• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் விஜயய் ஏன் ஊடகங்களை சந்திக்க வேண்டும்? | அ. நிக்ஸன்

Byadmin

Jun 1, 2026


 

அமைச்சர்கள் – அதிகாரிகள் பதிலளிக்கும் நிலையில், முதலமைச்சர் ஏன் ஊடகங்களை சந்திக்க வேண்டும்?

— —- —-

*  விமர்சிப்பதற்கான- நியாயமான நாகரிக அரசியலை, திராவிடக் கட்சிகள் முதலில் கற்க வேண்டும்.

* ஊடக விளம்பரத்தை விடவும் செயற்பாடுகள் முதன்மையாக இருக்க வேண்டும்…

* அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சரின் பிரதான பொறுப்பு…

— — —

எந்தவொரு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அல்லது மாநில முதலமைச்சர்கள், மக்கள் நலத் திட்டங்களைத் தங்களுடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மூலமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு முறையும் ஊடகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

கொள்கை முடிவுகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவசரக் காலச் சூழல்களில், ஜனாதிபதி, பிரதமர் அல்லது முதலமைச்சர் நேரடியாக ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளிப்பது அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையைக் காட்டும் என்பது உண்மை தான்..

ஆனால், முதலமைச்சர் வெளியே வரும்போது அல்லது பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஊடகங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாய விதி உலகில் எங்கும் இல்லை.

அமைச்சர்கள் – அரச அதிகாரிகள் மூலம் கடமைகள் நிறைவேற்றப்பட்டாலும், அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் தார்மீகப் பொறுப்புகளுக்கும் மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு – ஆர்வம் பொது வெளியில் இருப்பது வழமையாகும.

இருப்பினும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அறிவிப்புகள், துறை சார்ந்த அமைச்சர்கள் ஊடாக  மக்களைச் சென்றடையும் போது, முதலமைச்சர் எப்போதும் ஊடகங்கள் முன்னிலையில் வரவேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஊடக விளம்பரங்களை விடவும், வழங்கிய வாக்குறுதிகளை அமைச்சரவை மற்றும் திறமையான அதிகாரிகள் மூலம் களத்தில் செயலாற்றிக் காட்டுவதே ஒரு முதலமைச்சரின் பிரதான இலக்காகும்…

அதிலும் குறிப்பாக, முதன்முறையாக ஆட்சியை பொறுப்பேற்றுள்ள விஜய், குறைந்தபட்சம் தனது வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது நிறைவேற்றும் நோக்குடன் செயலாற்றக்கூடும்.

சில நேரங்களில் ஊடகங்களின் கேள்விகள், மக்கள் நலனைக் கடந்து, அவசியமற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்கிவிடலாம்.

ஆகவே, அத்தகைய பொருத்தமற்ற விவாதங்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே, விஜய் ஊடகங்களைச் சந்திப்பதில் இருந்து தள்ளி நிற்கிறார் போலும்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கம் ஒன்றின்  செயல்பாடுகளைக் கேள்வி கேட்பதும், ஆளுங்கட்சி தனது நிர்வாகத் திறமையால் அதற்குப் பதில் கொடுப்பதும் இயல்பான அரசியல் நகர்வுகளாகும்.

குறிப்பாக தமிழ்நாட்டு சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிகள் முதலமைச்சரிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்கும் முறைமை உண்டு. வாதம் செய்யவும் முடியும்.

ஆனால், வாக்காளர்களாகிய மக்கள், ஒரு தலைவரின் பேச்சை விட, அவரது களப்பணிகளையும் திட்டங்களின் வெற்றிகளையும் வைத்தே இறுதி முடிவை எடுக்கிறார்கள்.

ஆகேவே, முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ள விஜய், தனது செயல்பாடுகளை ஆரம்பித்த சில மாதங்களிலேயே, ‘முதலமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துச் சொல்வதில்லை’ என்றும், ‘ஊடகங்களைக் கண்டால் ஓடி மறைகிறார்’ என்றும் கதைகட்டுவது, பிரதான திராவிடக் கட்சிகளின் வங்குரோத்து அரசியலையே காட்டுகிறது.

ஓ. பன்னீர்செல்வம், தற்காலிக முதலமைச்சராக இருந்த காலத்தில், அரசின் கொள்கை முடிவுகள் அல்லது அவசரக் கால அறிவிப்புகள், அதிகாரப்பூர்வ அரச செய்திக் குறிப்புகள் (Press Releases) மூலமாகவே ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டன

செய்தியாளர்களை நேரில் அழைத்து கேள்வி -பதில் முறைமையை தவிர்த்து, அமைச்சர்கள் அல்லது தலைமைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மூலமாகத் தகவல்களை வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ‘தர்மயுத்தம்’ என்ற அரசியல் நகர்வுக்குப் பின்னரே, பன்னீர்செல்வம் ஊடகங்கள் முன் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

அதற்கு முன்பு வரை, தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகக் குறைவாக ஊடகங்களை எதிர்கொண்ட அல்லது ஊடக வெளிச்சத்தை விரும்பாத ஒரு தற்காலிக முதலமைச்சராகவே பன்னீர்செல்வம் திகழ்ந்தார்.

அதாவது, முன்னைய முதலமைச்சர்கள் ஊடகங்களை எதிர்கொண்டபோது, பன்னீர்செல்வம் தனது ‘கட்டுப்பாடு – விசுவாச அரசியல்’ காரணமாக ஊடகங்களை முற்றிலும் தவிர்த்து, அமைதியான முறையில் நிர்வாகத்தை நகர்த்தியிருந்தார்…

அமரர், கருணாநிதி ஊடகங்களைச் சாதுரியத்தாலும் மொழியாலும் கையாண்டார்.

அமரர், ஜெயலலிதா ஊடகங்களைத் தனது ஆளுமையாலும் கட்டுப்பாட்டாலும் வழிநடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி ஊடகங்களை நடைமுறை யதார்த்தமாக எளிமையுடன் எதிர்கொண்டார்.

விஜய் அரசியலுக்குப் புதியவர். ஆனால் தமிழ் நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர்.

ஆகவே, அவருக்கென்று ஒரு தனி ஊடக வகிபாகம் அமையும் வரை, பழுத்த அனுபவமுள்ள திராவிடக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கொஞ்சம் அமைதி காத்தால் என்ன?

முன்னைய முதலமைச்சர்களைப் போன்று விஜய்யும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்லவே?

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 

By admin