்டுநர்களின் அமைப்பான ‘ஈவிஏ இங்கிலாந்து’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி விக்கி எட்மண்ட்ஸ் கூறுகையில், தங்கள் உறுப்பினர்களிடையே பயணக் குமட்டல் என்பது கவலைக்குரிய பிரச்னையாக இருந்ததில்லை என்கிறார்.
“இந்தப் பிரச்னை குறித்து ஒருபோதும் பேசப்பட்டதே இல்லை” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், பிரிட்டனில் பல ஷோரூம்களைக் கொண்டுள்ள சீன மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், இந்தப் பிரச்னை குறித்து ஏற்கெனவே வெளிப்படையாகப் பேசியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கும் பயணக் குமட்டலுக்கும் தொடர்பு இருப்பதாக உணரும் மக்களிடம், “இது நியாயமான கேள்விதான்; இது உங்கள் கற்பனை அல்ல” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் பிரச்னை, “மின்சாரக் கார்கள் வடிவமைக்கப்பட்டு, பொறியியல் ரீதியாக உருவாக்கப்படும் முறையின் சில பக்கவிளைவுகளால்” ஏற்படக்கூடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரணம் என்னவாக இருக்கலாம்?
டாக்டர் ஹெக்கின் கூற்றுப்படி, பயணக் குமட்டல் ஏற்படுவதற்குக் காரணம், “நமது புலன்களிலிருந்து மூளைக்குச் செல்லும் சமிக்ஞைகளுக்கு இடையே முரண்பாடு அல்லது ஒருங்கிணைப்பின்மை ஏற்படுவதே” ஆகும்.
நாம் நகர்கிறோமா, இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள நமது உடலில் மூன்று முக்கியமான உணர்வு அமைப்புகள் செயல்படுவதாக அவர் விளக்குகிறார். கண்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள், உள்காதில் உள்ள சமநிலை அமைப்பு மற்றும் உடலின் அசைவுகளை உணரும் தசைகள் ஆகிய மூன்றிலிருந்து வரும் சமிக்ஞைகளில் ஏதேனும் ஒன்று மற்றவற்றுடன் ஒத்துப்போகாதபோது, பயணக் குமட்டல் ஏற்படக்கூடும்.
உதாரணமாக, நீங்கள் காரில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஜன்னலுக்கு வெளியே உள்ள காட்சிகளின் நகர்வை உங்கள் கண்கள் கவனிக்கவில்லை என்றால், உடலுக்குக் கிடைக்கும் சமிக்ஞைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டு குமட்டல் உணர்வு உண்டாகலாம்.
மின்சார வாகனங்களில் இந்தப் பிரச்னை சிலருக்கு ஏன் அதிகமாக ஏற்படுகிறது என்பதற்கான சில காரணங்களையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மனிதர்கள், வாகனத்தின் வேக மாற்றத்தை அதன் என்ஜின் சத்தத்துடன் தொடர்புபடுத்திப் பழகியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாக்டர் டி ஜியுலியோவின் கூற்றுப்படி, மின்சார வாகனங்களில் கார் எப்போது வேகமெடுக்கிறது என்பதைக் குறிக்கும் என்ஜின் சத்தமும் அதிர்வும் மிகவும் குறைவாக இருக்கும். இதுவும் சிலருக்குப் பயணக் குமட்டல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றொரு காரணம், ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்’ தொழில்நுட்பமாக இருக்கலாம். இதில், ஓட்டுநர் ஆக்ஸிலரேட்டரில் அழுத்தத்தை விடுவித்தவுடன், காரின் மோட்டார் ஜெனரேட்டரைப் போலச் செயல்படத் தொடங்குகிறது. இதனால் காரின் வேகம் குறைவதுடன், பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்வதற்குத் தேவையான மின்சாரமும் உருவாகிறது.
ஆக்ஸிலரேட்டரை திடீரென விடுவித்தால், கார் வேகமாகச் செல்லும் நிலையில் இருந்து திடீரென வேகம் குறையக்கூடும்.
“காரின் வேகம் திடீரென மாறும்போது, மனித உடல் முன்னும் பின்னுமாகச் சட்டென அசைவது போன்ற உணர்வு சில நொடிகளுக்கு ஏற்படலாம்,” என்று ஹெக் கூறுகிறார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 24 வயதான கரோலின் லே என்பவரும் இதேபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
நெரிசல் மிகுந்த நகரங்களில் தனது நண்பர் மின்சார காரை ஓட்டும்போது, தனக்கு “மிகக் கடுமையான” பயணக் குமட்டல் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.
ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் காரணமாக, “கார் மீண்டும் மீண்டும் திடீரென நின்றுவிடுவது போன்ற உணர்வு இடைவிடாமல் ஏற்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Carolyn Le
மின்சார வாகனங்கள், பாரம்பரிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களைவிட வேகமாக முடுக்கமடையவும், வேகத்தைக் குறைக்கவும் கூடியவை. டாக்டர் டி ஜியுலியோவின் கூற்றுப்படி, இதுவும் சிலருக்குப் பயணக் குமட்டல் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம்.
இருப்பினும், மின்சார வாகனங்களின் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றின் முடுக்கத்தை இப்போது சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுவதால், கார்கள் திடீரென அதிக வேகத்தில் முடுக்கமடைவதில்லை என்று ‘ஈவிஏ இங்கிலாந்து’ அமைப்பின் விக்கி எட்மண்ட்ஸ் கூறுகிறார்.
மின்சார வாகனங்களில் ஏற்படும் பயணக் குமட்டல், வாகனத்தின் இயக்கத்தால் மட்டும் ஏற்படாமல், ஓட்டுநரின் ஓட்டும் பாணி போன்ற “பிற காரணிகளாலும்” ஏற்படக்கூடும் என்று அந்த அமைப்பு நம்புவதாக அவர் கூறுகிறார்.
மோட்டார் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மைக் ஹாவ்ஸின் கூற்றுப்படி, மின்சார கார்களின் சில அம்சங்கள் ஆரம்பத்தில் ஓட்டுநர்களுக்கு வித்தியாசமாகவோ அல்லது அறிமுகமில்லாதவையாகவோ தோன்றக்கூடும்.
மின்சாரக் கார்கள் வித்தியாசமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதாகக் கூறும் அவர், “இருப்பினும், ஓட்டுநர்கள் வழக்கமாக இந்த அம்சங்களுக்கு விரைவாகப் பழகிவிடுகிறார்கள். பல கார் மாடல்களில் ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்’ அமைப்பைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது,” என்கிறார்.
சிலருக்கு இயல்பாகவே பயணக் குமட்டல் எளிதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
டாக்டர் ஹெக்கின் கூற்றுப்படி, இதில் மரபியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ‘பயணக் குமட்டல்’ ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம், ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவற்றில் இத்தலைப்பில் ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் ஜான் கோல்டிங் கூறுகையில், 8 முதல் 10 வயதுடைய குழந்தைகளிடையே பயணக் குமட்டல் பிரச்னை பொதுவாக அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார். அதன்பிறகு, தொடர்ச்சியான பயணம் மற்றும் அதனால் ஏற்படும் பழக்கத்தின் காரணமாக, இந்தப் பிரச்னை பொதுவாகக் குறைகிறது.
பயணக் குமட்டலைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
பட மூலாதாரம், Getty Images/Halfpoint Images
மின்சார வாகனங்களின் பிரபலமும் பயன்பாடும் அதிகரித்து வருவதால், அவற்றைத் தவிர்ப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. பிரிட்டன் போக்குவரத்துத் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மாசு உமிழ்வு இல்லாத கார்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 40.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2026 ஜூன் இறுதி நிலவரப்படி, பிரிட்டன் சாலைகளில் இயங்கும் மொத்த உரிமம் பெற்ற கார்களில் 5.8 சதவீதம் மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களாக இருந்தன. மேலும், 2030ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
லண்டனைச் சேர்ந்த 24 வயதான லுசிண்டா ஹாரிசன், தான் அடிக்கடி டாக்ஸி முன்பதிவு செய்வதாகக் கூறுகிறார். ஆனால், சில நேரங்களில் அந்த டாக்ஸி மின்சார வாகனமாக இருப்பது தெரியவரும். அப்போது, பயணம் முழுவதும் அவருக்குக் குமட்டல், வியர்வை மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மின்சார வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணமே தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில், சக ஊழியர் ஒருவரின் காரில் வெறும் ஐந்து நிமிடங்கள் பயணித்து, டியூப் ரயில் நிலையத்துக்குச் சென்றதுகூட தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகவும், அப்போது “மிகவும் மோசமாக” உணர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
பயணக் குமட்டல் பிரச்னையைக் குறைக்க, பயணிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கல்வியியல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- முன்பக்க ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள். கைப்பேசியைப் பார்ப்பது அல்லது புத்தகம் படிப்பதைத் தவிர்க்கவும்.
- முடிந்தால், பின்புற இருக்கையில் அமராமல் முன்பக்க பயணிகள் இருக்கையில் அமருங்கள். பின்புறத்தில் அமர வேண்டிய கட்டாயம் இருந்தால், நடுப்பக்க இருக்கையைத் தேர்வு செய்யுங்கள். அப்போது முன்பக்க ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடியும்.
- தலையை சாய்த்து, அசையாமல் நிலையாக வைத்திருங்கள்.
- உங்கள் இருக்கையைச் சற்று பின்புறமாகச் சாய்த்துக் கொள்ளுங்கள்.
- சுவாசிக்கும் வேகத்தை இயல்பாகவும் சீராகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
- காற்றோட்டமாக இருக்க ஜன்னலைத் திறந்து வையுங்கள்.
- தேவைப்பட்டால், பயணக் குமட்டலுக்கான மருந்தை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், அந்த மருந்தால் தூக்கம் ஏற்படக்கூடும்.
- நீண்ட பயணத்துக்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். நன்றாகத் தூங்குங்கள். அதிகமாகப் பொரித்த அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயணம் செய்வதன் மூலம், உடல் பயணக் குமட்டலுக்குப் பழகிக்கொள்ளக்கூடும் என நிபுணர்கள் மேலும் கூறுகின்றனர்.
பேராசிரியர் கோல்டிங்கின் கூற்றுப்படி, மின்சார வாகனங்களில் எவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறோமோ, அந்தப் பயண முறைக்கு உடல் அவ்வளவு அதிகமாகப் பழகிக் கொள்ளும். இதனால், பயணக் குமட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images/Cyndi Monaghan
ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் ‘மொபிலிட்டி டிசைன்’ துறையின் பேராசிரியரான சிரில் டீல்ஸ் கூறுகையில், மின்சார வாகனங்களில் ஏற்படும் பயணக் குமட்டல் பிரச்னையைக் குறைக்க கார் நிறுவனங்களும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்.
இதில், கார் திடீரென வேகமாக முடுக்கமடைவதை மென்மையாக்கும் மென்பொருள், பயணிகள் காரின் வேகத்தை உணர உதவும் ஒலி அமைப்பு மற்றும் இருக்கையில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தும் வசதி போன்றவை இடம்பெறலாம்.
கார் திடீரென வேகத்தைக் குறைப்பதைத் தடுக்கும் வகையில் செயல்படும் தகவமைப்பு ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்’ அமைப்பையும் உருவாக்கலாம்.
சில மின்சார வாகனங்களில் ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்’ அமைப்பை முடக்குவதற்கான வசதியும் உள்ளது.
பிரிட்டனில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்கும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘பீமா’ அமைப்பின் மாட் ஆடம்ஸ் கூறுகையில், “எதிர்கால ஆய்வுகள் பயணக் குமட்டலுக்கான காரணத்தைக் கண்டறிந்தால், அதற்கேற்ப வாகன உற்பத்தியாளர்கள் மாற்றங்களைச் செய்து, இந்தப் பிரச்னையைச் சிறப்பாகக் கையாள முடியும்” என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
ஆனால், லோலாவைப் பொறுத்தவரை, தற்போது மிக முக்கியமான விஷயம், தனது காதலன் அந்தக் காரை மாற்றுவதுதான்.
“அந்த நாள் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ, அவ்வளவு நல்லது,” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு