• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

மூக்குத்தி அம்மன் 2 | திரைவிமர்சனம்

Byadmin

Nov 8, 2026


தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

நடிகர்கள் :  நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, ‘மைனா’ நந்தினி, சிங்கம் புலி,  சுனில் மற்றும் பலர்.

இயக்கம் : சுந்தர். சி

மதிப்பீடு : 2/5

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி  பெற்ற நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தை போல் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கிறார் என்பதால்… இதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அதிலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கொமர்சல் கிங்’ இயக்குநர் சுந்தர் .சி இயக்கியிருக்கிறார். இவரின் ஸ்கிரீன் மேஜிக் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஒன்பது கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது இந்த பிரபஞ்சத்தில் அதீத ஆற்றல் ஏற்படும் என்றும், அதனை தவறாக பயன்படுத்துவதற்கு ஒரு கூட்டம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த அரிய நிகழ்வை பூவுலகில் நடைபெறும் உயிர் பலிகளின் மூலமாக உணர்ந்து கொள்ளும் ஆன்மீக மற்றும் ஜோதிட நிபுணர் வை. ஜி. மகேந்திரன்- பழைய ஓலை சுவடிகளை ஆராய்ந்து அத்தகைய அரிய நிகழ்வு எப்போது…! எங்கு… ? நடக்க உள்ளது? என்பதை துல்லியமாக அவதானிக்கிறார்.

இதனை தன்னுடைய நம்பிக்கையான உதவியாளரான சுனிலிடம் சொல்ல.. சுனில் தன் குருவை கொன்றுவிட்டு, அதை பற்றி அறிந்து கொண்டு அங்கிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார். ஆனால் ஆன்மீக நிபுணரின் விசுவாசிகளால் அவர் மீது கொலை குற்றம் சாற்றப்பட்டு, சிறை செல்கிறார். சிறையில் அமைச்சரின் வாரிசான துனியா விஜய் என்பவரை சந்தித்து, விரைவில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வை பற்றி கூறுகிறார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் சாதாரண காவலராக பணியாற்றும் சக்தி( நயன்தாரா) க்கு பணியிடத்திலும் , வீட்டிற்கு சென்றால் ..வீட்டிலும் , அமானுஷ்யமான உணர்வுகளும்…. தெய்வீகத்தனம் நிறைந்த கனவுகளும் வருகிறது. இதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் அவள் அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக தன் வளர்ப்புத் தாயார் மாலா அம்மா( ஊர்வசி) விடம் கனவையும், அமானுஷ்ய நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிறார்.

ஆனால் தாயாரோ பணிச்சுமை காரணமாக இத்தகைய கனவு வருகிறது என இயல்பாக சொல்லிவிட்டு கடந்து செல்கிறார். ஆனால் ஒரு நாள் சக்தியுடன் மாலா அம்மாவும் ஒரே படுக்கையில் இரவு நேரத்தில் உறங்க… அம்மாவிற்கும் அதேபோன்ற அமானுஷ்ய அனுபவம்  ஏற்படுகிறது.

இந்த நிலையில் துர் சக்திகளின் ஆற்றல்களை சுயநலத்திற்காக பாவிக்கும் கும்பல் கும்பலைச் சேர்ந்த ஒருவர்..நிதின் சத்யா பாடசாலையில் பயிலும் மாணவியை கடத்தி நரபலி கொடுக்க முயல்கிறார். இதனை நேரில் காணும் சக்தி, அதனை தனி ஆளாக அவருக்குள் இருக்கும் தெய்வீக ஆற்றலுடன் இணைந்து போராடி அந்த பெண் பிள்ளையை மீட்கிறார்.

அத்துடன் அந்த நரபலி கும்பலின் தலைவனையும் கொன்று விடுகிறார்.  இதனால் காவல்துறை உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதுடன் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைக்கிறது. அந்தத் தருணத்தில் தன்னை தொடர்ந்து பாடாய்படுத்தி வரும் ‘மைலாஞ்சி’ எனும் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்ற அனுமதி கேட்கிறார் சக்தி.

அந்த ஊருக்கு சென்று காவல் நிலையத்தில் பணியில் சேரும் முன் இரண்டு கல்லாலான தெய்வங்களை நேரில் பார்க்கிறார் சக்தி. அவர்கள்’ நீ உதவி கேட்டால் செய்கிறோம்’ என வரத்தை அருள்கிறார்கள்.

இதே தருணத்தில் அந்த மைலாஞ்சியில் இருக்கும் ‘பேய் மலை’ எனும் பகுதியில் தீய சக்திகளின் நடமாட்டம் அதிகமாகிறது. அங்கு தீய சக்திகளின் சக்திகளான பைரா ( ரெஜினா கசாண்ட்ரா) –  நரபலி விடயத்தில் சக்தியால் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தை- தன் குருவை கொலை செய்த சுயநல சீடர் சுனில் ஆகியோர் ஒன்றிணைந்து அந்த அரிய நிகழ்வின்போது 15 நபர்களை சாத்தானுக்கு நரபலி கொடுத்து கூடுதல் சக்திகளை பெற திட்டமிடுகிறார்கள்.

இதனிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களை காக்க வேண்டிய மூக்குத்தி அம்மன் உணர்ச்சிவசப்பட்டு, கர்ப்பிணியான ஒரு பெண் உயிரிழப்பதற்கு காரணமாகி விடுகிறார்.

இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால் மைலாஞ்சி எனும் ஊரில் அமைய பெற்றுள்ள கோவிலில் இருந்து அந்த அம்மன் மறைந்து விடுகிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு மீண்டும் சக்தி எனும் பெண் ரூபத்தில் மூக்குத்தி அம்மன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அந்த நவகிரகங்களின் அபூர்வ சேர்க்கையின் போது நல்ல சக்திகள் ஒன்றிணைந்து மீண்டும் மக்களுக்கு அருள்பாளிக்கும் மூக்குத்தி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்தாரா? அல்லது தீய சக்திகள் ஒன்றிணைந்து நரபலி கொடுத்து அழியா நிலை எனும் வரத்தை பெற்றார்களா? என்பதை பரபரப்புடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

‘அரண்மனை’ படத்தின் பல பாகங்களை இயக்கி வெற்றியை சுவைத்த அனுபவம் உள்ள இயக்குநரான சுந்தர் சி – ‘மூக்குத்தி அம்மன் 2 ‘ திரைப்படத்தின் மூலம் பக்தியையும், ஆன்மீகத்தையும் கலந்து பார்வையாளர்களுக்கு அவருடைய பார்முலாவில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார்.

இதில் முதல் பாதியில் பார்வையாளர்களை அற்புதமான கிராபிக் காட்சிகளாலும்… வித்தியாசமான காட்சி அமைப்புகளாலும்… வியப்பை ஏற்படுத்தி ரசிக்க வைக்கிறார். ஆனால் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் பிளாஷ்பேக் காட்சிகள் பிரமிப்பாக இருந்தாலும் பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. அத்துடன் இரண்டாம் பாதி திரைக்கதை இப்படித்தான் பயணிக்கும் என பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடிவதால்… பிரம்மாண்டமான கிராபிக் காட்சிகள் இருந்தும் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்து செல்கிறது.

சக்தி எனும் சாதாரண பெண் காவலரிடம் தெய்வீக அம்சம் உள்ளது என்பதை அவர் உணராத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரம் சுவாரசியமானதாக இருந்தாலும்.. இறந்து போன ஒரு சடலம் திடீரென்று ‘மைலாஞ்சிக்கு போ’ என அவரிடம் சொல்வதும்… இதை அவர் கேட்பதும்… ஓவர் டோஸ்.

மைலாஞ்சியில் யோகி பாபு கதாபாத்திர அறிமுகமும், கொமடி காட்சிகளும் அக்மார்க் சுந்தர் .சி முத்திரை.

சக்தி – மூக்குத்தி அம்மன் என இரண்டு வகையினதான கதாபாத்திரங்களிலும் தோன்றி நடித்திருக்கும் நயன்தாரா மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் எக்சன் காட்சிகளில் இன்னும் சிறிதளவு வேகத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.

வில்லியாக நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா கிடைத்த நல்ல வாய்ப்பை அற்புதமாக பாவித்து தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்கிறார். அரசியல்வாதியின் வாரிசாகவும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரரான மன்னராகவும் திரையில் தோன்றும் கன்னட நடிகர் துனியா விஜய் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

துர் சக்திகளின் ஆற்றலை பாவித்து சுயநலமாக இயங்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கும் கருடா ராம்-  நிதின் சத்யா ஆகியோரும் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

இவர்களை கடந்து சினேகா – குஷ்பூ ஆகிய இருவரும் காவல் தெய்வங்களாக தோன்றி நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆன்மீக போனஸ்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சிகளும், ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு பரப்பரப்பான அனுபவத்தை வழங்குகிறது.

மூக்குத்தி அம்மன் 2 – பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் அம்மன்

The post மூக்குத்தி அம்மன் 2 | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin